வடக்கில் தேர்தல் தொகுதிகள் குறைக்கப்படுவதற்கு அதுரலிய ரத்ன தேரர் எதிர்ப்பு
புதிய தேர்தல் முறையினால் வடக்கில் தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது அனைத்துலக அளவில் தாக்கத்தை ஏற்படு...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_895.html
புதிய தேர்தல் முறை மாற்ற யோசனைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதை அடுத்து, நேற்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பின் போது அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட, தேர்தல் முறை மாற்றம் குறித்த யோசனைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
தொகுதி வாரியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 125 ஆக குறைக்கப்படுமானால் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் குறைவடையும் என்று ஈ.பி.டி.பி.யின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர், பிரபா கணேசன் ஆகியோர் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்துக் கருத்துத் தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர், தொகுதிவாரியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு குறைக்கப்பட்டால் நிலப்பரப்பு மற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் தற்போது 11 தொகுதிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை நான்கு தொகுதிகளாக குறைவடையும் நிலை ஏற்படும். இதனால் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் குறைவடையும். இதற்கு இடமளிக்க முடியாது
இவ்வாறு வடக்கில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுமானால் அது அனைத்துலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.
அத்துடன், அமைச்சர் ராஜித சேனாரத்னவும், புதிய தேர்தல்முறை யோசனையில் தொகுதி வாரியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 125 ஆக குறைக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்த போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் எவரும் எதிராக குரல்கொடுக்கவில்லை. அவர்கள் வாய்மூடி மௌனியாக இருந்தனர்.
சிறுபான்மை கட்சிகளின் எதிர்ப்புக்காகவே இவ்வாறான யோசனையொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளார்.
இதன் மூலம் 20வது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றாது செய்வதற்கே திட்டமிடப்படுகிறது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட யோசனைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சித் தலைவர்கள் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தேர்தல் முறை மாற்ற யோசனைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக்கொண்டுள்ளார்.
தொகுதிவாரியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை 150 ஆக அதிகரிக்கலாமா என்பது தொடர்பாகவும் ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களுமான தினேஸ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.