ஏமனில் இரவு நேர தாக்குதல்: அச்சத்தில் வெளியேறும் மக்கள்
ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு எதிராக சவுதி அரேபிய தாக்குதலால் ஏமனில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இரவு நேரத்தில் 3 ராணுவ விமானங்கள் குண்டு வ...


இரவு நேரத்தில் 3 ராணுவ விமானங்கள் குண்டு வீசி அதிகாலை அளவில் தாக்குதலை நிறுத்திக்கொண்டதாக சனாவில் வாழும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் வான்வழித் தாக்குதல் நடத்திய போர் விமானங்கள் சவுதியைச் சேர்ந்ததா அல்லது ஷியா பிரிவின் ஹவுத்தி படையினருடையதா என்று தெரியாத நிலை உள்ளது. முதல் நாள் தாக்குதலில் பலியானதாக அறிவிக்கப்பட்ட 39 பொதுமக்களில் 6 பேர் குழந்தைகள் என்று அம்னெஸ்டி தெரிவித்துள்ளது.
அல்-சமா ராணுவ தளத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.
ஷியாப் பிரிவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான ராணுவத்தினர் ஏமன் அருகே உள்ள ஷாக்ரா துறைமுகத்தை தங்கள் வசம் வைத்திருப்பதாக பொதுமக்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
அதிபர் அரண்மனை மற்றும் துறைமுக நகரான ஏடன் மற்றும் ஷாக்ராவை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில் அந்தப் பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடந்திருக்கிறது.
வெளியேறும் மக்கள்
ஏடனில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்து பொதுமக்கள் வெளியேறுகின்றனர். வெள்ளிக்கிழமை காலை முதல் நடந்த இரண்டாம் கட்ட தாக்குதலால் அச்சமடைந்த மக்கள் தங்களது வீடுகளை காலி செய்து பாதுகாப்பான பகுதிகளை நோக்கிச் செல்கின்றனர்.
ஹவுத்திக்கு ஆதரவு, சவுதிக்கு எதிர்ப்பு: ஈரான்
ஹவுத்தி ராணுவத்தின் மீது நடத்தப்படும் விமானத் தாக்குதல்கள் மற்றும் படையெடுப்பு நடவடிக்கை ஏமனின் வருங்கால நிலைமையை மோசமானதாக்கும் என்று ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.
அதே சமயம். சவுதி அரேபியா நடத்தும் போருக்கு உதவ எகிப்து போர் கப்பல்கள் ஏடனுக்கு விரைந்துள்ளது.
முன்னதாக சில மாதங்களுக்கு முன்னர் தலைநகர் சனாவை, ஹவுத்தி கிளர்ச்சிப் படை கைப்பற்றியது. அதிபர் மன்சூர் ஹதி துறைமுக நகரான ஏடனுக்கு தப்பிச் சென்று அந்த நகரை ஏமனின் தலைநகராக அறிவித்தார். கடந்த வாரம் ஏடன் மீதும் ஹவுத்தி கிளர்ச்சிப் படை தாக்குதலை தொடங்கியது.
கிளர்ச்சிப் படை முன்னேறி வரும் நிலையில் அதிபர் மன்சூர் ஹதியும் அங்கிருந்து வெளியேறினார்.
தொடர்ந்து ஏமனுக்கு அருகில் சன்னி முஸ்லிம்கள் ஆதிக்கம் நிறைந்த சவுதி அரேபியா, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் அமைந்துள்ளன. அந்த நாடுகளின் தலைவர்கள் சன்னி பிரிவைச் சேர்ந்த ஏமன் அதிபர் மன்சூர் ஹதியை ஆதரித்து வருகின்றனர்.
அதேநேரம் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஈரான் ஆதரவு அளித்து வருகிறது.
இந்தப் பின்னணியில் அதிபர் மன்சூர் ஹதியின் வேண்டுகோளை ஏற்று ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு எதிராக சவுதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் ஏமனுக்கு எதிரான தாக்குதலை நடத்துவது குறிப்பிடத்தக்கது.