விருப்பு வாக்குகளை பயன்படுத்துவதிலேயே எல்லாம் அடங்கியுள்ளது : மனோ
யானைக்கு வாக்களித்தால் எல்லாம் சரியாகிவிடும் என தவறுதலாக முடிவு செய்யாது, எமக்கு அளிக்கும் விருப்பு வாக்கே எம் இனத்தின் பிரதிநிதித்துவ வெ...

கொட்டாஞ்சேனை புளுமெண்டால் தொடர்மாடி குடியிருப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு விருப்பு வாக்குகளை வழங்கும் முறைதொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்துகையிலேயே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு மாவட்டத்தில் ஒவ்வொரு கட்சி சின்னத்திலும் இருபத்தி இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். இதில் யானை சின்னத்தில் இரண்டு தமிழ் வேட்பாளர்களும் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும் பதினேழு சிங்கள வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
நானும் சகோதரர் குகவரதனும்தான் இந்த இரண்டு தமிழ் வேட்பாளர்கள். இங்கே வேறு எந்த ஒரு தமிழ் வேட்பாளரும் கிடையாது. யானை சின்னத்துக்கே அனைத்து தமிழ் வாக்காளர்களும் வாக்களிக்க முடிவு செய்து விட்டார்கள் என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.
ஆனால் யானை சின்னத்துக்கு வாக்களித்தால் மாத்திரம் எல்லாம் சரியாகிவிடும் என நாம் தவறுதலாக முடிவு செய்து விடக்கூடாது. யானையும் வெற்றி பெற வேண்டும். யானை மீது ஏறி அமர்ந்து நாமும் வெற்றி பெற்று வரவேண்டும்.
யானை சின்னத்துக்கு அளிக்கும் வாக்கு மஹிந்தவின் தோல்வியை உறுதிப்படுத்தும். எங்களுக்கு அளிக்கும் விருப்பு வாக்குகள் எங்கள் இனத்தின் பிரதிநிதித்துவ வெற்றியை உறுதிப்படுத்தும். எனவே யானைக்கு வாக்களித்துவிட்டு, எமது விருப்பு வாக்குகளை எப்படி பயன்படுத்த போகின்றோம் என்பதில்தான் எல்லாமே அடங்கி இருக்கின்றது.
கொழும்பில் மூன்று தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட இடம் உண்டு. நண்பர் சி.வை. ராம் மூன்றாவது தமிழ் வேட்பாளராக போட்டியிடுவார் என எதிர்பார்த்து நாம் இரண்டுடன் நிறுத்திக்கொண்டோம். ஆனால், அவரது கட்சியின் முடிவு வேறு மாதிரியாக இருந்தது.
இந்நிலையில் நாம் இன்று முதல் விருப்பு வாக்கை எனது எட்டாம் இலக்கத்துக்கு வழங்க கோருகிறேன். இரண்டாம் விருப்பு வாக்கை, எமது கட்சியின் அடுத்த தமிழ் வேட்பாளர் சகோதரர் குகவரதனின் ஒன்பதாம் இலக்கத்துக்கு வழங்க கோருகிறேன். மூன்றாம் விருப்பு வாக்கை நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்க கோருகிறேன்.
ஏனெனில் ரணில், பல இலட்சங்கள் விருப்பு வாக்குகளை பெற்று முதல் இடத்தை பெறுவார். ஆகவே ரணில் எங்களுக்கு போட்டியில்லை. ஆனால் ஏனைய எல்லா யானைச்சின்ன வேட்பாளர்களும் எங்களுக்கு போட்டி. அவர்கள் தமது விருப்பு வாக்குகளுடன் எமது விருப்பு வாக்குகளையும் பெற்று பட்டியலில் மேலே போய் வெற்றி பெற்று விடுவார்கள்.
எனவே ஏனைய எந்த ஒரு யானைச்சின்ன வேட்பாளருக்கும் எமது விருப்பு வாக்குகளை வழங்கினால் அது எமது பிரதிநிதித்துவத்தை வெட்டி குறைக்கும். நடைமுறையில் உள்ள தேர்தல் முறை பற்றிய இந்த உண்மையை நாம் ஒவ்வொருவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். புரிந்துகொண்டவர்கள் புரியாதவர்களுக்கு எடுத்துக் கூறி புரிய வைக்க வேண்டும்.
எனவே யானைச்சின்னத்துக்கு வாக்களிப்பதுடன் விருப்பு வாக்குகளை 8, 9, 15 என்ற மூன்று இலக்கங்களுக்கும் வழங்கும் ஒரே முடிவில் நாம் இருக்க வேண்டும். எங்கள் இன உரிமைக்கு முதல் இரண்டு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும்.
நாம் வாழும் நாட்டில் இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை வெளிப்படுத்த எமது மூன்றாவது விருப்பு வாக்கை வழங்க வேண்டும். இதுதான் எளிமையான சிக்கல் இல்லாத வாக்களிக்கும் முறைமை. நமது மூன்றாவது விருப்பு வாக்கு என்ற ஒரு வாக்கை நாம் இன ஐக்கியத்துக்கு தருகிறோம்.
ஆனால் அதையும் மீறி எமது இரண்டாவது அல்லது முதலாவது விருப்பு வாக்குகளையும் நாம் மாற்று வேட்பாளர்களுக்கு வாங்கினால் அது நம்மை ஆபத்தில் தள்ளி விடும். ஏனெனில் தனக்கு மிஞ்சியதுதான் தானம். நமது இன பிரதிநிதித்துவத்தை காவு கொடுத்து விருப்பு வாக்குகளை ஏலத்தில் விட்டால் அதன் பெயர் ஏமாளித்தனம்.
இப்போது நமது விருப்பு வாக்குகளை ஏலத்தில் எடுக்க மாற்று இன வேட்பாளர்கள் வரிசையாக வருகிறார்கள். அவர்களை சில தமிழ் புரோக்கர்களும் அழைத்து வருகிறார்கள். இவர்களையிட்டு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.