நம்பியவர்களை நட்டாற்றில் கைவிட்டு செல்லக்கூடாது

தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20வது திருத்த சட்டமூலம் புதன்கிழமை நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தை பாராளும...

தேர்தல் முறை மாற்றத்தை உள்ளடக்கிய 20வது திருத்த சட்டமூலம் புதன்கிழமை நள்ளிரவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
வர்த்தமானியில் 20வது திருத்த சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அதற்கு எதிராக சிறுபான்மை, சிறிய கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படுமா? என்ற சந்தேகம் தற்போது எழுந்திருக்கின்றது.
237 பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய புதிய தேர்தல் திருத்த யோசனைக்கு கடந்த 12ம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. இதற்கிணங்கவே வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருக்கின்றது.
அமைச்சரவை அங்கீகரித்த இந்த தேர்தல் முறைமையை திருத்தும் யோசனையை எதிர்க்கும் விடயத்தில் சகல சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளும் தற்போது ஒன்றிணைந்துள்ளன.
நேற்று முன்தினம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் கொழும்பில் செய்தியாளர் மாநாடொன்றினை நடத்தியிருந்தன.
இந்த மாநாட்டில் லங்கா சமசமாஜக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ விதாரண, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம், ஈ.பி.டி.பி.யின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, ஜனநாயக மக்கள் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் பிரபா கணேசன், சோசலிச மக்கள் முன்னணியின் செயலாளர் ராஜாகொலுரே மற்றும் எம்.பி.க்களான டிலான் பெரேரா, எம்.எல்.ஏ. எம். ஹிஸ்புல்லா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த இவர்கள் அனைவரும் தேர்தல் முறை மாற்றம் குறித்த 20வது திருத்த சட்டமூலத்தில் சிறிய கட்சிகள், மற்றும் சிறுபான்மை கட்சிகளின் யோசனைகள் உள்ளடக்கப்படவேண்டும். இதன் மூலமே சிறுபான்மை மக்கள் இந்த முறையின் மூலம் பாதிக்கப்படுவதனை தடுக்க முடியும் என்று கூட்டாக தெரிவித்துள்ளன.
20வது திருத்த சட்டமூலத்தில் இரட்டை வாக்குச்சீட்டு முறைமை அமுல்படுத்த வேண்டுமென்று சிறுபான்மை, மற்றும் சிறிய கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால் இந்த விடயம் தொடர்பில் புதிய யோசனையில் எதுவித பரிந்துரைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்விடயம் பாரதூரமானதொரு செயற்பாடாகும் என்றும் இந்தக் கட்சிகளின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேபோல் நேற்று முன்தினம் மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருசலாமில் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி ஆராய்ந்துள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உட்பட பல கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பிலான 20வது திருத்த சட்டமூலமானது சிறுபான்மை மக்களின் சிறிய கட்சிகளையும் பாதிப்பதாக உள்ளது. இதனால் இந்த வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும். அவ்வாறு வாபஸ்பெறாவிட்டால் நாடுதழுவிய ரீதியில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தை அடுத்து கருத்து தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள 20வது திருத்த சட்டமூலம் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் ஜனநாயக உரிமையை மீறுவதாகவே உள்ளது. இந்த சட்டமூலத்தை நாங்கள் அனைவரும் ஏகமனதாக எதிர்ப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.


