வத்திக்கானில் தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்ததா அல்கொய்தா?
சமீபத்தில் இத்தாலியின் 7 வெவ்வேறு மாகாணங்களில் திடீர் ரெயிடு நடத்தி அல்கொய்தா வலையமைப்பைச் சேர்ந்த 18 மர்ம நபர்கள் அடையாளம் கண்டுள்ள இ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_612.html
இதைவிட 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பெஷாவர் சந்தையில் 100 பேருக்கும் அதிகமானவர்களைப் பலி கொண்ட குண்டுத் தாக்குதலுக்குப் பின்னணியிலும் இவர்கள் செயற்பட்டிருப்பதாகத் தாம் நம்புவதாகவும் இன்று வெள்ளிக்கிழமை இத்தாலி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இத்தாலியின் சர்டினியாத் தீவின் தலைநகரான கக்லியாரி இல் வைத்து இந்த சந்தேக நபர்க்ளிடம் நடத்தப் பட்ட மிக நீண்ட விசாரணைக்குப் பின்னரே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகில் வாழும் சுமார் 1.2 பில்லியன் கத்தோலிக்கர்களின் மதத் தலைமைப் பீடமான வத்திக்கானில் 2010 ஆம் ஆண்டு போப் பெனெடிக்ட் XVI பதவி வகித்த காலத்தில் தான் இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப் பட்டிருந்ததாகத் தெரிய வந்துள்ளது.
குறித்த ரெயிடைத் தலைமையேற்று நடத்திய தீவிரவாதத் தடுப்புப் போலிஸ் படையின் அதிகாரியான மாரியோ கார்ட்டா தகவல் தருகையில் அண்மையில் நடத்தப் பட்ட ரெயிடானது இத்தாலியில் மேற்கொள்ளப் பட்ட மிக முக்கியமான ரெயிடுகளில் ஒன்று எனவும் கைது உத்தரவு பிறப்பிக்கப் பட்ட அனைவரும் சார்டினியாத் தீவில் குறைந்தது 2005 ஆம் ஆண்டு முதற்கொண்டு நன்கு ஒழுங்கமைக்கப் பட்ட தீவிரவாதக் குழுவாக செயற்பட்டு வந்துள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் குடியுரிமை உடைய நபர்களால் அமைக்கப் பட்ட குறித்த குழுவைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாகவும் இன்னும் இருவர் இத்தாலியில் தான் மறைந்து இருப்பதாகவும் ஏனைய 7 சந்தேக நபர்களும் பாகிஸ்தானில் மறைந்து இருக்கலாம் எனவும் கார்ட்டா தகவல் அளித்துள்ளார். முக்கிய ஐரோப்பிய நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகியவை அண்மைக் காலமாக சில தீவிரவாதத் தாக்குதல்களுக்கு இலக்காகி வந்துள்ள நிலையில் இத்தாலி இவற்றில் இருந்து தப்பித்து வந்தது. ஆனால் சமீபத்தில் ISIS போராளிகள் வெளியிட்ட வீடியோவில் நாங்கள் இத்தாலிக்குத் தெற்கே ரோமிலும் ஊடுருவி உள்ளோம் என எச்சரிக்கை விடுத்து இருந்ததை அடுத்து இத்தாலி அரசு தன்னை உஷார் படுத்திக் கொண்டது. இந்நிலையில் கைதான குறித்த சந்தேக நபர்கள் திட்டமிட்ட படி இத்தாலியில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்ள முடியாமல் போனதற்கு என்ன காரணம் எனத் தெளிவாகத் தெரியவில்லை. இருந்த போதும் இத்தாலியைச் சேர்ந்த சில குடிமக்கள் இத்தீவிரவாதிகளின் நோக்கம் எம்மை அச்சமடையச் செய்வது தான் என்றும் ஆனால் எமது நாட்டின் காவற்துறையும் பாதுகாப்பு அதிகாரிகளும் விழிப்புடன் செயற்பட்டு வருவதால் தாம் இதற்கு அஞ்சவில்லை எனவும் கருத்துத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.