ஆடம்பரமான புதிய தலைநகரை நிர்மாணிக்க எகிப்து திட்டம்
இனிமேல் நீங்கள் எகிப்தின் அடையாளமான பிரமிட்டுக்கள், டஹ்ரிர் சதுக்கம் மற்றும் நைல் நதி ஆகிய அனைத்தையும் மறந்து வி...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_761.html
இனிமேல் நீங்கள் எகிப்தின் அடையாளமான பிரமிட்டுக்கள், டஹ்ரிர் சதுக்கம் மற்றும் நைல் நதி ஆகிய அனைத்தையும் மறந்து விடலாம்! ஏனெனில் எகிப்து அரசானது கெய்ரோவைக் கை விட்டு ஆடம்பரமான புதிய தலைநகரை நிர்மாணிக்கத் தீர்மானித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக கெய்ரோவில் கட்டுப்பாட்டை மீறி வரும் சிக்கல்களைக் கூறுகின்றனர்.
இச்சிக்கல்களில் சூழல் மாசடைவு, வாகன நெருக்கடி, நெரிசலான சனத்தொகை, மிக அதிகளவு வீட்டு வாடகைகள் மட்டுமன்றி மிகுந்த சத்தத்துடன் ஒழுங்கற்றுக் காணப் படும் உட்கட்டமைப்புக்கள் என்பவை கூறப்படுகின்றன. இதனையடுத்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) நகரக் கட்டமைப்பு நிறுவனம் ஒன்றுடன் கைகோர்த்துள்ள எகிப்து உலகின் மிகச் சிறப்பான உட்கட்டமைப்பு திட்டங்களுடன் கூடிய புதிய தலைநகரை அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இன்னமும் பெயரிடப் படாத இப்புதிய தலைநகரமானது 150 சதுர மைல் பரப்பளவில் அமெரிக்காவின் டென்வெர் நகரத்துக்கு இணையாக அமைக்கப் படவுள்ளதாகவும் இந்நகரம் சுமார் 7 மில்லியன் மக்களுக்கு இல்லமாக இருக்கும் என்றும் எகிப்து அரசும் அபிவிருத்தியாளர்களும் அறிவித்துள்ளனர்.
தற்போது 18 மில்லியன் மக்களுக்கு இல்லமாக இருந்து வரும் கெய்ரோவின் சனத்தொகை அடுத்த சில தசாப்தங்களுக்குள் இரட்டிப்பாகும் என்ற கணிப்பு இருப்பதால் கெய்ரோவின் சன நெருக்கடியைக் குறைப்பதற்காகவே இப்புதிய தலைநகரத் திட்டம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. புதிய தலைநகரம் அமையவுள்ள சரியான இடம் இன்னமும் தெளிவாகத் தெரியாத நிலையில் இது பெரும்பாலும் கெய்ரோவுக்குக் கிழக்கே செங்கடலுக்கு அண்மையில் அமையலாம் என்று ஊகிக்கப் படுகின்றது. இப்புது நகரத்தின் இலக்குகள் மிகப் பெரியதாகும். இங்கு புதிய வெளிநாட்டுத் தூதரகங்கள், அரச கட்டடங்கள் மட்டுமன்றி ஹீத்ரோ விமான நிலையத்தை விட மிகப் பெரிய சர்வதேச விமான நிலையமும், சூரிய சக்தி பண்ணைகளும், 40 000 ஹோட்டெல் அறைகளும், குறைந்தது 2000 பாடசாலைகளும் 18 வைத்திய சாலைகளும் சுமார் 6000 மைல் நீளமான புதிய சாலைகளும் அமைக்கப் படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்துக்கான மொத்த செலவு சுமார் $45 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கணிக்கப் பட்டுள்ளது.
இதற்கு முன் எற்கனவே தமது தலைநகரங்களை மாற்றிய நாடுகளில் சமீபத்தில் மியான்மார் யங்கூனில் இருந்து தனது தலைநகரை புதிய நகரான நைபையிடாவுக்கும் 1990 இல் நைஜிரியா அபுஜாவுக்கும் 50 வருடங்களுக்கு முன் பிரேசில் பிரேசிலியாவுக்கும் இடம் மாற்றியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் 2013 இல் எகிப்து அதிபர் மொஹம்மட் மோர்சி பதவி இறக்கப் பட்டதன் பின்னர் ஏற்பட்ட பதற்றத்தை எதிர்கொள்வதற்காக எகிப்து இராணுவத்துக்கு நிதியுதவி அளிக்க அமெரிக்கா முன் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அண்மையில் எகிப்தில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டு மாநாட்டில் 4 அரபு தேசங்கள் எகிப்தின் பொருளாதார முன்னேற்றத்துக்காக $12 பில்லியன் டாலர்கள் வழங்குவதாக அறிவித்ததை அடுத்து அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் கெர்ரி இவ்வறிவிப்பை விடுத்துள்ளார். இத்தொகை குறைந்தது $650 மில்லியன் டாலர்கள் இருக்கலாம் எனத் தெரிய வருகின்றது.
அமெரிக்கா இராணுவ உதவிக்காக $1.3 பில்லியன் டாலர் உட்பட சுமார் $1.5 பில்லியன் டாலர்கள் நிதியுதவியை வருடாந்தம் எகிப்துக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.