மறைந்த லீ பற்றி வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய விமர்சனம்: - சிங்கப்பூர் வாலிபர் கைது
நவீன சிங்கப்பூரின் பிதாமகனும், அந்த நாட்டின் முதல் பிரதமருமான லீ குவான் யீ, தனது 91–வது வயதில் உடல்நலக்குறைவால் கடந்த 23–ந் தேதி மரணம் அடைந்...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post.html

நவீன சிங்கப்பூரின் பிதாமகனும், அந்த நாட்டின் முதல் பிரதமருமான லீ குவான் யீ, தனது 91–வது வயதில் உடல்நலக்குறைவால் கடந்த 23–ந் தேதி மரணம் அடைந்தார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகத்தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது உடல் கடந்த 29–ந் தேதி தகனம் செய்யப்பட்டது. ஒரு குட்டி நாடான சிங்கப்பூரை, உலகமே வியந்து பார்க்கக்கூடிய அளவுக்கு மாற்றிய அந்தத் தலைவரின் மறைவு, தெற்காசிய நாடுகளையெல்லாம் துயரத்தில் ஆழ்த்திய வேளையில், அதே சிங்கப்பூரை சேர்ந்த ஆமோஸ் யீ என்ற வாலிபரை கொண்டாடவும் வைத்துள்ளது.
லீ குவான் யீயின் மறைவை கொண்டாடிய அந்த வாலிபர், இது தொடர்பாக ‘யு டியூப்’ சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்ளுடன் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.
8 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சி தொகுப்புக்கு அவர், ‘கடைசியில் லீ குவான் யீ இறந்து விட்டார்’ என தலைப்பிட்டுள்ளார்.
லீ குவான் யீயை அவர் பயங்கரமான மனிதர் என வர்ணித்ததுடன், இது தொடர்பாக தன் மீது வழக்கு தொடருமாறு லீயின் மகனும், தற்போதைய பிரதமருமான லீ ஷியான் லூங்குக்கு சவாலும் விடுத்துள்ளார்.அந்த வீடியோவில் அவர், லீ குவான் யீயையும், ஏசு பிரானையும் ஒப்பிட்டு, ‘இருவருமே அதிகார பசி உடையவர்கள், தீங்கு செய்யும் நோக்கம் உடையவர்கள், ஆனால் தாங்கள் இரக்கம் உடையவர்கள், கருணைமயமானவர்கள் என்று மற்றவர்களை தவறாக வழிநடத்தியவர்கள்’ என்று வாய்க்கு வந்தபடி விமர்சித்துள்ளார்.
மேலும் தனது சொந்த வலைத்தள பக்கத்தில் லீ குவான் யீயையும், இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரையும் இணைத்து ஆபாச ‘கிராபிக்’ கேலிச்சித்திரம் வரைந்து, வெளியிட்டுள்ளார். இந்த வீடியோக்களை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்துள்ளனர். தற்போது இந்த வீடியோக்கள் அகற்றப்பட்டு விட்டன.
இந்த வீடியோக்களை வெளியிட்டது சிங்கப்பூர் சட்டத்தின்படி குற்றம் என்பதால், இது தொடர்பாக சிங்கப்பூர் போலீசில் ஏராளமானோர் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், ஆமோஸ் யீயை கைது செய்தனர். அவரை சிங்கப்பூர் மாவட்ட கோர்ட்டில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் வாசித்து காட்டப்பட்டபோது அவர் புன்னகைத்தபோதும், படபடப்புடன் காணப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
வருத்தம் தெரிவித்த தந்தை
இந்த வழக்கின் விசாரணை முடியும் வரையில் அவர் சர்ச்சைக்குரிய எந்த விமர்சனத்தையும் சமூக வலைத்தளங்களில் வெளியிடக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டார். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 17–ந் தேதி நடக்கிறது. கோர்ட்டுக்கு வந்திருந்த ஆமோஸ் யீயின் தந்தை கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட்டு, ’’ பிரதமர் லீயிடம் எனது வருத்தத்தை தெரிவிக்க இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்’’ என கூறினார்.
ஆனால் ஆமோஸ் யீயோ, புன்னகைத்தவாறும், பத்திரிகையாளர்களை நோக்கி கையசைத்தவாறும் அங்கிருந்து விடைபெற்றார்.