யாழ்.மக்களின் கோபமும் கொந்தளிப்பும் நியாயமானதே! - மாதுலுவாவே சோபித தேரர்
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை சம்பவம் தொடர்பில் மக்களின் கோபமும் கொந்தளிப்பும் நியாயமானதே. பாடசாலை சிறுமியை பாலியல் ...
http://kandyskynews.blogspot.com/2015/05/blog-post_669.html
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை சம்பவம் தொடர்பில் மக்களின் கோபமும் கொந்தளிப்பும் நியாயமானதே. பாடசாலை சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த நபர்களை மக்கள் தண்டிக்க துடிப்பதையும் ஆக்ரோஷப்படுவதையும் நாம் குறைகூற முடியாது என சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரும் கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை சம்பவம் தொடர்பில் மக்களின் கோபமும் கொந்தளிப்பும் நியாயமானதே. பாடசாலை சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த நபர்களை மக்கள் தண்டிக்க துடிப்பதையும் ஆக்ரோஷப்படுவதையும் நாம் குறைகூற முடியாது என சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரும் கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், மனிதாபிமானத்துக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களை எந்த வகையிலேனும் கட்டுப்படுத்த வேண்டும். பாலியல் கொடுமைகள், கொலைகளை தடுத்து மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அதேபோல் மக்கள் தமது மனச்சாட்சிக்கு அடிபணிந்து நடக்க வேண்டும். வட மாகாணத்தில் இடம்பெற்ற பாடசாலை மாணவி வித்தியாவின் பாலியல் வன்கொடுமை மற்றும் அவரை கொலை செய்தமை கண்டனத்துக்குரிய விடயமாகும்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இவ்வாறான நபர்கள் கட்டாயம் சட்டத்துக்கு அமைய தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சட்டத்துக்கு முரணான வகையில் எந்த சம்பவங்களும் நடைபெறக் கூடாது.
மாணவி வித்தியாவின் கொலை சம்பவம் தொடர்பில் அம் மக்களின் கோபமும் கொந்தளிப்பும் நியாயமானதே. பாடசாலை சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த நபர்கள் மீது மக்கள் கோபப்படுவதையும் அவர்களை தண்டிக்கத் துடிப்பதையும் நாம் குறை கூற முடியாது. ஆனாலும் எல்லாவற்றையும் தாண்டி நாட்டில் சட்டம் என்ற ஒன்று உள்ளது. சட்டத்துக்கு முரணான வகையில் எவரும் செயற்படுவது சட்டத்தை மீறும் செயலாகி விடும். பின்னர் சட்டத்தை கடைப்பிடிக்க பலரை கைதுசெய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
அவ்வாறான ஒரு நிலைமை தான் இன்று வடக்கில் ஏற்பட்டுள்ளது. மக்கள் தமது கோபத்தை வெளிப்படுத்த ஆக்ரோஷமாக நடந்து கொள்வது சாதாரண பொதுமக்கள் அனைவரினதும் செயற்பாடுகளை பாதித்துள்ளது. குற்றவாளிகளை தண்டிக்கும் பொறுப்பு பொலிஸாருக்கும் நீதிமன்றத்துக்கும் உள்ள நிலையில் மக்கள் குற்றவாளிகளை தண்டிக்க நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதவொன்றாகும்.
குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள்மீது இப்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மக்கள் கொந்தளிப்பதும் தமது கைகளில் சட்டத்தை எடுத்து தண்டிக்க நினைப்பதும் சட்டத்திற்கு முரணானது. ஆகவே மக்கள் அமைதியாக இருந்தால் மட்டுமே உண்மையான குற்றவாளிகளை சரியாக இனங்கண்டு அவர்களை தண்டிக்க முடியும்.
அதேபோல் இந்த சம்பவத்தில் காவல் துறையின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. ஆகவே பொது மக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கி குற்றவாளிகளை தண்டிக்க உதவ வேண்டும். ஒருசில அரசியல் தலையீடுகள் இதன் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் அது உண்மையாக இருப்பின் மக்கள் அவற்றை இனங்கண்டு உண்மையின் பக்கம் நிற்கவேண்டும். அரசியல் எதிர்பார்ப்புகளில் பொதுமக்கள் சிக்கிக்கொண்டு வடக்கில் குழப்பங்களை ஏற்படுத்திவிடாது அமைதியாக செயற்படுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.