இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நீதிமன்றம் சம்மன்
இந்தியாவில் நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு இருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_660.html
இந்தியாவில் நிலக்கரிச் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு இருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தில்லி நீதிமன்றம் ஒன்று சம்மன் அனுப்பியுள்ளது.

மன்மோகன் சிங் மீது கிரிமினல் சதி செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, அவர் ஏப்ரல் 8ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கூறப்பட்டுள்ளது.
நிலக்கரிச் சுரங்கங்களை குறைவான விலைக்கு ஏலம் விட்டதால், இந்தியாவுக்கு 20 பில்லியன் பவுண்டுகள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக இந்தியாவின் தலைமைத் தணிக்கைத் துறை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் 1993ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்ட எல்லா நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளையும் ரத்துசெய்யும்படி உத்தரவிட்டது.
2005ஆம் ஆண்டில் ஒரிசாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்திற்கான உரிமத்தை ஆதித்ய பிர்லா குழுமத்திற்குச் சொந்தமான ஹிண்டால்கோ நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்தது தொடர்பாக மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங், நிலக்கரித் துறையையும் கையில் வைத்திருந்தார்.
ஹிண்டால்கோ நிறுவனத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, அப்போது நிலக்கரித் துறைச் செயலராக இருந்த பிசி பாரேக் ஆகியோருக்கும் தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்மன் குறித்து ஹிண்டால்கோ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. "நாங்கள் மிகுந்த நேர்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் நடந்துகொண்டிருக்கிறோம். இந்த சட்ட நடவடிக்கையின் முடிவில் நாங்கள் செய்தது சரியானதென்று நிரூபிக்கப்படும்" என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டின் இந்தியத் தணிக்கைக் குழுவின் அறிக்கையில், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடுகளின் மூலம் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் பெரும் லாபம் அடைந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.
போட்டி முறையில் ஏலம் விடாமல், காங்கிரஸ் அரசு நாட்டைச் சூறையாடுவதாக அப்போது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
மன்மோகன் சிங் தலைமையிலான அரசு 2004 முதல் 2014ஆம் ஆண்டுவரை இந்தியாவில் ஆட்சியில் இருந்தது.


Sri Lanka Rupee Exchange Rate