ரோஹிஞ்சா முஸ்லீம்களை ஏற்க நாடுகள் தயங்குகின்றன: ஐநா
தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் கரைகளை நோக்கி கடல்வழியாக வரும் ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சா குடியேறிகளை, அந்த நாடுகள் ஏற்க...


தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் கரைகளை நோக்கி கடல்வழியாக வரும் ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சா குடியேறிகளை, அந்த நாடுகள் ஏற்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட அழைப்பை, தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய மூன்று நாடுகளும் இன்னமும் ஏற்க மறுப்பதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
கடலில் தத்தளிக்கும் இவர்களை காப்பாற்றுவதற்கான நேரம் காலாவதியாகிக்கொண்டிருப்பதாக பாங்காக்கில் உள்ள ஐ நாவின் அகதிகளுக்கான நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமை பல நூற்றுக்கணக்கான குடியேறிகள், படகுகளில் இந்தோனேசியா வந்தடைந்திருந்தனர். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமைக்குப் பிறகு வேறு எவரும் அங்கே தரையிறங்கியிருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
குடியேறிகளை ஏற்றிவரும் படகுகள், அல்லது படகுப் பயணிகள், கடலில் மூழ்கிக்கொண்டிருந்தால் ஒழிய, படகில் வரும் குடியேறிகளுக்கு உதவக்கூடாது என, இந்தோனேசிய அதிகாரிகள் அந்நாட்டு மீனவர்களுக்கு அறிவித்துள்ளனர்.
மியன்மார் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து, வறுமை மற்றும் துன்புறுத்தல் காரணமாக வெளியேறுபவர்களே, குடியேறும் நோக்கில் இத்தகைய படகுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.