சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் மஹிந்தவை பிரதமராக்க முடியும். அதேவேளை இனவாதம் ஆபத்தானது. கம்மன்பில.
சிறுபான்மையின மக்களின் வாக்குகள் இல்லாமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக பிரதமராக்குவதற்கு முடி...


சிறுபான்மையின மக்களின் வாக்குகள் இல்லாமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் ஊடாக பிரதமராக்குவதற்கு முடியும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு கிடைத்த வாக்குகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன என்று தூய்மையான ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறவேண்டுமானால் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முடியாது என்று சிலர் கூறுகின்றனர்.
ஆனால் மஹிந்த ராஜபக்ச வெற்றிபெறுவதற்கும் பிரதமராக தெரிவு செய்யப்படுவதற்கும் சிறுபான்மையினத்தவரின் வாக்குகள் அவசியமில்லையெனவும் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே உதய கம்மன்பில இந்த விடயங்களை கூறியுள்ளார்.
நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இனவாதக் கருத்துக்கள் வெளிவருவது குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது என்ற குற்றச்சாட்டுக்கள் அடிக்கடி பல்வேறு தரப்புக்களினால் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எந்தவொரு விடயத்தை எடுத்தாலும் அதற்கு இனவாத சாயத்தைப் பூசி இனவாத ரீதியில் கருத்துக்களை வெளியிடும் தன்மையை காணக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் தோல்வியை சந்தித்த தரப்பினரை அடிப்படையாக வைத்து அரசியல் காய்களை நகர்த்தும் சில அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக இனவாத ரீதியிலான கருத்துக்களை முன்வைத்து வருவதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
சிறுபான்மை மக்களின் ஆதரவில்லாமல் மஹிந்த ராஜபக்சவினால் பிரதமராக வர முடியும் என்ற உதய கம்மன்பிலவின் இந்தக் கருத்தின் மூலம் இனவாத அரசியல் செயற்பாடு பிரதிபலிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.
உண்மையில் இவ்வாறு இனவாத ரீதியில் வெளிப்படுத்தப்படும் கருத்துக்களால் சமூகத்தில் பிரிவுகளும் ஒற்றுமையற்ற நிலையுமே உருவாகும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.
மேலும் புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவமானது இலங்கையை மட்டுமன்றி முழு உலகையுமே அதிர்ச்சியடைய வைத்தது.
இந்த விடயத்தில் இதன் பின்னர் இவ்வாறான சம்பவம் ஏற்படாத வகையிலும் செயற்பாடுகளை முன்னெடுக்க முயற்சிக்கவேண்டும்.
ஆனால் அதற்கு மாறாக இந்த சம்பவத்தை வைத்து அதனூடாக இனவாத சாயத்தைப் பூசி சில தரப்பினர் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்று முன்தினம் ஆதங்கப்பட்டிருந்தார்.
வித்தியாவின் படுகொலையை முன்னிலைப்படுத்தி மஹிந்த ராஜபக்ச மீண்டும் சர்வாதிகாரமிக்க ஊழல் ஆட்சியை தொடர்வதற்கான ஒட்சிசனை ஏற்றிக் கொள்வதற்கு முயற்சிப்பதாக பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்தே எதிர்த்தரப்பினரால் இனவாத கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அத்துடன் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் அண்மையில் மஹிந்த ராஜபக்ச ஆட்சியைப் பிடிப்பதற்காக இனவாதத்தை கையில் எடுத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இவ்வாறு இனவாத போக்குகள் மற்றும் இனவாத ரீதியான அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது.
ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ அல்லது பெரும்பான்மையின அரசியல் தலைவர்களோ, சிறுபான்மையின அரசியல் தலைவர்களோ இனவாதத்தை கையிலெடுத்து அரசியல் செய்ய முயற்சித்தால் அது ஆபத்தான விடயமாகவே அமைந்து விடும் என்பதனை புரிந்துகொள்ளவேண்டும்.
அதுமட்டுமன்றி இனவாதத்தின் ஊடாக அரசியல் செய்து அதிகாரத்திற்கு வரும் பட்சத்தில் அந்த ஆட்சியானது ஒரு நல்லாட்சியாக அமையுமா என்பதும் கேள்விக்குறியாகிவிடும்.
காரணம் இனவாதத்தின் ஊடாக ஆட்சிக்கு வரும் தலைவர்கள் இனவாதிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முயற்சிக்கக்கூடும்.
