சம்பூருக்கு ஒரு நீதி – மறிச்சிக்கட்டிக்கு ஒரு நீதி; ஜனாதிபதியின் கருத்து
தேசிய அரசில் முஸ்லிம் சமுகமும் நல்லிணக்கத்தை அனுபவிக்கலாம் என்ற ஆதங்கத்தில் புதிய அரசின் தேர்தல் வெற்றிக்கு வாக்களித்த போதிலும் அது தற்போத...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_658.html
தேசிய அரசில் முஸ்லிம் சமுகமும் நல்லிணக்கத்தை அனுபவிக்கலாம் என்ற ஆதங்கத்தில் புதிய அரசின் தேர்தல் வெற்றிக்கு வாக்களித்த போதிலும் அது தற்போது விழலுக்கிறைத் நீராகி விட்டது.
நாட்டின் தலைவர் என்ற வகையில் பல ஆண்டுகளாக துன்பப்பட்ட மக்களுக்கு நல்லதொரு முடிவை எடுத்து நிம்மதியைக் கொடுப்பார் என்ற என்னங்கள் எல்லாம் ஒரு நொடிப் பொழுதில் சுக்கு கூறான விடயமாக ஆகிவிட்ட விடயம் முஸ்லிம் மக்களிடத்தில் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் கடந்த வன்செயல் காரணமாக துரத்தப்பட்ட மக்களின் மீள் குடியேற்ற விடயம் கடந்த அரசின் யுத்த நிறுத்தத்திற்குப் பிறகு பல்வேறுபட்ட போராட்டத்தின் மத்தியில்; அரசாங்கத்தின் சகல அனுமதியுடனும் தமக்கு உரித்தான சொந்தக் காணியில் குடியமரும் செயற்பாட்டில் இறங்கினர். இந்த நிலைமைகளும் கூட ஆமை வேகத்திலேயே இடம் பெறுகின்றன.
இந்த வகையில் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் முஸ்லிம்களின் பூர்வீகங்களைக் கொண்ட பல கிராமங்களில் அவர்கள் அரசின் எந்தவித உதவிகளுமின்றி குடியமர்ந்த போதிலும் அதிலும் அந்த பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் நிம்மதியைக்காண முடியாது தத்தளிக்கின்ற பரிதாபகர நிலைமைகள் தற்போது முழு முஸ்லிம் சமுகத்தையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.
முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் இனவாதமும், சமய வாதமும் தற்போது அதிக அளவில் தாண்டவமாடி தற்போது முஸ்லிம் மக்களின் சொந்தக் காணியில் மீள் குடியேறும் நிலைமைகளை தடுக்கும் இனவாதத்தின் திட்டம் சமுக நலன்களின் மேம்பாட்டிற்கு மாற்றமான முறையில் பல வழிகளிலும் தடைகளை போடும் செயற்பாடுகளும் அதன் மூலம் மக்களின் இயல்பு வாழ்வை குழப்பும் விதத்திலும் அரங்கேறி வருகின்றது.
இடம் பெயர்ந்தவர்கள் என்று சற்றும் சிந்திக்காத இனவாதக் கும்பல் காட்டுப்பகுதியை அழிப்பதாக குறிப்பிட்ட விடயத்தை சில பக்கச் சார்பான ஊடகங்களின் கைங்கரியங்களின் விளைவாக அதனை ஊதிப் பெருத்து பெரும்பான்மை மீது தேவையற்ற வித்தத்தில் இனக் கிலேசத்தை ஏற்படுத்தியதன் விளைவாக அந்த மக்களை காவி உடைக்காரரும், அவர்களோடு இணைந்த மனித நேயமற்ற குழுக்களும் அவர்கள் வாழத்துடிக்கும் பூமியில் முற்றுகையிட்டு அச்சுறுத்தி பாரிய மனித உரிமை மீறல்களைச் செய்தும் அந்த மக்கள் பொறுமையையும், அரசின் ஆதரவையுமே தமது நிம்மதியாக நினைத்திருந்த வேலையில் வெண்ணை திரண்டு வரும்பொது தாழி உடைந்த கதையாக ஜனாதிபதியின் கூற்று முழு முஸ்லிம் சமுகத்தையும் மைத்திரி அரசின் மீது நம்பிக்கை இழக்க வைத்து விட்டது.
