பிரான்சில் நேற்று நடந்த அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டுக் கைதாகியுள்ள ஊழியரின் மனைவி, தனது கணவர் இயல்பான முஸ்லீம் என்றும், அவர் எந்தத் தவறான...

பிரான்சில் நேற்று நடந்த அதிரடித் தாக்குதலில் ஈடுபட்டுக் கைதாகியுள்ள ஊழியரின் மனைவி, தனது கணவர் இயல்பான முஸ்லீம் என்றும், அவர் எந்தத் தவறான செயலிலும் ஈடுபட்டிருக்க மாட்டார் என்றும், அவர் தீவிரவாதி அல்ல என்றும் கூறியுள்ளார். ஆனால் யாஸினி சல்ஹி என்ற அந்த 30 வயது நபர்தான், பிரெஞ்சு நிறுவனத்தின் உரிமையாளரின் தலையைத் துண்டித்ததாகவும், அவரது தலையில் அரபு வார்த்தைகளை எழுதியதாகவும், ஐஎஸ் கொடியை அங்கு நட்டு வைத்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாஸினியிடம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து அவரது மனைவியையும் போலீஸார் அழைத்துச் சென்று தங்களது பொறுப்பில் வைத்து விசாரணை செய்தனர். அப்போது தனது கணவர் தீவிரவாதி இல்லை என்று யாஸினியின் மனைவி போலீஸாரிடம் தெரிவித்தார். கைது செய்யப்பட்டுள்ள யாஸினி ஒரு டிரைவர் ஆவார். தாக்குதல் நடந்த நிறுவனம் கேஸ் பேக்டரி ஆகும். அது அமெரிக்கர் ஒருவரின் நிறுவனம். அந்த உரிமையாளரைத்தான் யாஸினி கொலை செய்து கழுத்தைத் துண்டித்து, தலையில் அரபு வாசகங்களை எழுதியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் தப்பிச் செல்ல முயன்றபோது ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொடியையும் அவர் அங்கு போட்டு வைத்தார். மேலும் கார் பார்க்கிங்கில் இருந்த காஸ் சிலிண்டர்களையும் அவர் வெடிக்க வைக்க முயற்சித்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவதமாக அது நடக்காமல் போய் விட்டது. இல்லாவிட்டால் மொத் பேக்டரியும் தரைமட்டமாகியிருக்கும். தென் கிழக்கு பிரான்ஸில் உள்ள செயின்ட் குவென்டின் நகரில் இந்த சம்பவம் நடந்தது. முதலில் இது ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் செயலாக கருதப்பட்டது. ஆனால் ஐஎஸ் அமைப்பின் மீது தீராத பற்றுக் கொண்டவரான யாஸினி செய்த செயல் என்று பின்னர் தெரிய வந்ததைத் தொடர்ந்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். இதற்கிடையே தனது கணவர் தீவிரவாதி அல்ல என்று யாஸினியின் மனைவி போலீஸ் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வழக்கம் போலத்தான் எனது கணவர் அன்றும் பணிக்குச் சென்றார். ஆனால் அவர் கொலையாளி என்று போலீஸார் கூறியபோது எனது இதயமே நின்று விட்டது. பிற்பகலில் அவர் சாப்பிட வருவார் என்று நான் நினைத்திருந்தபோது இந்த செய்தி வந்து சேர்ந்தது. அவர் இயல்பான ஒரு முஸ்லீம். தீவிரவாதி அல்ல. நாங்கள் சாதாரண குடும்பத்தினர். அவர் வேலைக்குப் போவார், திரும்பி வருவார், குடும்பத்துடன் சந்தோஷமாகவே இருந்து வந்தோம். எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நாங்கள் இயல்பானவர்கள் என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும் போலீஸார் யாஸினியைக் கைது செய்தபோது தன்னை ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் என்று கூறியதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் இவர் தீவிரவாத இயக்கத்தின் மீது அதிக பற்று கொண்டவர் என்றும், தீவிரவாத அமைப்பில் சேர முயன்று வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக அவர் 2006ம் ஆண்டு ஒருமுறை விசாரிக்கப்பட்டுள்ளார். பின்னர் 2008ம் ஆண்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இருப்பினும் அவர் மீது வேறு எந்த குற்றப் புகாரும் இல்லை என்று போலீஸார் கூறியுள்ளனர். அவருக்கு தீவிரவாத இயக்கத்தின் மீது வெறித்தனமான ஆர்வம் இருப்பது உண்மைதான். ஆனால் எந்த அமைப்பிலும் அவர் இதுவரை இருந்ததில்லை என்றும் போலீஸார் கூறுகின்றனர்.
VIDEO : Prosecutor releases details of France attack