100 அடி உயரத்தில் பறக்கும் ஆகாயக் கமராவைப் பயன்படுத்தி அறுகம்பை விகாரை மற்றும் கடற்கரையைப் படம்பிடித்தவர்கள் கைது
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பொலிஸ் பிரிவில் உள்ள பொத்துவில் முஹுது மஹா விகாரை மற்றும் அறுகம்பை கடற்கரை என்பனவற்றின் காட்சிகளை 100 அடி உயரத்த...
http://kandyskynews.blogspot.com/2015/07/100_23.html
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பொலிஸ் பிரிவில் உள்ள பொத்துவில் முஹுது மஹா விகாரை மற்றும் அறுகம்பை கடற்கரை என்பனவற்றின் காட்சிகளை 100 அடி உயரத்தில் பறக்கக் கூடிய ஆளில்லா கமராவைப் பயன்படுத்தி படமெடுத்த குற்றச்சாட்டின் பேரில் இருவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
மூன்றரை கிலோகிராம் நிறையுடையதும் 1 அடி நீளம் 1அடி அகலம் 1 அடி உயரமுடையதுமான 100 அடி ஆகாயத்தில் பறந்து படமெடுக்கக் கூடியதான கமெராவையும் தாங்கள் சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றியிருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை பொத்துவில் அறுகம்பை பகுதிக்கு விஜயம் செய்த சந்தேக நபர்களான கல்கிஸ்ஸ ஹொட்டேல் வீதியைச் சேர்ந்த கிரஹாம் ரண்டித் பீற்றர் டியூற் (வயது 31) மற்றும் கொழும்பு -5 பொல்ஹேன்கொடயைச் சேர்ந்த யாப்பா முதியான்ஸலாகே அயோத்ய கீர்த்திகுமார யாப்பா பண்டார (வயது 33) ஆகிய இருவரும் பொத்துவில் குடாகல்லிய பிரதேசத்தில் அமைந்துள்ள முஹுது மஹா விகாரை மற்றும் அறுகம்பை கடற்கரையோரங்களின் இயற்கைக் காட்சிகளை 100 அடி உயரத்தில் பறக்கும் கமெராவைப் பயன்படுத்தி காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.
இந்தத் தகவல் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து படம் பிடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட தானியங்கி ஆகாயக் கமெராவையும் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். இலங்கைக்கு அதிக உல்லாசப் பயணிகளை வரவழைக்கும் நோக்கில் இயற்கை எழிலை ஆகாயத்திலிருந்து படமெடுப்பதற்காக தாம் ஆகாயக் கமெராவைக் கொண்டு படம் பிடித்ததாக சந்தேகபர்கள் வாக்குமூலமளித்துள்ளதோடு தாம் எவ்விதத்திலும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக நடந்து கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
எனினும் இத்தகைய ஆளில்லா ஆகாயக் கமெராவைப் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி தேவை என்று பொலிஸார் கூறுகின்றனர். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.


Sri Lanka Rupee Exchange Rate