நாங்கள் அகதிகளாகவே சாவதா? - மாவையிடம் கேள்வி எழுப்பிய மயிலிட்டி மக்கள்.
உயர்பாதுகாப்பு வலையமாக இருந்த வளலாய் பகுதி விடுவிக்கப்பட்டு விட்டது. எங்கள் நிலங்கள் விடுவிப்பது எப்போது என மயிலிட்டி மக்கள் தமிழ் தேசிய...

![]()
உயர்பாதுகாப்பு வலையமாக இருந்த வளலாய் பகுதி விடுவிக்கப்பட்டு விட்டது. எங்கள் நிலங்கள் விடுவிப்பது எப்போது என மயிலிட்டி மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட வளலாய் மக்களை 25 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அவர்களது சொந்த நிலங்களில் மீள்குடியமர்வதற்காக விடுவிக்கப்பட்டுள்ளது.
|
தற்போது அப்பகுதி மக்கள் தங்களது காணி ஏல்லைகளைத் தேடுவதிலும் , காணிகளைத் துப்புரவு செய்வதிலும் முனைப்புக்காட்டி வருகின்றனர். இந்தநிலையில், மயிலிட்டி மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, ஈ.சரவணபவன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பு பருத்தித்துறைலுள்ள மயிலிட்டி கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது , அடுத்த கட்டமாவது நாங்கள் மீள்குடியமர்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா ?, நாம் 25 வருடங்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பதுடன் பல வகையிலும் துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றோம் என்று மக்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்திருந்தனர். மேலும் எங்களை எங்களது சொந்த நிலத்தில் குடியமர்த்துவார்களா ? அல்லது நாங்கள் அகதியாகவே இன்னொரு மண்ணில் சாவதா ? என்றும் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பலாலியில் ஒரு பகுதியையும் மயிலிட்டியில் ஒரு பகுதியையும் நிரந்தரமாக விடுவிக்காமல் வைத்திருப்பதற்கு அரசு முயற்சித்து வருகின்றது. அவ்வாறான நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது. மீள்குடியமர்வு தொடர்பான நடவடிக்கைகள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இவ்வாறாக விடயங்கள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதியுடன் சந்தித்துப் பேசவுள்ளோம். விடுவிக்கப்படாது இருக்கின்ற மக்களுக்குச் சொந்தமான மிகுதி நிலங்களையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வோம். சிறிது காலம் பொறுமையுடன் இருங்கள் என மக்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.
இதன்போது விடுவிக்கப்பட்ட வளலாய்ப் பிரதேசத்திற்கும் நேரடியாக விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்குள்ள நிலமைகளை நேரில் அவதானித்ததுடன் அவர்களது குறைகளையும் கேட்டறிந்து கொண்டனர். மேலும் மீள்குடியேற்றத்திற்கான நடவடிக்கைகளை உரிய அதிகாரிகளுடன் பேசி மேற்கொள்வதாகவும் மக்களிடம் உறுதியளித்திருந்தனர். இதன்போது வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் உறுப்பினர் குலநாயகம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
|