மஹிந்தவுக்கும் தனக்கும் ஆயுள் முழுவதும் புலிகளின் அச்சுறுத்தல் தொடருமாம்! - என்கிறார் கோத்தபாய
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் பதவியில் நானே அனைத்துத் தீர்மானங்களையும் எடுத்தேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாள...

![]()
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் பதவியில் நானே அனைத்துத் தீர்மானங்களையும் எடுத்தேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் போராளிகள் முழுமையாக அவர்களது சிந்தனையிலிருந்து விடுபட்டனரா என்பது தொடர்பில் இன்னும் எனக்குச் சந்தேகம் நிலவுகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
|
நேற்றிரவு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேரடி ஒளிபரப்புச் செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நான் பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த காலப்பகுதியில் நேர்மையான முறையிலேயே எனது சேவையை முன்னெடுத்தேன். நான் எந்தவொரு ஊழல் மோசடிகளிலும் ஈடுபடவில்லை. எனவே தற்போது என்மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நான் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. இதுகுறித்து நீதியான விசாரணை நடத்தப்பட்டால் உண்மை வெளிவரும். எனினும் தற்போது என்னுடைய நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இலக்குடனேயே போலியான குற்றச்சாட்டுக்களை என்மீது சுமத்துகின்றனர். நீதியான விசாரணையின் பிற்பாடு என்னை கைது செய்தால் நான் சிறைவாசம் செல்லவும் தயாராகவுள்ளேன்.
முப்பது வருடகாலமாக இடம்பெற்ற யுத்தத்தின்போது எனக்கு அச்சுறுத்தல் இருந்தமையை எவராலும் மறுக்க முடியாத ஒன்றாகும். எனினும் புலம்பெயர்ந்துள்ள விடுதலைப்புலிகளின் சார்பானவர்களால் தற்போதும் எனக்கு அச்சுறுத்தல் இருக்கின்றது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தவர்கள் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதியும் எனது சகோதரருமான மஹிந்த ராஜபக் ஷவிற்கும் எனக்கும் வாழ்நாள் முடியும் வரையும் விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் தொடரும்.
முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்ட பொதுபல சேனாவுக்கும் எனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. நான் முஸ்லிம்களுக்கு எதிரானவல்ல. அத்தோடு எந்தவொரு கும்பலுக்கும் நான் தலைமைத்துவம் வழங்கவில்லை. ரத்னா லங்கா நிறுவனம் தொடர்பில் என்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. 2010 ஆம் ஆண்டு அமைச்சரவையின் ஊடாக சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிறுவனமே ரத்னா லங்கா நிறுவனமாகும். கடற்கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பைப் பெறும் நோக்குடனேயே இந்த நிறுவனத்தின் உதவியை நாம் பெற்றோம். ஐக்கிய நாடுகள் அமைப்புக் கூட கடற்பரப்பின் பாதுகாப்பிற்கு அனைத்து நாடுகளின் உதவியைக் கோரியிருந்த நிலையிலேயே நாம் இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுத்தோம். இதற்கு ஆயுதம் அவசியம். ஆயுதத்தை பாதுகாப்பதற்கு ஆயுதக் களஞ்சியசாலை அவசியம். எனினும் இந்த ஆயுதங்களை வைத்து என்மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. குறித்த பாதுகாப்புச் சேவைக்கு நாம் ஓய்வுபெற்ற எமது இராணுவ வீரர்களையே உபயோகித்தோம். எனவே இது தவறு என்பதையே என்மீதான குற்றச்சாட்டுக்கள் புலப்படுத்துகின்றன.
யுத்த காலத்தின்போது பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் அனைத்துத் தீர்மானங்களையும் நானே முன்னெடுத்தேன். இந்த விடயத்தில் நான் பொறுப்புடன் செயற்பட்டேன் என்றார்.
|