முன் அனுபவம் பெறவே தேசிய அரசு! - நியாயப்படுத்துகிறார் ரணில்.
நாட்டில் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்திற்கான முன் அனுபவத்தைப்...


நாட்டில் அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்திற்கான முன் அனுபவத்தைப் பெறும் நோக்கிலேயே தற்போது தேசிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கு நேற்று அலரிமாளிகையில் வைத்து மோட்டார் சைக்கிள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது தொடர்ந்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்து தெரிவிக்கையில்,
முன்னைய ஆட்சியின் போது மஹிந்த ராஜபக்ஷ தனக்கு ஆதரவாக செயற்பட்டோருக்கே மோட்டார் சைக்கிள் வழங்கினார். ஐக்கிய தேசிய கட்சியினருக்கோ, மக்கள் விடுதலை முன்னணியினருக்கோ், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கோ இந்த சலுகை வழங்கப்படவில்லை. ஒரு தரப்பினருக்கே மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. முன்னைய அரசாங்கத்தில் உள்ளுராட்சி மன்றங்களிலும் சமத்துவம் கடைபிடிக்கப்படவில்லை. அது அரசியலமைப்பை மீறும் செயலாகும். இதுவும் நல்லாட்சியின் ஒரு அங்கமாகும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு வழக்கு தாக்கல் செய்யும் அதிகாரமும் உள்ளது.
எனினும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியினால் புறக்கணிக்கப்பட்டோருக்கே நாம் மோட்டார் சைக்கிள் வழங்க முன்வந்தோம். இதன்போது கட்சி பேதங்களை நாம் பாரக்கவில்லை. அனைவரையும் சமமாக மதிக்கும் வகையிலேயே் நாம் இந்த கடமையை முன்னெடுத்தோம். இதன்படி எதிர்காலத்திலும் கட்சி பேதங்களை மறந்து நாம் செயற்படவுள்ளோம். அத்தோடு அனைவரையும் சமமாக மதிக்கும் வகையில் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது. புதிய பராராளுமன்றத்தை கட்டமைக்கவேண்டியுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியோர் அனைவரும் அமைச்சரவையை பிரதிநிதித்துவபடுத்த வில்லை. ஒரு சில கட்சிகளே அமைச்சரவையில் இணைந்து செயற்படுகின்றன. மேலும் ஒரு சில கட்சிகள் தேசிய நிறைவேற்று சபையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இதன் போது அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்க முடியும். அவ்வாறான சுதந்திரத்தை நாம் ஏற்படுத்தியுள்ளோம்.
எனினும் நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டிற்கு எதிராக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளித்தன. இந்நிலையில் தற்போது எமது தர்க்கத்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஏற்றுகொண்டுள்ளது. இதன்படி எமது அமைச்சரவை ஜனவரியில் பதவியேற்ற வேளை, நாம் சுதந்திர கட்சியினருக்கும் அமைச்சு பதவிகளை வழங்க முன்வந்தோம். எனினும் அதற்கு அவர்கள் உடன்படவில்லை. அதற்கான முன்னேற்பாடுகளும் அவர்களிடம் இருக்கவில்லை.
எவ்வாறாயினும் தற்போது எம்முடன் ஒத்துழைப்புடன் செயற்பட முன்வந்துள்ளனர். நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற மக்களின் அபிலாஷையினை சுதந்திர கட்சியினர் ஏற்றுகொண்டுள்ளனர். இதனை நாம் வரவேற்கிறோம். 1951 ஆம் ஆண்டிற்கு பிற்பாடு ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஒன்றிணைந்துள்ளனர்.
தற்போது நாம் அரசியலமைப்பு திருத்ததை பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளோம்.மேலும் தேர்தல் முறைமையை மாற்றியமைப்பது குறித்த ஆராய வேண்டியுள்ளது. இதன்படி அரசியல் கட்சி தலைவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். இது தொடர்பில் தேசிய நிறைவேற்று சபையிலும் ஆராயவுள்ளோம்.
தற்போது நாட்டில் அனைவருக்கும் சமமான முறையில் சலுகைகளை வழங்கி முடித்துவிட்டு பாராளுமன்ற தேர்தலுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதன்படி ஏப்ரல் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்து அதன்பிற்பாடு புதிய பாராளுமன்றத்தை கட்டியெழுப்புவோம். அந்த பாராளுமன்றத்தினுடாகவும் தேசிய அரசாங்கத்தை உருவாக்குவோம். இந்நிலையில் குறித்த தேசிய அரசாங்கம் நீண்ட நாள் நீடிக்கும் . எனவே பாராளுமன்ற தேர்தலுக்கு பிற்பாடான தேசிய அரசாங்கத்திற்கான முன் அனுபவமாகவே தற்போது உருவாக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தை கருதுகிறோம்.
இதன்படி பாராளுமன்ற தேர்தலின் பிற்பாடு உருவாக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தினுடாக நாட்டில் 10 இலட்சம் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுகொடுப்போம். மேலும் நாட்டின் எல்லா பாகங்களுக்கும் அபிவிருத்தியை கொண்டு செல்வோம். நாட்டின் அனைத்து பிரதேசங்களையும், மாவட்டங்களையும் இன ,மத பேதம் பாராமல் அபிவிருத்தி செய்வோம்.
மேலும் தேர்தலின் பிற்பாடான தேசிய அரசாங்கத்தில் பாராளுமன்றத்திற்கு பூரண அதிகாரம் கிடைக்கப்பெறும் .அதனுடாக பாராளுமன்றில் 20 நிறைவேற்று குழுக்களை நிறுவுவோம். அத்தோடு உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு சமமான அந்தஸ்தை பெற்றுக்கொடுத்து , மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய ஆட்சியை உருவாக்குவோம். எனவே நல்லாட்சியின் பயணத்தை தொடர்வோம் என்றார்.