இது நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு சவால் விடுவதாக அமைந்து விடும்.
விசேடமாக புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்தில் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்களை யாராவது இனவாத சாயம் பூசி விமர்சிக்க முற்படுவார்களேயானால் அது ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயமாகும்.
ஒரு மாணவி கயவர்களினால் நாசமாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் மக்கள் ஆத்திரம் கொண்டு சில எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது இயல்பான விடயமாகும்.
அதனைக் கட்டுப்படுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் பேணவேண்டியது நீதியை அமுல்படுத்தும் நிறுவனங்களின் கடமையாகும்.
மாறாக மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை இனவாத ரீதியில் நோக்குவதானது ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்து விடும்.
குறிப்பாக 2005ம் ஆண்டிலும், 2010ம் ஆண்டிலும், ஜனாதிபதி தேர்தல்களில் வெற்றிபெற்ற மஹிந்த ராஜபக்ச 2015ம் ஆண்டு ஏன் தோல்வி அடைந்தார் என்ற விடயம் ஆழமாக ஆராயப்படவேண்டியதாகும்.
2010ம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தமற்ற சூழலில் நாட்டில் நல்லிணக்கத்தையும், தேசிய ஒற்றுமையையும் வலுப்படுத்துவதற்கு கடந்த அரசாங்கம் முயற்சித்திருந்தால் அதற்கான வேலைத்திட்டங்களை திட்டமிட்ட ரீதியில் முன்னெடுத்திருந்தால் மஹிந்த ராஜபக்சவுக்கு கடந்த தேர்தலில் மக்களின் ஆதரவு பாரியளவில் கிடைத்திருக்கும்.
ஆனால் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் வலுப்படுத்துவதற்கு மாறாக இனரீதியில் விரிசல்களும் தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகளுமே கடந்த அரசாங்கத்தின் போது இடம்பெற்று வந்தன.
இதனால் தான் கடந்த தேர்தலில் நாட்டில் அனைத்து இனமக்களினதும் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்த மைத்திரிபால சிறிசேனவை வடக்கு, கிழக்கு, தெற்கு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளினதும் மக்கள் பாரிய ஆதரவை வெளியிட்டு ஜனாதிபதியாக தெரிவு செய்தனர்.
எனவே இவ்வாறான பாரியதொரு அரசியல் மாற்றம் ஏற்பட்ட பின்னரும் கூட மீண்டும் சில அரசியல் தலைவர்கள் இனவாதத்தை கையிலெடுப்பது எந்தளவு தூரம் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை.
ஒரு சில அரசியல்வாதிகளின் இனவாதக் கருத்துக்கள் தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா நாட்டில் இனி இனவாத அரசியலுக்கு இடமில்லையென்றும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்வோர் தோல்வியடைவார்கள் என்றும் கூறியிருந்தார்.
எமது நாடு இனவாத அரசியல் செயற்பாடுகள் காரணமாகவும் இனவாத கொள்கைப் போக்குகள் காரணமாகவும் கடந்த முப்பது வருடங்களாக பாரிய யுத்தமொன்றை சந்தித்ததுடன் அபிவிருத்தியில் மிகப் பெரிய பின்னடைவைக் கண்டது. சமூக வளர்ச்சியிலும் நாடு பின்நோக்கிப் பயணித்தது.
எனவே தொடர்ந்தும் இனவாத அரசியலை முன்னெடுப்பதானது நாடு மீண்டும் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கு ஏதுவாக அமைந்து விடும்.
உண்மையில் கடந்த தேர்தலில் கிடைத்த முடிவின் ஊடாக இதன் பின்னர் நாட்டில் இனவாத அரசியலுக்கு ஒருபோதும் இடமில்லை என்ற செய்தி வெளிப்படுத்தப்பட்டது.
எனவே அதனை மனதில் கொண்டு அரசியல் கட்சிகள் எதிர்வரும் காலங்களில் இனவாதமற்ற ரீதியில் தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இனவாதம் என்பது மிகவும் ஆபத்தான விடயமாகும்.
எனவே அரசியல் கட்சிகளும் சரி, அரசியல்வாதிகளும் சரி இனவாதத்திற்கு துணை போய்விடாமல் நாட்டின் எதிர்கால நலன்கருதி முற்போக்கான ரீதியில் தமது அரசியலை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
இது சிறுபான்மை, பெரும்பான்மை, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து தரப்பினருக்கும் பொருத்தமான ஒன்றாகவே அமையும்.