வில்பத்து விவகாரம் ; மக்களை மீள்குடியேற்ற முடியும்- அமைச்சர் ராஜித
வில்பத்து பிரதேசத்தில் மீள் குடியேற்றம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வாக பாதுகாக்கப்பட்ட பிரதேச எல்லையை குறைத்து மக்களை மீள்...

வில்பத்து பிரதேசத்தில் மீள் குடியேற்றம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வாக பாதுகாக்கப்பட்ட பிரதேச எல்லையை குறைத்து மக்களை மீள்குடியேற்ற முடியும். கடந்த காலத்தில் தேசிய பூங்காக்களை அண்மித்த பாதுகாக்கப்பட்ட பிரதேச எல்லைகள் உரிய வகையில் மதிப்பீடு செய்யப் படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
வில்பத்து மீள்குடியேற்ற விவகாரம் குறித்து பல்வேறு கருத்துகள் காணப்பட்டாலும் தமது சொந்தப் பூமியில் வாழ ஒவ்வொருவருக்கும் உரிமையிருக்கிறது எனவும் அமைச்சர் கூறினார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் வில்பத்து விவகாரம் குறித்து வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர்
மன்னார் மக்கள் தேசிய பூங்கா எல்லையிலுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியில் மீள்குடியேற்றப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. நான் கூட காணி அமைச்சராக இருந்த போது நுவரெலியா பகுதியில் பாதுகாக்கப்பட்ட பிரதேச எல்லையை குறைத்து அப்பகுதியில் மக்களுக்கு காணி வழங்கியிருக்கிறேன்.
பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகள் காணப்படுகின்றன. இதில் தவறு கிடையாது. மக்களை வீடு வாசலின்றி அநாதரவாக வைக்கும் கொள்கை எமக்கு கிடையாது.
வடக்கிலிருந்து துரத்தப்பட்ட ஒரு இலட்சம் மக்கள் மீண்டும் மீள்குடி யேற்றப்பட வேண்டும். இது மனிதாபிமான பிரச்சினையாகும். தமிழரா. முஸ்லிமா, சிங்களவரா என பேதம் பார்க்கக் கூடாது.
வில்பத்து பிரதேச மீள் குடியேற்றத்தில் தவறு நடந்திருந்தால் கடந்த அரசாங்கமும் ஜனாதிபதியுமே அதனை பொறுப்பேற்க வேண்டும். ஜனாதிபதி செயலணியின் சிபார்சின் படியே மக்களுக்கு காணி வழங்கப்பட்டது. இதற்கு அரச அதிபரை குறைகூறுவது தவறாகும் என்றார்.