காணாமற்போன ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை
காணாமற்போயுள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். க...

http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_845.html

காணாமற்போயுள்ள ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (29) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சட்டவாட்சியைப் பாதுகாத்தமைக்காக பொதுநலவாய அமைப்பில் விருது பெற்ற இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரியவிற்கு கிடைத்த பரிசுத் தொகை, காணாமற்போன ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் குடும்பத்தாருக்கு நேற்று வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டிருந்தார்.
பொதுநலவாய அமைப்பினால் சட்டத்தரணி உபுல் ஜயசூரியவிற்கு வழங்கப்பட்ட 6,66,750 ரூபா நிதி, இதன்போது வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
ஜனவரி மாதம் 8ஆம் திகதிக்குப் பின்னர் இந்த நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். அதனை என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான கதவு திறக்கப்பட்டுள்ளது. நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கான பற்றுச்சீட்டை நாம் கொள்வனவு செய்துள்ளோம். ஒழுக்கம், சட்டம், சட்டவாதிக்கத்தின் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் அடிப்படை உரிமை ஆகியன இல்லாதொழிக்கப்பட்டிருந்தன. அதனை மீள் கட்டியெழுப்பதற்கு 24 மணித்தியாலங்கள் போதுமானதல்ல.
என குறிப்பிட்டார்.
அத்துடன், கடந்த காலங்களில் காணாமற்போன ஊடகவியலாளர்கள் தொடர்பான ஆவணங்களை மீள திறக்க புதிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் மூடி மறைக்கப்பட்ட விசாரணைகளை மீள நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், பக்கசார்பற்ற, நியாயமான விசாரணைகளை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்