மன்னாரில் காணிகளை விடுவித்ததை ஏற்க முடியாது என்ற ஜனாதிபதியின் அறிவிப்பு அவரை சிம்மாசனத்தில் ஏற்றிய முக்கிய பங்காளிகளாக காணப்படும் முழு முஸ்லிம் சமுகத்தையும் ஒரு நொடிப் பொழுதில் தூக்கி எறிந்த ஒரு செயற்பாடாக அமைந்ததiயிட்டு இன்று முஸ்லிம் சமுகம் வெட்கித் தலை குணிய வேண்டியேற்பட்டு விட்டது என்ற மனச் சஞ்சலம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதை நேரடியாகவே காண முடிகின்றது.
தொடர்ந்து ஜனாதிபதி தெரிவித்த கருத்தை நோக்கும்போது செயற்குழு ஒன்றினூடாக மன்னாரில் வன பாதுகாப்பு அதிகார சபையின் காணிகளை விடுவித்து வில்பத்து தேசிய வனப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் மீள் குடியேற்ற நடவடிக்கை கொண்ட கடந்த அரசின் செயற்பாட்டை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என ஜனாதிபதி தெரிவித்த கருத்து இவர்களும் முஸ்லிம்களை மீள் குடியமர்த்த விரும்ப வில்லை முஸ்லிம்கள் பட்டதுன்பங்களை விடவும் அதிகமான துன்பங்களை அனுபவிக்கட்டும் என்ற எதிர்வு கூறலாகவே இருப்பதாக முஸ்லிம் சமய ஆர்வளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அவலப்பட்ட மக்களின் கடந்தகால அரசுகளில் பங்கு வகித்தவர் அதன் தாக்கங்கள் எல்லாம் தமக்குத் தெரியும் என்ற வார்த்தைகள், அன்மையில் படைவீரர் தினத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உடல் வலிகளை எம்மால் தீர்க்க முடிய வில்லை என்று சர்வதேசம் வரை செல்லக் கூடிய வகையில் நீலிக் கண்ணீர் வடித்த கதைகளை எல்லாம் மக்கள் இனி எப்பவுமே மறந்து விட மாட்டார்கள் என்பதனை ஜனாதிபதியின் கருத்து உறுதிப்படுத்தி விட்டது எனலாம்.
இவ்வாறு ஜனாதிபதி கூறியபோதெல்லாம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் அவரின் கூற்றுக்களைக் கேட்டு முஸ்லிம் மக்களும் பூரிப்படைந்து தமது அகதி வாழ்வுக்கு நிம்மதியும், நீதியும் கிடைக்கும் என்று பூரித்த ஒரு வாரத்திற்குள்ளேயே அந்தப் பூரிப்புக்களுக்கும், மகிழ்ச்சிகளுக்கும் மன்னார் மீள் குடியேற்ற விடயத்தில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து ஒட்டு மொத்தமாக முஸ்லிம் மக்களின் வாழ்வியலை செயழிக்கச் செய்ததுடன் இருந்த அற்ப சொற்ப நம்பிக்கைகளும் கூட கேள்விக்குறியாகி விட்டது என மறிச்சிக் கட்டியில் மீள் குடியேச் சென்ற மக்களின் ஆதங்கமாக உள்ளது.
