ஐ.எஸ் தீவிரவாதிகள் போல் நடித்து காட்டிய HSBC வங்கி ஊழியர்கள்: பணியிலிருந்து அதிரடியாக நீக்கிய நிர்வாகம்
எச்.எஸ்.பி.சி வங்கி ஊழியர்கள் சிலர் ஐ.எஸ் தீவிரவாதிகள் போல் வேடமிட்டு ஊழியர்களில் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது போல் நடித்து காட்டி...


எச்.எஸ்.பி.சி வங்கி ஊழியர்கள் சிலர் ஐ.எஸ் தீவிரவாதிகள் போல் வேடமிட்டு ஊழியர்களில் ஒருவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது போல் நடித்து காட்டிய விவகாரத்தில் வங்கி நிர்வாகம் அவர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள Birmingham நகரில் செயல்பட்டு வரும் எச்.எஸ்.பி.சி வங்கி தன்னுடைய ஊழியர்கள் 6 பேருக்கு வங்கி நிர்வாகத்தை செயல்படுத்துவது தொடர்பாக சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த பயிற்சி கூட்டத்தில் கலந்துக்கொண்டு 6 பேரும், வங்கி நிர்வாகத்திற்கு தெரியாமல் ஐ.எஸ் தீவிரவாதிகள் போல் உடை அணிந்து வன்மத்தை வளர்க்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
5 பேர் ஐ.எஸ் தீவிரவாதிகள் போல் கருப்பு நிறத்தில் உடையும் முகமூடியும் அணிந்திருக்க, ஊழியர்களில் ஒருவரான Saf Ahmed என்பவர் கைதி வேடத்தில் ஆரஞ்சு நிற ஆடையை அணிந்து கீழே முட்டி போட்டு அமர்ந்துள்ளார்.
இந்நிலையில், முகமூடி அணிந்து நிற்பவர்களில் ஒருவர், சட்டையை மாட்டும் கம்பியை கத்தியாக கொண்டு ’Allahu Akbar’ எனக்கூறிக்கொண்டு கீழே அமர்ந்து இருப்பவரின் கழுத்தை அறுப்பது போன்று வீடியோ எடுத்துள்ளனர்.
8 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவை கண்ட வங்கி நிர்வாகம் பெரும் அதிர்ச்சி அடைந்ததுடன், இந்த நாடகத்தில் ஈடுப்பட்டிருந்த 6 பேரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்கியது.
இது தொடர்பாக பேசிய எச்.எஸ்.பி.சி வங்கியின் நிர்வாகி ஒருவர், ஊழியர்கள் செய்துள்ள காரியத்தில் வங்கி நிர்வாகத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், இதனால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் நிர்வாகம் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய Alan Henning மற்றும் David Haines என்ற இரண்டு பிரித்தானியர்களை தீவிரவாதிகள் கடந்தாண்டு இதேபோல கழுத்தை அறுத்து கொன்றது குறிப்பிடத்தக்கது.