தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள அணைக் கட்டுமானப் பகுதியில் மர்ம துப்பாக்கிதாரிகள் சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பணியாளர்கள் பலியான...

தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள அணைக் கட்டுமானப் பகுதியில் மர்ம துப்பாக்கிதாரிகள் சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பணியாளர்கள் பலியானதாகவும் அண்மைக் காலமாக போராளிகளது ஆதிக்கம் அதிகம் இல்லாத பாகிஸ்தான் பகுதி ஒன்றில் மேற்கொள்ளப் பட்ட மோசமான தாக்குதல் இதுவெனவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்மேற்கு பலுசிஸ்டான் மாகாணத்தில் உள்ள டுர்பட் மாவட்டத்தில் அமைந்துள்ள கொப்டன் பகுதியின் அணைக் கட்டுமானப் பகுதியிலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இப்பகுதியில் இஸ்லாமாபாத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் அரச படைகளுக்கும் பலூச் பிரிவினை வாத குழுக்களுக்கும் இடையே பல வருடங்களாக அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் அணைக் கட்டுமானப் பகுதி மீது மேற்கொள்ளப் பட்ட தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் குறித்த அணைக் கட்டுமாணப் பகுதியில் 8 காவலர்களை மீறி ஊழியர்களது பாசறைக்குள் நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த ஊழியர்கள் 20 பேரை சுட்டுக் கொன்று விட்டு குறித்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
மேலும் இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்ததாகவும் பலியானவர்களில் 16 பேர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தையும் 4 பேர் சிந்த் மாகாணத்தையும் சேர்ந்தவர்கள் என்றும் அரச போலிஸ் கமிசனர் பசண்ட் கான் புலெடி தெரிவித்துள்ளார். ஆனால் பலுசிஸ்டான் மாகாணத்தைச் சேர்ந்த 8 காவலர்களும் இத்தாக்குதலில் காயம் அடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு அளிக்கப் படும் என பலுசிஸ்டான் அரச பேச்சாளர் ஜான் மொஹம்மெட் புலெடி அறிவித்துள்ளார்.