தேர்தலுக்கு முன்னர் மைத்திரி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்! - அமெரிக்க செனட் குழுவிடம் சம்பந்தன்.
மைத்திரி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களாகின்றன. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மைத்திரி அரசு தாமதம் காட்டுகின்றது. காலஅவகாசம் ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_77.html

மைத்திரி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களாகின்றன. வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மைத்திரி அரசு தாமதம் காட்டுகின்றது. காலஅவகாசம் வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் மைத்திரி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். இதற்கு சர்வதேசம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க செனட் உறுப்பினர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க செனட் உறுப்பினர்கள் கொழும்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பில் சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,
மஹிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்பட்டன. இதனால் எமது மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர். கொடூர ஆட்சியால் தமிழ் மக்கள் தமது உறவுகளை இழந்தனர்; உறவுகளைத் தொலைத்தனர்; உறவுகளைப் பிரிந்தனர். சொந்த மண்ணை இழந்து அகதிகளாகினர். இந்தத் துயரங்களுக்கு முடிவுகட்டவேண்டும் என்ற நோக்கில்தான் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்பி மைத்திரி அரசை ஆட்சிபீடத்தில் ஏறவைத்தனர் தமிழ் மக்கள்.
மைத்திரி அரசு ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களாகின்றன. இந்த அரசின் ஆட்சிக்காலத்தில் இதுவரைக்கும் கெடுபிடிகள் இல்லை. ஆனால், வழங்கிய வாக்குறுதிகளை - கருமங்களை நிறைவேற்றுவதில் மைத்திரி அரசு தாமதம் காட்டுகின்றது. காலஅவகாசம் வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் மைத்திரி அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும். இதற்கு சர்வதேசம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும்.
வலிகாமம், சம்பூர் மட்டுமல்ல, வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும். மக்கள் வாழ்க்கையில் இராணுவத்தின் தலையீடு நிறுத்தப்படவேண்டும். வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் குறைக்கப்படவேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும். காணாமல்போனோர் மற்றும் இரகசியத் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டோர் தொடர்பில் அரசு பொறுப்புக்கூற வேண்டும்.
அத்துடன், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண மைத்திரி அரசு உடன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் சம்பந்தன் எம்.பி. வலியுறுத்தினார்.


Sri Lanka Rupee Exchange Rate