முஸ்லிம்கள் புனித மக்கமா நகரிலுள்ள கஃபாவிற்கு சென்று மகிந்த அரசாங்கம் மாற வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள்.
Marsook Hahamed Labbai முன்னாள் நகர பிதா, காத்தான்குடி. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரான்ஸ் ஊடகமொன்றிற்கு வழங்கிய ப...

http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_51.html

“மகிந்தவின் வெற்றிக்காக பொதுபல சேனா பல சோதனைகளுக்கும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் செயற்பட்டது. ஆனால் அவர் தோற்றுவிட்டார். அவர் பொதுபல சேனாவின் செயற்பாடுகள் காரணமாகவே தோற்றுப்போனதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருப்பது எமக்கு கவலையளிக்கின்றது.
மகிந்தவை 2 வருடங்களுக்கு முன்பே தேர்தலை நடத்துமாறு நாமா கூறினோம்? அவர் அவசரப்பட்டு முடிவெடுத்தார். இனிமேல் நாங்கள் அவருக்கு பின்னால் செல்லப்போவது இல்லை” என பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருக்கின்றார்.

முஸ்லிம்களின் மத உரிமைகளில் சீண்டினால் எவ்வாறான பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டிவரும் என இன்று இவர்கள் உணர்ந்திருக்கின்றார்கள்.
பொதுபல சேனா முஸ்லிம்களுக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடும் போது மகிந்த அதனை தட்டிக்கேட்கவில்லை. மாறாக நியாயப்படுத்தியே கதைத்து வந்தார். இது ஒரு சிறிய பிரச்சினை... இதனை பெரிது படுத்தாதீர்கள் என முஸ்லிம் அமைச்சர்களிடம் கூறினார்.
மனிதர்களுக்கு உணவும், உடையும், வீடும் தான் அத்தியாவசியமானது. இதிலே முஸ்லிம்களின் உணவிலும், உடையிலும் கை வைத்தார்கள். முஸ்லிம்கள் ஹலாலான உணவை சாப்பிட முடியவில்லை. தமது மத ரீதியான உடையை அணிய முடியவில்லை.
பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டு குர்ஆன் கொச்சைப்படுத்தப்பட்டன. முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு தாக்கப்பட்டன. முஸ்லிம் வர்த்தகர் ஒரு சிங்கள யுவதியுடன் அல்லது சிங்கள சிறுவனுடன் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என சோடிக்கப்பட்டு வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டன.
குற்றச்சாட்டுகள் சோடிக்கப்படாமல் உண்மையாக நடந்திருந்தால் கூட அதனை ஒரு பாலியல் பிரச்சினையாக பார்த்திருக்கப்பட்டிருக்க வேண்டும். மாறாக இது இனப்பிரச்சினையாக்கப்பட்டு பூதாகரமாக்கப்பட்டிருக்க தேவையில்லை. பாலியல் குற்றத்திற்குரிய சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் இன்று முஸ்லிம்களினால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றமானது பொதுபல சேனா போன்றவர்களை எவ்வாறு கட்டுப்படுத்தியுள்ளது என்பதை நாங்கள் உற்று நோக்க வேண்டும். அண்மையில் கூரகல பள்ளிவாயலை உடைக்கச் சென்றவர்கள் மீது தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டு பொலிஸார் விரட்டி அடித்திருக்கின்றனர். மகிந்த அரசாங்க காலத்தில் இது நடைபெற்றிருக்குமா? “நாங்கள் தான் உத்தியோகப்பற்றற்ற பொலிஸ்” என கூறிக்கொண்டு பொதுபல சேனா போன்றவர்கள் விரும்பிய இடத்திற்கு செல்வார்கள்.
விரும்பிய முஸ்லிம் அமைச்சுக்கு சென்று நடவடிக்கை எடுப்பார்கள். தெருவிலே ஒரு முஸ்லிமின் இறைச்சிக் கடையை கண்டால் அக்கடை உடைக்கப்பட்டு கடைக்காரர் நையப்புடைக்கப்பட்டு கேவலப்படுத்தப்படுவார். இதனை எந்த பொலிசும் கேட்க முடியாது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்பு இன்று குர்ஆனை அவமதித்தமை தொடர்பான வழக்கில் ஞானசார தேரர் முதன் முறையாக நீதிமன்ற கூண்டில் ஏற்றப்பட்டிருக்கின்றார்.
