'புதிய தேர்தல் முறையினால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு'
புதிய தேர்தல் முறையில் இரட்டை அல்லது பல் அங்கத்துவ தொகுதி முறைமை நீக்கப்பட்டுள்ளமையால் சிறுபான்மையினருக்கான காப்பீடுகள் எதுவும் இல்லை என ம...


சிறுபான்மையினரின் நலன்களை பேணும் விடயங்களை புதிய தேர்தல் சட்டத்தில் உள்ளடக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
1978 ஆம் ஆண்டு அரசியல் திருத்தத்தினூடாக விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னர் இருந்த தொகுதிவாரி பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் போது நாட்டில் பல் அங்கத்துவ தேர்தல் தொகுதியும் இரட்டை அங்கத்துவ தேர்தல் தொகுதிகளும் இருந்தன.
மத்திய கொழும்பு தொகுதியானது மூன்று அங்கத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதோடு மட்டக்களப்பு தொகுதி, நுவரெலிய மஸ்கெலிய தொகுதி, பேருவளை தொகுதி, ஹரிஸ்பத்துவ உள்ளிட்ட தொகுதிகள் இரு அங்கத்துவ தொகுதிகளாக காணப்பட்டன. இத்தொகுதிகளில் பல்லின மக்கள் செறிந்து வாழ்கின்றமையினால் முன்னர் இருந்த தேர்தல் முறையின்படி பல் அங்கத்துவம் அல்லது இரட்டை அங்கத்துவ முறைமை பின்பற்றப்பட்டது.
ஆனால் தற்துபோது கொண்டு வரப்பட்டவிருப்பதாக கூறப்படும் புதிய தேர்தல் திருத்தத்தில் இந்த முறைமை இல்லாதுசெய்யப்பட்டுள்ளது. இது சிறுபான்மை மக்களுக்கு இருக்கின்ற காப்பீடுகளை இல்லாது செய்யும் செயற்பாடாகும். சிறுபான்மையினருக்கான வரப்பிரசாதங்களை தட்டிப்பறிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அத்துடன் இந்த முறை மூலம் சிறு கட்சிகள், சிறுபான்மையின கட்சிகளுக்கு அநியாயம் இழைக்கப்படுகின்றது.
கொண்டுவரப்படும் புதிய தேர்தல் முறைமை எல்லா தரப்பினருக்கும் நன்மை பயக்கக்கூடியதாக அமைய வேண்டும். அத்தோடு தேர்தல் முறைமை மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டியதற்கான முக்கிய காரணமாக விருப்பு வாக்குமுறையும் அதற்கான போட்டியுமே சுட்டிக்காட்டப்படுகின்றது.
விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அதிகளவான பணம் செலவிடப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட ரீதியிலான விகிதாசார தேர்தல் சட்டத்தின் விருப்பு வாக்கு முறைமையை நீக்கிவிட்டு தொகுதி வாரி முறையை மீண்டும் அமுலுக்கு கொண்டு வர வேண்டும் என குறிப்பிடுகினறனர். அத்துடன் பண பலம் படைத்தவர்கள் அல்லது செல்வாக்குமிக்கவர்களுக்கே அரசியல் பிரவேசத்திற்கு இம்முறைமை வழிவகுப்பதாகவும் குற்றம் சுமத்தப்பகின்றது.
விருப்பு வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அதிக பணம் செலவிடப்படுவது உண்மையே. அது நிறுத்தப்படவேண்டியதொன்றாகும். என்றாலும் அதனை மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் முறைமையை மாற்றி சிறுபான்மை மக்களுக்கு அநியாயம் செய்ய முடியாது. இது தலை வலிக்கு தலையணையை மாற்றுவது போன்றதாகும். எனவே தேர்தல் பிரசாரம் தொடர்பில் புதிய திருத்தங்கள் உள்ளடக்கப்படவேண்டும். அதில் தேர்தல் பிரசாரத்திற்கு பணம் செலவிடப்படவேண்டிய விதம் தொடர்பில் இறுக்கமான சட்டங்கள் கொண்டுவரப்படல் வேண்டும் என்றார்.