இந்தியாவை வீழ்த்தியது ஆஸி.
உலக கோப்பை அரையிறுதி போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில், இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா. 11–வது உலக கோப்ப...


11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகின்றது. முதலாவது அரைஇறுதியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
சிட்னியில் இன்று 2–வது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின.இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்களை எடுத்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு 329 ரன்கள் என்ற கடுமையான இலக்கை ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது.
இந்தியாவின் சுழல்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் முதலில் நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய இந்தியா, 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்திருந்தது. தவானின் அதிரடியால் ஸ்கோர் சற்று வேகம் பிடிக்க ஆரம்பித்த நேரத்தில், 12.5வது ஓவரில் ஹசில்வுட் பந்தில், பவுண்டரி எல்லையில் நின்ற மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் தவான். அப்போது இந்தியாவின் ஸ்கோர் 76 ரன்களாக இருந்தது. இதன்பிறகு ரோகித்துடன், கோலி ஜோடி சேர்ந்தார். ஆனால் இந்த ஜோடி நீடித்து நிற்கவில்லை. ஜான்சனின் பவுன்சரில் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து, கோஹ்லி 1 ரன்னில் அவுட் ஆனார்.
ஆனால், அவர் 13 பந்துகளை சந்தித்து தடுமாறியபிறகு விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் மைதானத்திலுள்ள ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்தியா 91 ரன்கள் எடுத்திருந்தபோது, ரோகித் ஷர்மா 34 ரன்களில் அவுட் ஆனார். அணியின் ஸ்கோர் 108 ரன்களாக இருந்தபோது, 7 ரன்களில் ரெய்னா வெளியேறினார்.
இதையடுத்து டோனி, ரஹானே அணியை சரிவில் இருந்து மீட்க தொடங்கினர். இருவரும் இணைந்து பார்ட்னர்ஷிப்பில் 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஸ்டார்க் பந்தில் ஹேடினிடம் கேட்ச் கொடுத்து 44 ரன்களில் அவுட் ஆனார் ரஹானே. ஸ்கோர் 208ஆக இருந்தபோது, ஜடேஜாவும், 231ஆக இருந்தபோது டோணியும், ரன் அவுட் ஆனார்கள்.
இந்திய தரப்பில் டோணிதான் அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். இதன் பிறகு வந்த வீரர்கள் சரியாக விளையாடததால் இந்திய அணி 46.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் மட்டுமே எடுத்து 95 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா வரும் ஞாயிறன்று நியூசிலாந்தை இறுதிப் போட்டியில் சந்திக்கிறது.