ஜனவரி 09 ஆம் திகதி தேர்தல் முடிந்த மறுதினம் மகிந்த தோல்வி அடைந்த நிலையில் அன்று அதிகாலை 6.30 மணிக்கு அலரி மாளிகையை பிரதமர் ரணிலிடம் ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறும் போது அன்று அதிகாலை சதிப் புரட்சி சம்பந்தமாக ஆராய வந்தவர்களிடம் அதிலும் குறிப்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபரிடம் மகிந்த இப்படிக் கூறியிருக்கின்றார்.
“எனது தம்பிமார்கள் இருவரும் காவி உடை தரித்த பொதுபல சோனாவினரை எனது அலரிமாளிகைக்குள் கொண்டு வந்து அமர்த்தியதனால் தான் இன்று இங்கிருந்து நான் வெளியேறி செல்லவேண்டிய நிலமை ஏற்படுகிறது” என்றிருக்கின்றார்.
அன்று தேர்தலில் தோற்றுவிட்டு அலரிமாளிகையில் இருந்து வெளியேறும் போது ஒரு சிலரிடம் கூறியதை இன்று பிரான்ஸ் ஊடகத்தின் ஊடாக உலகத்திற்கு வெளிப்படுத்தியிருக்கின்றார். அதாவது தனது தோல்விக்கு முஸ்லிம்கள் தான் காரணம். அதற்கு பொது பலசேனா காரணம் என்றே அவர் சொல்லியிருக்கிறார்.
முஸ்லிம்கள் மகிந்தவை தோற்கடிப்பது என்பதை ஒரு ஈமானிய புரட்சியாகவே பார்த்தார்கள். ஏனெனில் இலங்கை இருக்கின்ற வரை ஜனாதிபதி முறைமை இந்த நாட்டில் இருக்கும். இலங்கை இருக்கின்றவரை முஸ்லிம்களும் இந்த நாட்டில் வசிப்பார்கள். எனவே மகிந்தவுக்கு படிப்பிக்கின்ற பாடத்தினால் எதிர்காலத்தில் வருகின்ற மைத்திரி உட்பட எந்த ஜனாதிபதியாக இருந்தாலும் ஒரு பாடத்தினை படித்துக்கொள்ள வேண்டும் என்றுதான் முஸ்லிம்கள் விரும்பியிருந்தார்கள்.
முஸ்லிம்கள் புனித மக்கமா நகரிலுள்ள கஃபாவிற்கு சென்று மகிந்த அரசாங்கம் மாற வேண்டும் என்று பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள். முஸ்லிம்கள் நோன்பு நோற்றார்கள். இக்கட்டுரை எழுதும் நான் கூட நோன்பு நோற்றவன் தான்.
எனக்கு அண்மையில் மரணம் வரும் என்று விதி இருந்தால் அது ஜனாதிபதி தேர்தலின் பின்புதான் வரவேண்டும். மகிந்தவின் தோல்வியை பார்த்துவிட்டுத்தான் நான் மரணிக்க வேண்டும் என நான் விரும்பியிருந்தேன்.
ஆனால் சில முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மகிந்தவை ஆதரித்தார்கள். அதற்கு அவர்கள் “எல்லா முஸ்லிம்களும் மகிந்தவை எதிர்த்து நின்று வாக்களித்தும் அதையும் தாண்டி மகிந்த வென்றுவிட்டால் முஸ்லிம்களின் கெதியென்ன? அவ்வாறான நிலமையில் முஸ்லிம்களை பாதுகாக்கவே மகிந்த தேர்தலில் மகிந்தவை ஆதரித்தோம்” என்கின்றனர்.
ஆனால் இவர்கள் முஸ்லிம்களுக்கு பாரிய பிரச்சினைகள் வந்தபோது ஒரு போதும் குரல் கொடுத்தது கிடையாது. சமூகம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை எமது பிழைப்பு நடந்தால் போதும் என்று கடந்த காலத்தில் இருந்தவர்கள் தான் இவர்கள்.
அவ்வாறு இவர்கள் கூறுவது போல் மகிந்த வென்றிருந்தாலும் இவர்கள் பட்டம் பதவிகளை எடுத்துக்கொண்டு முஸ்லிம்களை காட்டிக்கொடுக்கின்ற வேலைகளையே செய்திருப்பார்கள். ஒரு போதும் சமூகத்தை பாதுகாத்திருக்க மாட்டார்கள்.
