மைத்திரி - மஹிந்தவுக்கு இடையிலான அதிகார மோதலில் சிறிலங்கா சுதந்திர கட்சி இரண்டாக உடையும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. நடைபெறள்ள பொதுத...
மைத்திரி - மஹிந்தவுக்கு இடையிலான அதிகார மோதலில் சிறிலங்கா சுதந்திர கட்சி இரண்டாக உடையும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது.
நடைபெறள்ள பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாரளாக களமிறங்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடமளிக்கப்படமாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பால் மஹிந்த ஆதரவு அணி உறுப்பினர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக மஹிந்த ஆதரவு அணி உறுப்பினர்கள் வெகுவிரைவில் மஹிந்தவுடன் பேச்சு நடத்தவுள்ளன. ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூற்றை தாம் ஏற்கப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்காத பட்சத்தில், மஹிந்த தலைமையில் மூன்றாம் கூட்டணியொன்றை அமைத்து களமிறங்கும் நிலைப்பாட்டிலேயே மஹிந்த ஆதரவு அணி உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதற்கு சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவே இருக்கின்றனர்.
எனினும், டியூ குணசேகர, திஸ்ஸ வித்தாரண ஆகிய எம்.பிக்கள் மதில்மேல் பூனையாக இருக்கின்றனர். தமது ஆதரவு மைத்திரிக்கா, மஹிந்தவுக்கா என பகிரங்கமாக அறிவிக்காது மெளனம் காத்து வருகின்றனர்.
குறிப்பாக, மஹிந்த விவகாரத்தால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டாகப் பிளவுபடும் நிலை காணப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது இரண்டாக பிளவுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.