தேர்தல் காலங்களில் மாத்திரம் தமிழருக்கு வழங்கும் வாக்குறுதிகள்

நல்லாட்சி என்ற மகுடத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசில் தற்போது தோன்றியிருக்கும் நிலைமைகள் ஒருபுறம் கவலையையும் மறுபுறம் மீண்டும் வே...

நல்லாட்சி என்ற மகுடத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசில் தற்போது தோன்றியிருக்கும் நிலைமைகள் ஒருபுறம் கவலையையும் மறுபுறம் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய நிலைமையையும் உருவாக்கி விடுமோ என்ற ஐயப்பாட்டையும் தோற்றுவித்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 30ஆக வரையறுக்கப்பட்டிருக்கும் என்றே கூறப்பட்டது. ஆனால், இன்றைய சூழல், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் என 77பேர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். எதிர்காலத்தில் இத்தொகை 100ஆக அதிகரிக்கலாம் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய அரசு தனது நூறு நாள் நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்தவும், பாராளுமன்றத்தில் தனது நிலையை உறுதிசெய்யவும் தேசிய அரசாங்கமொன்றை அமைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

அந்த வகையில் பதவிகளை வழங்கி அதன் மூலம் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை இணைத்துக் கொள்ளும் ஒரே மார்க்கமே அரசுக்கு காணப்பட்டது.

இதன் பின்னணியில், சுதந்திரக் கட்சியை சேர்ந்த 11 எம்.பிக்கள் அமைச்சரவை அமைச்சர்களாகவும் ஐந்து எம்.பிக்கள் இராஜாங்க அமைச்சர்களாகவும் 10 எம்.பிக்கள் பிரதியமைச்சர்களாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கடந்த ஞாயிறன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

தற்போது, ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திர கட்சி இணைந்த தேசிய அரசு உதயமானது. இது நல்லாட்சிக்காக உழைத்த பலருக்கு மிகுந்த அதிருப்தியையும் கவலையும் தோற்றுவித்துள்ளது.

கடந்த காலத்தில் ஊழல், இலஞ்சம் என்பவற்றுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிப் புதிய அரசை பதவியில் அமர்த்தினோம். ஆனால் அதற்கு காரண கர்த்ததாவாக இருந்த பலர் தற்போது தேசிய அரசு என்ற பெயரில் புதிய அரசுக்குள் புகுந்து ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.

இந்த நிலையில் நல்லாட்சி எங்கே நலிவடைந்து விடுமோ என்று அவர்கள் தலையில் கை வைக்கின்றனர்.

நல்லாட்சியை விரும்பிய பலருக்கு தற்போதைய போக்கு மிகுந்த எரிச்சலையூட்டியுள்ளமை ஜனாதிபதிக்குத் தெரியாத ஒன்றல்ல

இந்நிலையில் துறைமுக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதமொன்றில் ஊழல் நிறைந்த, தராதரமற்றவர்களை எதிர்வரும் தேர்தலில் வேட்பாளர்களாக களமிறக்க கூடாது என்றும், அவர்களுக்கு ஒருபோதும் வேட்புமனு வழங்க வேண்டாம் என்றும், ஆக்கபூர்வமான அரசாங்கத்தை அமைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, தேசிய அரசொன்றை இருகட்சிகளும் அமைத்திருந்த போதிலும் தங்கள் கட்சிகளுக்கும், ஜனாதிபதிக்கும் இதய சுத்தியுடனும், உண்மையான விசுவாசத்துடனும் இருக்கிறார்களா என்பது அடுத்து எழும் கேள்வியாகும்.

அதற்குப் பிரதான காரணம் சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முழுமையாக அரசுடன் சேரவில்லை என்பதும் வேறு மார்க்கமின்றி இரண்டும் கெட்ட நிலையில் இருப்பதுமேயாகும்.

இதனிடையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு திரட்டி வரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாற்றுக் குழுவினரால் இரத்தினபுரியில் கடந்த வியாழனன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் கட்டுப்பாடுகளையும் மீறிக் கலந்து கொண்டுள்ளனர். அதிலும் அமைச்சர்கள் நால்வர் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதனிடையே சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்த பக்கம் உள்ளார்கள் என்பது அடுத்து எழும் கேள்வியாகும். போகும் போக்கில் சுதந்திரக் கட்சி துண்டுத்துண்டாக சிதறும் வாய்ப்புகளும் இருப்பதாக பேசப்படுகின்றது.

இவ்வாறான போக்குகளுக்கு மத்தியில், எதிர்வரும் தேர்தலைத் தொடர்ந்து அமையப்போகும் அரசாங்கமே ஸ்திரமான அரசாக அமையும் வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தவிதமான நகர்வுகளுக்கு மத்தியில் தமிழ் பேசும் மக்களின் தலைவிதி என்ன என்ற கேள்வி அடுத்து எழும் ஒன்றாகும்.

இந்த நாட்டின் அரசியல் போக்கை முற்றாக மாற்றியமைத்தவர்கள் என்பதும் புதிய ஆட்சிக்கு ஊன்றுகோலாக செயற்பட்டவர்கள் என்பதும் தமிழ் பேசும் சிறுபான்மை சமூகத்தையே சார்ந்ததாகும்.

எனினும் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க புதிய அரசு ஆக்கபூர்வமான வழியில் செயற்படுகின்றதா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

அண்மையில் தமிழ் மொழியில் தேசியகீதம் பாடுவது தொடர்பான சர்ச்சை பாராளுமன்றதுக்கு உள்ளேயும் வெளியேயும் எதிரொலித்தது. இதன்போது இனவாதிகள் அதனை கடுமையாக எதிர்த்ததுடன், தேசிய கீதம் தமிழில் பாடக்கூடாது என்று போர்க்கொடி தூக்கினார்கள்.

எனினும், ஜனாதிபதியும் பிரதமரும் தேசிய கீதத்தை அரசியலமைப்பு விதிகளுக்கு ஏற்ப தமிழிலும் பாடலாம் என்று கூறி இனவாதிகளை வாயடைக்கச் செய்ததோடு அந்த விவகாரம் தற்பொழுது முடிவுக்கு வந்துள்ளது.

எவ்வாறெனினும் வடக்கு, கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் மக்களின் காணிகள் படையினரால் கபளீகரம் செய்யப்பட்ட விவகாரம், காணாமல் போனோர் விவகாரம் மற்றும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் என்பன தமிழ் மக்களைத் தொடர்ந்தும் கண்ணீர் சிந்தவே வைத்துள்ளன.

இது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் துரிதமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே தமிழ் பேசும் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மீண்டும் தமிழ் பேசும் மக்களின் ஆதரவு தேசியக் கட்சிகளுக்கு அவசியமானது என்பதை அரசியல் தலைமைத்துவங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

தமிழ் பேசும் மக்களைப் புறந்தள்ளிச் செயற்படலாம் என்ற கடந்த ஆட்சியாளர்களின் போக்குகளே இறுதியில் அவர்களை ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளச் செய்தது என்ற யதார்த்தத்தையும் இன்றைய ஆட்சியாளர்கள் மறந்துபோகக் கூடாது.

அதேவேளை, தேர்தல் காலங்களில் மாத்திரம் தமிழ் மக்களுக்கு வெறுமனே பல்வேறு வாக்குறுதிகள் அளிப்பதும் பின்னர் அவற்றை கைவிடுவதுமான நிலைமைகள் இனிமேலாவது கைவிடப்படவேண்டும் என்பதை மிகுந்த நிதானத்துடன் எடுத்துக் கூற விரும்புகின்றோம்

Related

இலங்கை 4557570187397922389

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item