எல்லா முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மகிந்தவுக்கு எதிராக வேலை செய்கின்ற போது நாங்கள் மட்டும் மகிந்தவுக்கு வேலைசெய்து மகிந்த வென்றுவிட்டால் மகிந்த அரசாங்கத்தில் நாங்கள் தான் ராசா வேண்டிய பதவிகளை அடையலாம் என்ற சுயநலம் தான் முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்த மகிந்தவை இவர்கள் ஆதரித்ததன் நோக்கம்.
அவ்வாறு மகிந்த வென்றிருந்தாலும் இவர்கள் எதிர்பார்த்த முழு அமைச்சர் பதவியை மகிந்த வழங்கியிருப்பாரா என்பதும் சந்தேகம். ஏனென்றால் மகிந்த ஒரு நன்றி கெட்ட மனிதர்.
மேலும் சில அரசியல்வாதிகள் “நாங்கள் மகிந்தவை ஆதரித்ததன் நோக்கம் எங்கள் ஊருக்கு வடிகாலமைப்பு திட்டம் தந்ததற்கு நன்றி தெரிவிக்கவே” என்கின்றனர்.
இலங்கை முஸ்லிம்களின் தேசிய அழிவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா? அல்லது தனது ஊருக்கு தந்த வடிகாலமைப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதா? முஸ்லிகளின் பிரச்சினைகளோடு ஒப்பிடும் போது இத் திட்டமெல்லாம் ஒரு தூசு. இவ்வாறான திட்டங்களுக்காக நாம் சோரம் போகலாமா?
சரி. மகிந்தவின் வெற்றிக்காக உழைத்து தோல்வியும் கண்டீர்கள். நன்றி தெரிவிப்பதற்காகவோ சமூகத்தை காப்பதற்காகவோ மகிந்தவுடன் நின்றேன் என்கிறீர்கள். அதனோடு விடயத்தை விட்டுவிடலாமே. அத்தோடுவிடாமல் மகிந்தவை இலஞ்ச உழல் விசாரணைக்கு அழைத்தமைக்கு எதிராக பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏன் கலந்து கொண்டீர்கள்?
மகிந்த மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடுவாரோ? என்று முஸ்லிம் சமூகமே பயந்து போயிருக்கின்ற இந்த சூழலிலே மகிந்தவுக்கு ஆதராவாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஏன் மீண்டும் மீண்டும் நோண்டியாகுகின்றீர்கள்?
மகிந்த சகோதரர்கள் பொது பலசேனாவூடாக முஸ்லிம்களை அடித்து நொறுக்குவதைப்பார்த்து சிங்கள பௌத்தர்கள் தங்களுக்கு பின்னால் அணி திரள்வார்கள். அவ்வாறு சிங்களவர்கள் எல்லாம் தங்கள் பின்னால் அணி திரண்டால் முஸ்லிம்களின் வாக்குகள் தங்களுக்கு தேவைப்படாது என எதிர்பார்த்தே இதனை அரங்கேற்றினார்கள்.
ஆனால் இதற்கு சிங்கள மக்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை. மாறாக எதிர்ப்பே கிடைத்தது. பெரிய பிக்குகள் கூட பொதுபலசேனாவை எதிர்த்து அறிக்கைகள் விட்டார்கள். இரண்டு பௌர்ணமிக்குள் பொதுபலசேனா அழிந்துவிடும் என சில முக்கிய பிக்குகள் சாபம் இட்டார்கள். சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் இருந்து முஸ்லிம்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைளுக்கு எதிர்ப்பு கிடைத்தது.
அளுத்கம கலவரத்தை இந்த நாடு முழுவதும் பரவச்செய்யலாம் என எதிர்பார்த்தனர். ஆனால் சாதாரண சிங்கள மக்கள் அதற்கு இடமளிக்கவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைளுக்கு சிங்கள மக்கள் மத்தியில் இருந்து இவ்வளவு எதிர்ப்பு வரும் என்பது மகிந்த சகோதரர்கள் அறவே எதிர்பார்க்காத விடயம். இவ்வாறு சிங்கள பௌத்தர்கள் மத்தியில் இந்த பருப்பு வேகாததால்தான் மகிந்த சகோதரர்கள் எதிர்பார்த்த மாதிரி சிங்கள வாக்குகளை பெறமுடியவில்லை.
