பொதுபலசேனாவின் இனவாத செயற்பாட்டுக்கு மகிந்த அரசாங்கமே காரணம் - நிஸாம் காரியப்ப

பொதுபல சேனா போன்ற பேரினவாத இயக்கங்களினால் இலங்கை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ அரசா...

nizam

பொதுபல சேனா போன்ற பேரினவாத இயக்கங்களினால் இலங்கை முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் இருந்துள்ளது என சிறிலாங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் ஐ.நா.மனித உரிமை மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இடம்பெறுகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது வருடாந்த அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் மத சுதந்திரத்திற்கான உப குழுக் கூட்டம் அதன் விசேட தூதுவர் ஹைனர் பீல்ட்பெல்ட் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (12) ஜெனீவாவில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதில் சிறிலாங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டதுடன் முஸ்லிம்கள் மீதான பேரினவாத வன்முறைகள் எனும் கருப்பொருளில் உரையாற்றினார்.

இதன்போது 1915 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய இனக்கலவர தாக்குதல் சம்பவங்கள் மற்றும் 1956ஆம் ஆண்டுக்குப் பின்னர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக ஆட்சியில் சிறுபான்மையினர் மீதான இன வன்முறைகள் குறித்த வரலாற்றுப் பதிவுகளை விபரித்த நிஸாம் காரியப்பர், 2011ஆம் ஆண்டு தொடக்கம் முஸ்லிம்கள் மீது பௌத்த பேரினவாத சக்திகளினால் கட்டவிழ்த்து விடப்பட்ட இன ஒடுக்கல் வன்முறைகள் தொடர்பிலும் சிங்கள இனவாத, மதவாத இயக்கங்களின் பின்னணி தொடர்பிலும் விபரித்துக் கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் முஸ்லிம்களை அடக்குவதற்காக அவர்களது பொருளாதார மையங்களை இலக்கு வைத்து, அவற்றை அழிப்பதற்காக பொதுபல சேனாவை ராஜபக்ஷ அரசாங்கம் எவ்வாறு பயன்படுத்தியது என்பதை தரவுகளுடன் சுட்டிக்காடி, விபரித்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, பொது பல சேனா இயக்கத்தின் காலி பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தமை தொடக்கம் அளுத்கம சம்பவம் வரை முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளிலும் அவர் தொடர்புபட்டிருந்தார் எனவும் நிஸாம் காரியப்பர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மியன்மாரில் முஸ்லிம்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த 696 இயக்கத்தின் தலைவரான விராதுவுடன் பொது பல சேனாவுக்கு இருந்து வருகின்ற இறுக்கமான உறவு குறித்தும் அவரை இலங்கைக்கு அழைத்து- வந்து முஸ்லிம்களுக்கு எதிரான மாநாட்டில் பங்குபற்றச் செய்தமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களையும் நிஸாம் காரியப்பர் எடுத்துக் கூறினார்.

பொதுவாக பொதுபல சேனா உள்ளிட்ட சிங்களப் பேரினவாத இயக்கங்களின் முஸ்லிம் விரோத இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ராஜபக்ஷ அரசாங்கம் மறைமுகமாக அனுசரணை வழங்கி வந்தது என்றும் அதனால் அப்பேரின இயக்கங்களினால் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பாரிய வன்முறைகளைக் கூட கட்டுப்படுத்துவதற்கோ சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கோ அரசாங்கம் முன்வரவில்லை என்றும் குறிப்பிட்டு அவர் தனது கவலையை வெளியிட்டார்.

எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அப்போது இலங்கை அரசாங்கத்தில் நீதி அமைச்சராக பதவி வகித்த போதிலும் இந்த அநியாயங்களுக்காக முஸ்லிம்களுக்கு அவரால் நீதி வழங்க முடியாத துரதிருஷ்ட நிலை காணப்பட்டது. இது குறித்து அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றியதையும் நிஸாம் காரியப்பர் நினைவூட்டினார்.

“இலங்கையை ஒட்டு மொத்தமாக ஒரு பௌத்த நாடாக பிரகடனம் செய்ய வேண்டும் எனவும் ஏனைய இனத்தவர்கள் அடக்கியொடுக்கப்பட வேண்டும் என்ற பாரிய இலக்குடனேயே அப்போதைய ஆட்சியாளர்களின் பின்னணியில் பொது பல சேனா உருவாக்கப்பட்டது.

தற்போது நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து அவ்வியக்கங்கள் அமைதியாக இருந்தாலும் கூட எதிர்காலங்களில் அவை மீண்டும் தலை தூக்கமாட்டா என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

ஆகையினால் இவற்றை நிரந்தரமாக முழுமையாக கட்டுப்படுத்துவதற்கும் நடந்த சம்பவங்களுக்காக நீதியை பெற்றுக் கொடுப்பதற்காகவும் சர்வதேச மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என நிஸாம் காரியப்பர் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து சபையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க புதிய அரசாங்கம் முயற்சிக்குமா என கேட்கப்பட்ட போது “பொறுத்திருந்து பார்ப்போம், நம்பிக்கை உள்ளது” என நிஸாம் காரியப்பர் பதிலளித்தார்.

இந்த அமரவைத் தொடர்ந்து ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் மத சுதந்திரத்திற்கான உப குழுவின் விசேட தூதுவர் ஹைனர் பீல்ட்பெல்டை நிஸாம் காரியப்பர் பிரத்தியேகமாக சந்தித்து உரையாடினார்.

niz

Related

இலங்கை 3388399169519793225

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item