எமது ஆட்சிக் காலத்தில் காணிப் பிரச்சனை தீரும்': மைத்திரி
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருப்பதை அறிந்திருப்பதாகவும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் புதிய அரசாங்கத்தின் ...


தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே தமிழ் மக்கள் தமக்கு வாக்களித்திருக்கின்றார்கள் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த மக்களின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான காணிப் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்திருக்கின்றார்.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் வளலாய் பகுதியில் உள்ள 424 ஏக்கர் பரப்புள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களான பொதுமக்களுககுக் கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
'காணிப் பிரச்சனை என்பது இங்கு மட்டுமல்ல. எல்லா இடங்களிலும் இந்தப் பிரச்சினை இருக்கின்றது. காணிப் பிரச்சனை காரணமாக பல நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பிரச்சனைகள் ஏற்பட்டு ஆட்சிகள் மாறியிருக்கின்றன' என்றார் ஜனாதிபதி.
'வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மட்டுமல்லாமல் நாட்டின் தெற்கு பகுதிகளிலும் இந்தப் பிரச்சனை இருக்கின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு- கிழக்குப் பிரதேச மக்களின் காணி பிரச்சனைகள் முன்னுரிமை அடிப்படையில் தீர்த்து வைக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும்' என்றும் அவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
'காணிப் பிரச்சனை என்பது புரையோடிப் போயுள்ள பிரச்சனை. அதற்குத் தீர்வு காண்பதற்கு கால அவகாசம் தேவை' என்றும் ஜனாதிபதி கூறினார்.
'நல்ல நிலையில் இருந்த ஆலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன': சி.வி.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை உரியவர்களிடம் கையளிப்பதுடன் அரசு நின்றுவிடாது என்றும், அந்தப் பகுதியில் அழிவுக்கு உள்ளான ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்புகளையும் புதிதாக நிர்மாணிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கைளை எடுக்கும் என்றும் இலங்கை ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள, பொதுமக்களுக்கு சொந்தமான 1000 ஏக்கர் பரப்புள்ள காணியை விடுவிப்பதாக அரசாங்கம் கூறியதன் பின்னர், நல்ல நிலையில் இருந்த ஆலயங்கள் உள்ளிட்ட பொதுக் கட்டடங்கள் இடித்து அழிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
விடுவிப்பதாக உத்தேசிக்கப்பட்ட பகுதிகளை பொதுமக்கள் பார்வையிட்டதன் பின்னர் கடந்த சில தினங்களில் அவர்களின் முக்கிய போக்குவரத்துக்குரிய வீதி இராணுவத்தினரால் முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு தடுக்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஈபிடிபி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரச உயர் அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.