ஆனால் இது வெற்றி அளித்து அதிகமான சிங்கள வாக்குகளை மகிந்த பெற்றிருந்தால் இன்று “முஸ்லிம்களால்தான் தோல்வி அடைந்தேன்” என்று மகிந்த புலம்பமாட்டார். இன்று மகிந்தவுக்கும் பொதுபலசேனாவிற்கும் பிரச்சினை ஏற்பட்டிருக்கமாட்டாது.
ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்கு முஸ்லிம்களா? அல்லது சிறுபான்மை மக்களா? அல்லது சிங்களவர்களா? காரணம் என்றால் இதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்றே கூறவேண்டும். ஒரு காலத்திலும் இல்லாதவாறு முஸ்லிம்கள் ஒன்று திரண்டு மைத்திரியை வெற்றிபெறச் செய்தார்கள். முஸ்லிம்கள் வாழ்கின்ற அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் மைத்திரி வெற்றி பெற்றிருந்தார்.
ஆனால் தமிழர்களும் உணர்வு பூர்வமாக, ஒற்றுமைப்பட்டு வாக்களித்திருந்தனர். அதனையும் நாங்கள் குறைத்து மதிப்பிட முடியாது முஸ்லிம்கள் 97 வீதம் மைத்திரிக்கு வாக்களித்திருந்தார்கள் என்று சொன்னால் தமிழர்கள் 99 வீதம் மைத்திரிக்கு வாக்களித்திருந்தார்கள்.
ஆனால் நான் இங்கு ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும். மகிந்த கடந்த 3 ஜனாதிபதி தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இந்த 3 தேர்தல்களிலும் தமிழர்கள் மகிந்தவுக்கு எதிராகவே வாக்களித்தார்கள்.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலே தமிழர்கள் ரணிலுக்கு வாக்களிக்க ஆயத்தமானார்கள். இதனை அறிந்த புலிகள் வாக்களிக்க விடாமல் தமிழ் மக்களை தடுத்தார்கள். எனவே இத்தேர்தலில் தமிழர்கள் மகிந்தவுக்கு வாக்களிக்கவில்லை. 2010 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர்கள் பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்தார்கள். 2015 ஆம் ஆண்டு தேர்தலிலேயும் தமிழர்கள் மகிந்தவுக்கு வாக்களிக்கவில்லை.
எனவே தமிழர்கள் மகிந்தவுக்கு எதிராக வாக்களித்தும் இரண்டு தேர்தல்களிலும் அவர்களால் மகிந்தவை தோற்கடிக்க முடியவில்லை. ஆனால் முஸ்லிம்கள் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் மாத்திரம் தான் ஒற்றுமைப்பட்டு மகிந்தவுக்கு எதிராக வாக்களித்து மகிந்தவை தோற்கடித்தார்கள்.
எனவே மகிந்தவின் தோல்வியில் தமிழர்களை விடவும் முஸ்லிம்கள் ஒரு படி மேலேயே நிற்கின்றனர். இந்த தேர்தலில் தீர்மானிக்கின்ற சக்தியாக முஸ்லிம்களே திகழ்ந்தனர்.
சிலர் 40 இலட்சம் மைத்திரிக்கு வாக்களித்த சிங்களவர்கள் மைத்திரியின் வெற்றியை தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்கவில்லையா என கேள்வி கேட்கின்றனர். சிங்கள மக்கள் மைத்திரிக்கு அளித்த 40 இலட்சம் வாக்கானது அவரின் அடிப்படை வாக்குகளாகும்.
இதனை வைத்து தீர்மானிக்கின்ற சக்தியை தீர்மானிப்பதில்லை. தீர்மானிக்கும் சக்தி என்பது வேறு விடயம். மேலும் மகிந்த “நான் சிங்கள மக்களாலும் தான் தோற்கடிக்கப்பட்டேன்” என எந்த இடத்திலும் இதுவரை கூறவில்லை.
எனவே மைத்திரியின் வெற்றியை தீர்மானித்தவர்கள் முஸ்லிம்கள் தான். இதற்கு காரணம் மகிந்த கூறுவது போல் பொதுபலசேனாதான்.