ஆணைக்குழுவுக்கு அழைத்தது தவறென்றால் நீதிமன்றம் செல்லுங்கள்! மகிந்தவுக்கு சிறப்புரிமை இல்லை!- பிரதமர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை லஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு அழைத்திருப்பது தவறு எனக் கருதினால் உச்சநீதிமன்றத்துக்குச் சென்று அதற்க...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_675.html

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை லஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு அழைத்திருப்பது தவறு எனக் கருதினால் உச்சநீதிமன்றத்துக்குச் சென்று அதற்கு எதிராக தடையுத்தரவைப் பெற்றுக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதியே தவிர பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. எனவே, அவருக்கு பாராளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமைகள் கிடையாது என்றும் பிரதமர் சபையில் தெரிவித்தார்.
சபாநாயகர் சாமல் ராஜபக்ச தலைமையில் நேற்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடியது.
இதன் போது முன்னாள் ஜனாதிபதி லஞ்ச ஊழல் திணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டது தொடர்பில் எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார். சபையில் பிரதமர் மேலும் உரையாற்றுகையில்,
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து எவரும் கட்சி மாறவில்லை. அவ்வாறு கட்சி தாவி எவரும் அரசுடன் இணையவில்லை.
சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார். எனவே ஜனாதிபதி தான் அமைச்சர் பதவிகளை வழங்கினார்.
எனவே இதனை கட்சித் தாவல் என அர்த்தப்படுத்த முடியாது. அரசின் 100 நாள் திட்டத்தை முன்னெடுக்கவே அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டது.
லஞ்ச ஊழல் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எனது துணைவியாரின் நண்பர் என விமல் வீரவன்ச எம்.பி குற்றம் சாட்டுவதை நிராகரிக்கின்றேன்.
இப் பிரச்சினையில் எனது துணைவியாரை தொடர்புபடுத்த வேண்டாம். இத் திணைக்களத்தின் நடவடிக்கைகளில் நான் தலையிடுவதும் இல்லை, அழுத்தம் கொடுப்பதும் இல்லை. ஆணையாளர் நாயகத்தை நான் நியமிக்கவும் இல்லை.
கடந்த கால ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்டவர்கள் தான் இத்திணைக்களத்தின் தலைவர்களாக இன்னும் பணியாற்றுகின்றனர்.
திஸ்ஸ அத்தனாயகாவுக்கு அமைச்சர் பதவி வழங்கியது தொடர்பில் சாட்சியமளிக்கவே முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளார்.
அவ்வாறு ஜனாதிபதியை விசாரிக்க முடியாதென்றால் அது சிறப்புரிமை மீறல் என்றால் அது தொடர்பில் நீதிமன்றம் சென்று அதற்கு எதிராக தடையுத்தரவை பெற்றுக் கொள்ளுங்கள்.
அரசாங்கம் அனைத்தையும் சட்டப்படியே முன்னெடுக்கின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை நான் தான் பாதுகாப்பதாக ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
அவர் தோல்வி கண்ட ஆரம்ப நாட்களில் இன்று கூச்சலிடுவோர் எவரும் அவரைபோய் பார்க்கவில்லை.
நான் தான் தொலைபேசியில் பேசினேன்.
முன்னாள் ஜனாதிபதிக்கு உரிய கவனிப்பு கிடைக்கவில்லையென்றால் அது எனது பிழையல்ல, அதற்கு பொறுப்பானவன் நானல்ல.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இப்பிரச்சினையை பேசுங்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கேளுங்கள், நான் இது தொடர்பில் எதனையும் செய்ய முடியாது.
இது தொடர்பாக விவாதம் நடத்தவும் தயார். யுத்தத்தை முடித்தவர் சரத் பொன்சேகா இதனை முன்னாள் ஜனாதிபதியே ஏற்றுக் கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியிருக்கலாம்.
ஆனால் யுத்தத்தை வெற்றிகொண்டவர் சரத் பொன்சேகா. அவரை சிறையில் அடைத்த போது எவரும் பேசவில்லை.
இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய விடுதலைப் புலிகள் குண்டுத் தாக்குதல் நடத்தினர், கொல்ல முயற்சித்தார்கள்.
யார் அப்போது பேசினார்கள் அன்று அவர் பதில் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தார். எவரும் பேசவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் என்னை தோல்வியடையச் செய்வதற்காக பிரபாகரனுடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.
சர்வதேச விசாரணை நடத்தப்படுமென பான் கீ மூனிடம் உறுதி மொழி வழங்கியது யார்.
இவையெதனையும் நாங்கள் செய்யவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.


Sri Lanka Rupee Exchange Rate