இவ்வாறு இடம் பெயர்ந்த தமது பூர்வீகத்தில் நாங்கள் குடியமர முடியாதென்றால் நாங்கள் கடலில் மூழ்கிச் சாவதா? என்று அந்த மக்கள் ஜனாதிபதியிடம் கேற்கின்றனர். ஜனாதிபதியின் கூற்று முஸ்லிம் மக்களின் மனங்களை புண்படுத்தி இன்று அந்த மக்கள் தமது நீதிக்கு உதவக் கூடிய அரசியல் ரீதியான மாற்று வழிகளை மேற்கொள்ள வேண்டிய நிலைமைகளையும் கூட ஏற்படுத்தி விட்டது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துத் தொடர்பாக இன்று முஸ்லிம் சமுகத்தில் இருந்து எதிர்ப்பு அலைகள் ஏற்படுவதற்கான வழியை ஏற்படுத்தி விட்டது. தேசப் பற்றுள்ள முஸ்லிம் முன்னணி உள்ளிட்ட சில அமைப்புக்கள் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
அவர்களின் கண்டனத்தில் ஜனாதிபதி இனவாதிகளுக்கு துணை போய்விட்டார் என்றும் அவர் முழு முஸ்லிம் சமுகத்தினரிடத்திலும் மன்னிப்புக் கோர வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாய்க் கிழமை (26) மேற்படி முன்னணி கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் ஏற்படுத்தியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்படிக் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் ஐ.என்.எம்.மிப்லால் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் வில்பத்துவில், மன்னாரில், மறிச்சுக்கட்டியில் மீள்குடியேறிய முஸ்லிம்கள் சட்டவிரோத குடியேற்ற வாசிகள் எனக் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதியின் கூற்றை வன்மையாக கண்டிக்கின்றோம். முன்னாள் ஜனாதிபதி 10 வருடங்களாக முஸ்லிம்களுக்குச் செய்ததை மைத்திரிபால சிறிசேன 150 நாட்களில் செய்து விட்டார். மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாகவே அவரை மெதமுலனவுக்கு அனுப்ப வேண்டியேற்பட்டது. அதேபோல் மைத்திரியும் செய்தால் அவரும் பொலனறுவைக்குச் செல்ல வேண்டி ஏற்படும் என்ற கருத்தை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிரந்தரமற்ற அரசில் ஜனாதிபதி வெற்றி கொள்ளச் செய்த சமுகத்தைப் பகைப்பது அல்லது அவர்கள் விடயத்தில் பாரபட்சம் காட்டுவது இந்த அரசின் நிலையான ஆட்சிக்கு பாரியதொரு சவாலாகவே அமையலாம்.
மன்னார் மாவட்ட அரச அதிபர், முசலி பிரதேச் செயலாளர், அமைச்சர் சம்பிக்க ரணவக்க மற்றும் சமாதான அமைப்புக்கள் எல்லாம் முஸ்லிம்கள் சட்ட விரோமாக குடியேற வில்லை என்று கூறும்போது பொறுப்பு வாய்ந்தவர் என்ற வகையிலும், நாட்டின் தலைவர் என்ற வகையிலும் நியாயமாக பாதிக்கப்பட்ட முஸ்லிம் விடயத்தில் நிதானமாக செயற்படுவதற்குப் பதிலாக அவசரப்பட்டதன் விளைவு முஸ்லிம் சமுகம் அவர் மீது சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் துர்ப்பாக்கிய நிலையை தோற்று வித்துள்ளது.
25 வருடங்களாக சொந்தப் பூமியை இழந்த மக்களைவிட குறைந்த காலத்தில் பூமியை இழந்த சம்பூர் மக்களுக்கு அவர்களின் காணிகளை கைப்பற்றிய படைத்தரப்பில் இருந்து பெற்றுக் கொடுக்க முடியுமானால் மறிச்சிக்கட்டி மக்களின் உறுதிப்படுத்தக் கூடிய எழுத்து மூலமான ஆதாரங்கள் உள்ள பூர்வீகக் காணிகளை ஏன் ஜனாதிபதியால் பெற்றுக் கொடுக்க முடியாது? என்ற கேள்வியை அந்த மக்கள் ஜனாதிபதியிடம் கேட்கின்றனர்.
ஜனாதிபதியின் மேற்படிக் கூற்று அரச அதிகாரிகளின் அரச செயற்பாடுகளுக்குக் கூட சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அவ்வாறான திறமையான அரச அதிகாரிகளின் எதிர்காலச் செயற்பாடுகளுக்குக் கூட பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என கல்விமான்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பூர் மக்களின் துன்பங்களைவிட கால் நூற்றாண்டு காலமாக பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்தவர்கள் என்ற விடயம் சர்சதேசம் வரை விலாகித்திருக்கும் இத்தருணத்தில் தற்போதைய அரசின் மனித நேயமற்ற செயற்பாடுகள் இவர்களும் இனவாத்தின் அடியொட்டியவர்களா? அல்லது அவர்களின் செயற்பாடுகளுக்கு உடந்தையானவர்களா? என்ற சந்தேகங்களைக் கூட மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
புதிய ஜனாதிபதி எளிமையை விரும்புவதாகவும் பல்வேறுபட்டவர்களின் நலன்களை நேரில் சென்று விசாரிப்பதாகவும் தெரிவிக்கும் வேளையில் ஏன் மறிச்சிக்கட்டி முஸ்லிம் மக்களின் நிலைமைகளை நேரில் சென்று பார்த்து தீர்வு பெற்றுக் கொடுக்க முடியாது? முஸ்லிம் சமுகமும் இந்த நாட்டின் பிரஜைகள்தானே? நாட்டின் தலைவர் என்ற வகையிலும் வெற்றி பெறச் செய்த அல்லது தேர்தலில் ஆதரவு தந்த மக்கள் என்ற வகையிலும் அவர்களின் நலன்களில் ஏன் குறைந்த பட்ச தனது நற்பைக் காட்ட முடியாது?
