உலகின் 3 கண்டங்களில் தீவிரவாதத் தாக்குதல்!:துனிசியா ஹோட்டல் தாக்ககுதலில் 28 பேர் பலி
உலகின் 3 கண்டங்களில் அதாவது ஆப்பிரிக்காக் கண்டத்திலுள்ள துனிசியாவிலுள்ள ஓர் ஹோட்டலிலும், மத்திய கிழக்கில் உள்ள குவைத்தில் அமைந்திருக்கும் ஓர...

உலகின் 3 கண்டங்களில் அதாவது ஆப்பிரிக்காக் கண்டத்திலுள்ள துனிசியாவிலுள்ள ஓர் ஹோட்டலிலும், மத்திய கிழக்கில் உள்ள குவைத்தில் அமைந்திருக்கும் ஓர் ஷைட்டி முஸ்லிம்களின் பள்ளிவாசலிலும் ஐரோப்பாக் கண்டத்திலுள்ள பிரான்சின் இரசாயனத் தொழிற்சாலைக்கு அண்மையில் ஜிஹாதிஸ்ட்டுக்களின் 3 தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி உலகை அதிர வைத்துள்ளன.
இதனால் நிகழ் காலத்தில் எழுச்சி பெற்று வரும் ISIS போன்ற ஜிஹாதிஸ்ட்டு அமைப்புக்களின் ஆபத்து குறித்த சர்வதேசங்களின் கவலை அதிகரித்துள்ளது. மிக மோசமான தாக்குதலாக துனிசியாவின் பிரபல சுற்றுலாத் தளமும் சௌஸ்ஸே கடற்கரையோர நகரிலுள்ள ரியு ஹோட்டல் மீது நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூடு பதியப் பட்டுள்ளது. இதன்போது 28 பேர் கொல்லப் பட்டதாகவும் 36 இற்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் ஒரு துப்பாக்கிதாரி கொல்லப் பட்டதாகவும் தெரிய வருகின்றது. துனிசியாவின் தலைநகர் துனிஸ் இலிருந்து 150 Km தொலைவில் நடைபெற்ற இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
மறுபுறம் மத்திய கிழக்கு நாடான குவைத்தின் தலைநகரில் மத்தியிலுள்ள ஷைட்டி முஸ்லிம்களின் பள்ளிவாசலுக்குள் நடத்தப் பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளனர். 25 இற்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதுடன் இதில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப் படுகின்றது. அண்மைக் காலமாக மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் ஷைட்டி முஸ்லிம்களின் மதத் தலங்கள் மற்றும் பொது இடங்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தி வரும் ISIS அமைப்பு இதற்கும் பொறுப்பேற்றுள்ளது.
3 ஆவது தீவிரவாதத் தாக்குதல் பிரான்ஸின் தென்கிழக்கே அமைந்துள்ள இரசாயனத் தொழிற்சாலை அருகே நடத்தப் பட்டுள்ளது. குறித்த கட்டடத்தைத் தகர்க்கத் தீவிரவாதிகள் முயன்றதாகவும் ஆனால் அது முறியடிக்கப் பட்டதாகவும் தெரிய வருகின்றது. இதில் ஒருவர் தலை துண்டிக்கப் பட்டுக் கொல்லப் பட்டதாகவும் இருவர் காயம் அடைந்ததாகவும் பிரான்ஸ் காவற்துறை தெரிவித்துள்ளது. ஒரே நாளில் உலகின் வெவ்வேறு 3 கண்டங்களை அதிர வைத்த இந்த 3 தாக்குதல்களுக்கும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமெரூன் உட்பட உலகத் தலைவர்கள் டுவிட்டர் மூலமாகவும் ஊடக அறிக்கைகள் வாயிலாகவும் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.