நாட்டில் அமுலில் உள்ள ஷரிஆ சட்டம் மற்றும் தேசவழமை சட்டங்களை தடை செய்ய மாட்டோம் : நீதியமைச்சர்
நாட்டில் அமுலில் உள்ள முஸ்லிம்களின் ஷரிஆ சட்டம் மற்றும் தமிழர்களின் தேசவழமை சட்டகங்கள் ஆகியவற்றை தடை செய்ய மாட்டோம் என நீதியமைச்சர் விஜே...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_910.html
நாட்டில் அமுலில் உள்ள முஸ்லிம்களின் ஷரிஆ சட்டம் மற்றும் தமிழர்களின் தேசவழமை சட்டகங்கள் ஆகியவற்றை தடை செய்ய மாட்டோம் என நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவிதுள்ளதுன் தற்போது அமுலில் உள்ள ரோமர் சட்டங்களில் விரைவில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எச்.ஜீ. அமீன் எழுதிய ”திருமணத்தின் கோட்பாடும் தத்துவார்த்தங்களும் காரணமும்” (Concept of Marriage- Logic and Reson) என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று புதன்கிழமை நீதியமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் விஜேதாஸ ராஜபக் ஷ இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கையின் வரலாற்றுக் காலம் தொடக்கம் இனத்துவ மத அடிப்படையிலான சட்டங்கள் அமுலில் இருந்து வந்துள்ளன. தேசவழமை, ஷரிஆ சட்டங்களும் இதில் அடங்கும். போர்த்துக்கேய, ஒல்லாந்த மற்றும் பிரித்தானிய ஆட்சியாளர்களும் இச் சட்டங்களை ஏற்றுக்கொண்டு அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.
எனவே, எவரது தேவைக்காகவும் காலம் காலமாக நடைமுறையில் ஒரு இனத்தவர் மதத்தவர் அனுபவித்து வந்த சட்டங்களை தடை செய்ய முடியாது. இச் சட்டங்கள் நாட்டில் தொடர்ந்து அமுலில் இருக்கும். இதற்கு இடையூறு விளைவிக்கமாட்டோம்.
நீதிமன்றங்களில் தற்போது சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் பெருந் தொகையில் தேங்கிக்கிடக்கின்றன. இதற்குக் காரணம் தற்போது நாட்டில் 200 வருடங்கள் பழைமை வாய்ந்த ரோமர் சட்டங்களே அமுலில் உள்ளன.
இதன் சட்டவாக்கங்கள் தீர்ப்புக்களை வழங்குவதை தாமதப்படுத்துகின்றன. அன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறே சட்டங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. எனவே தான் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு ரோமன் சட்டங்களில் விரைவில் திருத்தங்களை கொண்டுவரவுள்ளோம். அதன் பின்னர் இவ் வழக்குகளை விரைவாக தீர்க்க முடியும்.
கடந்த காலங்களில் மக்கள் நீதிமன்றங்கள் சட்டங்கள் மீது நம்பிக்கை இழந்து காணப்பட்டனர். இன்று புதிய ஆட்சி மாற்றத்துடன் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பலப்படுத்தி வருகின்றோம். கடந்த காலங்களில் இலஞ்ச ஊழல் திணைக்களம் என்று ஒன்று இருந்ததா என்பது கூட கேள்விக்குறியாகவே இருந்தது. இத் திணைக்களத்திற்கு 5000 க்கும் மேற்பட்ட முறைபாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், எதுவுமே விசாரிக்கப்படவில்லை. ஒரு சில அதிகாரிகளின் அசமந்தப் போக்கினாலும் பக்கச்சார்புத் தன்மையினாலும் இம்முறைப்பாடுகள் விசாரிக்கப்படவில்லை. இவ்வாறு செயற்பட்ட அதிகாரிகள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர். புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


Sri Lanka Rupee Exchange Rate