இந்த சட்டமூலத்தை உடனடியாக அரசாங்கம் வாபஸ்பெற வேண்டும். இரட்டை வாக்குச்சீட்டு முறைமை உட்பட எமது பல திருத்தங்கள் சட்டமூலத்தில் முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளன. எந்த அடிப்படையும் இல்லாத ஒரு பட்சமாக ஒரு சில கட்சிகளைப் பாதுகாக்கும் வகையில் கொண்டுவரக்கூடிய தேர்தல் திருத்தமாக இதை நாங்கள் பார்க்கிறோம்.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி பின்னர் இதற்கு எதிராக நாட்டு மக்களுடன் இணைந்து போராட தீர்மானித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் 20 ஆவது திருத்தம் தொடர்பாக சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் பல திருத்தங்களை முன்வைத்தன. இருந்தாலும் அரசாங்கம் எமது எந்தவொரு கருத்தையும் உள்வாங்காமல் தான்தோன்றித்தனமாக அவசரமாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதனை நாம் கண்டிக்கின்றோம்.
இது சகல சிறிய கட்சிகளையும் அழித்து விட்டு பெரிய இரண்டு கட்சிகள் மாத்திரம் நாட்டை ஆள வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்டதாகவே தெரிகின்றது. எனவே உடனடியாக இந்த வர்த்தமானி அறிவித்தல் வாபஸ்பெறப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்த சட்டமூலம் எமது நாட்டின் ஜனநாயகத்தையோ, நாட்டு மக்களின் உரிமைகளையோ மற்றும் அரசியல் கட்சிகளின் உரிமைகளையோ பாதுகாப்பதற்கு போதுமானதாக இல்லை. சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஆழமாக ஆராய்ந்து இதனை திருத்தியமைக்கவேண்டும். எனவே, அரசாங்கம் இந்த சட்டமூலத்தை உடனடியாக வாபஸ்பெறவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் முறை மாற்றம் குறித்த 20வது சட்டமூலம் தொடர்பில் கடந்த ஒரு மாதகாலத்திற்கு மேலாகவே ஆராயப்பட்டு வருகின்றது. கடந்த இருவாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற அமைச்சரவையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகையை 255 ஆக அதிகரிக்கும் யோசனை அடங்கிய தேர்தல் சீர்திருத்த பிரேரணையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். அதற்கு சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து அடுத்த வாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரை உள்ளடக்கிய தேர்தல் சீர்திருத்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கும் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டதையடுத்து கடந்த 12 ஆம் திகதி மீண்டும் 237 எம்.பி.க்களை உள்ளடக்கிய வகையிலான யோசனை ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டது.
தற்போது அதற்கும் சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உண்மையிலேயே தேர்தல் முறை மாற்றமானது சிறுபான்மை மக்களையோ, சிறுகட்சிகளையோ பாதிக்கத் தக்கதாக அமைந்துவிடக்கூடாது. தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாக ஏதோ ஒரு திட்டத்தை முன்வைத்து அதனை நிறைவேற்ற முயற்சிக்கவும் கூடாது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையின மக்கள் எதிரணி வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு தமது பூரண ஆதரவினை வழங்கியிருந்தனர். புதிய அரசாங்கம் உருவாவதற்கும் சிறுபான்மை மக்களின் தீர்ப்பே காரணமாக இருந்தது. எனவே, இந்த நிலையில் சிறுபான்மை மக்களை பாதிக்கும் வகையிலான தேர்தல் முறை சீர்திருத்தத்தை கொண்டு வருவது என்பது அநீதியான செயற்பாடேயாகும்.
இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அரசாங்கத் தரப்பினரும் தமக்கிடையிலான அரசியல் போட்டா போட்டிகளை விடுத்து சிறுபான்மை மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு செயற்படவேண்டும். நம்பியவர்களை நட்டாற்றில் கைவிட்டு செல்வதற்கு ஒருபோதும் முயலக்கூடாது. இந்த விடயத்தில் இதயசுத்தியுடனான நடவடிக்கைகள் அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

Related

பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர் பதிவில் எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது: ரிஸ்வி ஜவாஷா

பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர் பதிவில் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ரிஸ்வி ஜவாஷா தெரிவித்தார். காணொளியில் காண்க…

அமைச்சர்கள் ஒரு லட்சம் ரூபா கட்டணம் செலுத்த வேண்டும்!

பிரதமர் உட்பட ஏனைய அமைச்சர்கள் தேர்தல் பணிகளுக்கு தமது உத்தியோகபூர்வ வாகனங்களை பயன்படுத்தினால், ஒரு வாகனத்திற்காக ஒரு மாத கட்டணமாக ஒரு லட்சம் ரூபாவை வழங்க வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளது.அரசா...

தேர்தலில் நான் நடு நிலையாகவே செயற்படுவேன் -ஜனாதிபதியின் அறிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நான் நடு நிலையாகவே செயற்படுவேன். எனக்கு எந்த கட்சி வெற்றி பெறும் என்பது முக்கியமல்ல. ஜனவரி 8ம் திகதி பெற்ற வெற்றியை பாதுகாக்கும் வகையிலான அரசாங்கம் ஒன்றே எனக்கு அவசியம...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item