ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியில் UNP வெற்றி பெறுவது உறுதி -ஹலீம்
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குளால் வெற்றி பெற்றது. இந்த மாவட்டத்த...

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குளால் வெற்றி பெற்றது. இந்த மாவட்டத்தில் கணிசமான மேலதிகமான வாக்குகளைப் பெற்ற தேர்தல் தொகுதி இதுவாகும். அதேபோல இம்முறையும் இந்தப் பொதுத் தேர்தலில் 35 ஆயிரம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய தேசிய கட்சி வெற்று பெறுவது என்பது உறுதியாகும் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ ஹலீம் அவர்களை ஆதரரித்து அக்குரணை அரபா மண்டபத்தில் தேர்தல் பிரச்சாரம் கூட்டம் 20-07-2015 நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனை அங்கு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
கடந்த கால 17 வருட ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை அசைக்க முடியாது என்று பலர் கூறினார்கள். அதேபோல மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியை அசைக்க முடியாது என கூறினர். ஆனால் அரசியல் என்பது எதுவும் எதிர்வு கூற முடியதளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியது. இப்பொழுது தோல்வியுற்ற மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் போட்டியிடுகின்றார். அவரது போட்டி குருநாகல் மாவட்டத்துடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முழு நாட்டுக்குமான போட்டி அல்ல. அந்த மாவட்டத்தில் கூட அவரது வரவால் பெரியளவு போட்டி நிலை நிலவுவதாக இல்லையென அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குருநாகல் மாவட்டத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியே கைப்பற்றும் என்றளவுக்கு இன்று நிலமை மாறியுள்ளது.
கடந்த காலத்தில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிந்து செல்வதை கட்டுப்படுத்த எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. திட்டமிட்ட அடிப்படையல் போதை வஸ்துப் பாவனையை ஊக்குவிப்பதற்கான வேலைத் திட்டங்கள் திரைமறைவில் கடந்த ஆட்சியில் நடைபெற்றுள்ளன. இளைஞர்களை போதைவஸ்துப் பாவனைக்கு அடிமையாக்குவதன் மூலம் இந்நாட்டில் நடைபெறும் அநியாயங்களுக்கு எதிராக கிளர்ந்து எழ மாட்டார்கள். கெசினோ போன்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு கடந்த கால அரசாங்கம் ஊக்குவிப்புக்களை மேற்கொண்டிருந்தன.
சிறுபான்மையின மக்களுக்கு எதிராக தீய சக்திகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. நாங்கள் சொல்லொண்ணாத் துன்பங்களுடன் கடந்த கால ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருந்தோம்.
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அநீதி இழைக்கப்பட்ட போது நாங்கள் தட்டிக் கேட்மோம் அதற்கு அவர்கள் எதையும் கவனத்தில் கொள்ள வில்லை. உயர் நீதி மன்ற நீதியரசர் ஸ்ரீயாணி பண்டாரநாயகவுக்கு அநீதி இழைக்கப்பட்ட போது நாங்கள் தட்டிக் கேட்டோம். அப்போதும் தட்டிக் கேட்மோம். அதற்கும் எதையும் காதில் எடுக்கவில்லை. எமது நீதி நியாயம் சீர் குலைந்து காணப்பட்டது. ஊழல், மோசடி சுரண்டல் என்பவை மலிந்த நாடாக காட்சியளித்ததும.
தற்போது நல்லாட்சி மலர்ந்துள்ளது எமது வாக்குகளை உரிய முறையில் பயன்படுத்தி எமது சமூகத்தின் இருப்பைப் பாதுகாப்பதற்கும் நாம் கௌரவமாக வாழ்வதற்கு எமது வாக்கை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்க வேண்டும். எவ்வாறு கடந்த ஜனாதிபதித் தேர்லில் சுறுசுறுப்புடன் வாக்குகளைப் பதிவு செய்தோ அதே மாதரி இந்தப் பொதுத் தேர்தலையும் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.