அப்ரிடியை வீழ்த்தி ஆரம்பித்த விக்கெட் வேட்டை: விஸ்வரூபம் எடுத்த முஸ்தாபிஜூர் ரஹ்மான்
வங்கதேச அணியின் இளம் வீரரான முஸ்தாபிஜூர் ரஹ்மான் இரு போட்டிகளில் தலா 5, அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய 2வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள...


வங்கதேச அணியின் இளம் வீரரான முஸ்தாபிஜூர் ரஹ்மான் இரு போட்டிகளில் தலா 5, அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய 2வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
19 வயதான முஸ்தாபிஜூர் ரஹ்மான், சதிரா என்ற கிராமத்தில் இருந்து வந்தவர்.
துடுப்பாட்டக்காரராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினாலும் பின்னர் பந்துவீச்சில் ஆர்வம் செலுத்தினார். இவர் தினமும் 40 கிலோ மீற்றர் தொலைவு பயணம் செய்து கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டவர்.
கடந்த ஆண்டு வங்கதேச 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம் பிடித்த முஸ்தாபிஜூர் இலங்கையில் நடந்த உலகக்கிண்ணப் போட்டியில் 6 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடந்த ஏப்ரல் மாதம் 15ம் திகதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதன்முதலில் சர்வதேச போட்டியில் களமிறங்கினார். அந்த டி20 போட்டியில் முதல் விக்கெட்டாக சாகித் அப்ரிடியை வீழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய ரஹ்மான், நேற்றைய 2வது போட்டியிலும் 6 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார்.
இதன் மூலம் இரு போட்டிகளில் 11 விக்கெட் வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதற்கு முன் ஜிம்பாப்வேயின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் பிரையன் விடோரி, 2011ம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே 30-5, 20-5 என்று விக்கெட் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.