வெலிஓயா சிலாவகஸ்வெவ பிரதேசங்களின் காடுகளுக்கு சொந்தமான 6000 ஏக்கர் பிரதேசம் அழிக்கப்பட்டு 6000க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்...
வெலிஓயா சிலாவகஸ்வெவ பிரதேசங்களின் காடுகளுக்கு சொந்தமான 6000 ஏக்கர் பிரதேசம் அழிக்கப்பட்டு 6000க்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டன. இதன் போது சூழலியலாளர்கள் எங்கே இருந்தார்கள். பௌத்த மத குருமார், சிங்கள ஊடகங்கள் என்ன செய்தன எனக் கேள்வியெழுப்பும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பௌத்த குருமாரை மதிக்கும் எமது பண்பை பலவீனமாகக்கருதக் கூடாது என்றும் தெரிவித்தார்.
கொழும்பு நவம் மாவத்தையிலுள்ள ஏற்றுமதி அபிவிருத்தி சபை கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில், சிலாவகஸ்வெவ வெலிஓயா பிரதேசங்களில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவின் ஆதரவுடன் இராணுவத்தினர் அங்குள்ள காடுகளை அழித்து 6000க்கும் மேற்பட்ட சிங்கள மக்களை வேறு பிரதேசங்களிலிருந்து கொண்டு வந்து குடியேற்றியது.
இதன் போது காடுகள் மீது சூழல் மீதும் அக்கறைகொண்ட சூழலியலாளர்கள் எங்கிருந்தார்கள்?
பௌத்த குருமார் என்ன செய்தார்கள்? அமைதியாக இருந்துள்ளார்கள்.
முஸ்லிம்கள் பௌத்த குருமார் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றனர்.ஆனால் முஸ்லிம்களின் அந்தப் பண்பை பலவீனமாக எங்கும் கருதக்கூடாது.வில்பத்து காடு இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களினதும் தேசிய சொத்தாகும்.முஸ்லிம்களும் இதனை பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள்.எனவே ஒரு போதும் வில்பத்து காடு அழிக்கப்படவும் இல்லை, அங்கு முஸ்லிம்கள் குடியேற்றப்படவும் இல்லை.
அவர்கள் 1990களில் பரம்பரையாக வாழ்ந்த மறிச்சுக்கட்டி, பாலக்குழி, கரடிக்குழி, போன்ற கிராமங்களில் இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தான் மீளக் குடியேற்றப்பட்டுள்ளனர்.வாக்காளர் இடாப்பை பரிசோதித்து பார்த்தால் இந்த உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.
ஆனால் இன்று பௌத்த குருமாரும் பெரும்பான்மை இன ஊடகங்களும் இணைந்து முஸ்லிம்களை காடழிக்கும், காணிகளை சூறையாடும் சமூகமாக காட்ட முயல்கின்றனர்.ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எந்த ராஜாவாக இருந்தாலும் இவ்விடயத்தில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறுவதை ஏற்றுகொள்ள மாட்டோம்.
பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டுள்ளனர் என பிரசாரம் செய்கின்றனர். இவ்வாறு பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து சிங்கள முஸ்லிம் இனக்கலவரத்தை ஏற்படுத்துவதே இனவாதச் சக்திகளின் நோக்கமாகும்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு கொட்டில்களை அமைத்துக் கொள்வதற்காக வேனும் அரசு நிதியுதவிகள் வழங்கவில்லை.எனவே தான் அரச சார்பற்ற உதவிகளை நாடினோம். கட்டார் உட்பட மத்திய கிழக்கு நாடுகளும் உதவின.இந்தியாவும் வீட்டுத் திட்டத்தை அமைத்துக் கொடுத்தது. ஆனால் அதிலும் எமது மக்களுக்கு நியாயமான முறையில் வீடுகள் கிடைக்கவில்லை.
எனவே முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக இனவாதச் சக்திகள் முன்னெடுக்கும் பிரசாரங்கள் நிறுத்தப்பட வேண்டும்.ஜனாதிபதியும் பிரதமரும் இது தொடர்பாக உண்மைத் தன்மையை பகிரங்கமாக வெளியிட வேண்டும். இதன்மூலம் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதத்திற்கு தடைபோட வேண்டும்.
தற்போது கஸ்வெவ காட்டில் முஸ்லிம்கள் குடியேற்றம் என்ற புதுக்கதை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அங்கு காடு இல்லை, பாலம் தான் இருக்கின்றது. அதில் ஓடும் தண்ணீர் கடலுக்குச் செல்கிறது.இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிராக பல கோணங்களில் இனவாதம் முன்னெடுக்கப்படுகின்றது.
அத்தோடு மறிச்சுக்கட்டி உட்பட மக்கள் வாழ்ந்த 6550 ஹெக்டேயர் நிலத்தை 2012 ஆம் ஆண்டில் வில் பத்து காடு என வரையறுத்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப் பட்டுள்ளது. எனவே இதற்கு எதிராக அங்கு வாழ்ந்த மக்கள் நீதிமன்றம் செல்ல வுள்ளனர்.
முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பொய்ப் பிரசாரங்கள் இல்லாதொழிந்து உண்மைகள் வெளி
வரட்டும் என அனைத்து முஸ்லிம் களும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பள்ளிவாசல்களில் துஆப் பிரார்த் தனை செய்ய வேண்டு மென்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.