மறிச்சிக்கட்டி மக்களின் பிரச்சினையை அரசு அரசியலாக்காது சரியான பொறிமுறை ஒன்றை வகுத்து அதன் மூலம் கள நிலவரத்தை அறிந்து கொள்ள வேண்டும் அதன் பின்னரே அது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் ஆனால் ஜனாதிபதி மீள் குடியேற்ற முஸ்லிம் மக்களுக்கு காணி விடுவித்ததை ஏற்க முடியாது என்ற கருத்து ஏற்கெனவே இனவாத்தில் தாண்டவமாடும் குழுக்களுக்கு வாய்க்குப் பொரி கிடைத்தமாதிரி மேலும் முஸ்லிம் மக்கள் மீதான பிரச்சினைகளை தூண்டுவதற்கும், இனவாதிகள் தமது அரசியல் இருக்கைகளை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் அவர்களை அச்சுறுத்துவதற்குமானதொரு பாதையாகவே அமைந்து விட்டது என்றே கூறலாம்..
தற்போதைய நிலையில் மஹிந்த ராஜபக்ஷ காலத்தை விடவும் முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடன் தூர நோக்குடன் செயற்பட வேண்டும் என்பதனையும், சகல முஸ்லிம் கட்சிகளும் இனியும் தாமதிக்காது ஒற்றுமைப்பட வேண்டிய சமிக்கையையே மைத்திரி அரசாங்கமும் அவர்களது செயற்பாடுகள் மூலமாக காட்டி நிற்கின்றன.
சிறுபான்மை மக்கள் என்ற வகையில் எதிர் காலத்தில் பெரும்பான்மையால் ஒன்றையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமைகளை சிறுகச் சிறுக தோற்று வித்து வருகின்றமையை தற்போதைய அரசியல் நடவடிக்கைகள் மூலம் காணக் கூடியதாகவுள்ளது.
ஜனாதிபதி முஸ்லிம் மக்களும் இந்த நாட்டுப் பிரஜைகள் என்ற விடயத்தில் அதீத அக்கறை செலுத்த வேண்டும், முஸ்லிம் மக்களின் குறிப்பாக வடக்கில் இருந்து விடுதலைப் புலிகாளல் துரத்தப்பட்டவர்கள் விடயத்தில் முன்னுரிமை கொடுத்து அந்த மக்களையும் அரவணைக்க வேண்டும் என சமாதான விரும்பிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
மீள் குடியேற்ற விடயத்தில் சம்பூர் மக்களுக்கு ஒரு நீதி மன்னார் மாவட்ட மக்களுக்கு ஒரு நீதி காட்டப்படுவது அவ்வளவு ஆக்கபூhடவமான செயற்பாடுகளாகத் தெரியவில்லை. ஜனாதிபதியின் கருத்து அப்பட்டமாகவே முஸ்லிம் மக்களின் மனங்களில் கவலையையும், அவர் மீதும் அவரின் அரசாங்கத்தின் மீதும் அதிர்ப்தி நிலைமைகளை தோற்று வித்துள்ளது.
எனவே மீள் குடியேற்ற முஸ்லிம்கள் விடயத்தில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்களை பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் அவர்களின் உணர்வுகளையும், துன்பங்களையும் கருத்திற் கொண்டு தெரிவித்த கருத்துக்களை மீள் பரிசீலனை செய்து அதனை மாற்றிக் கொண்டு முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை அரசியல் ரீதியாக தனது நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து நியாயத்தையும், சமாதானத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என வினயமாகக் கேட்கின்றனர்.