நேபாள பூகம்பத்தில் 80 லட்சம் பேருக்கு பாதிப்பு: ஐ.நா
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 14 லட்சம் பேர் உணவுக்...
http://kandyskynews.blogspot.com/2015/04/80_28.html
நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக 80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 14 லட்சம் பேர் உணவுக்காக பரிதவித்துவருகின்றனர்.
சர்வதேச நாடுகள் அளிக்கும் உதவிப் பொருட்கள் வர ஆரம்பித்துவிட்டாலும், மருந்து, மருத்துவ உபகரணங்கள், உணவு போன்றவற்றுக்கான தட்டுப்பாடு இன்னமும் நீடிக்கிறது.
சனிக்கிழமையன்று நேபாளத்தில் 7.8 ரிக்டார் அளவுக்கு ஏற்பட்ட பூகம்பத்தினால், காட்மாண்டு நகரில் கட்டங்கள் நொறுங்கிப் போயிருக்கின்றன. இந்த பூகம்பம் கிராமப்புற பகுதிகளிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த பூகம்பத்தினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4310ஆக உயர்ந்திருப்பதாக அரசு அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 8,000 பேர் காயமடைந்திருப்பதாக உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லட்சுமி பிரசாத் தகால் தெரிவித்துள்ளார்.
நேபாளத்திலும் அதனை அடுத்துள்ள பகுதிகளிலும் தொடர்ந்து அதிர்வுகள் ஏற்பட்டுவருகின்றன. இதனால், காட்மாண்டு நகரில் வீடுகளில் உறங்குவதற்கு அச்சமடைந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள், வீதிகளில் படுத்து உறங்கினர்.
தண்ணீர், உணவு, மின்சாரம் போன்றவற்றுக்குப் பற்றாக்குறை நிலவுகிறது. தொற்றுநோய் பரவக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
"ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படியும், இந்த பூகம்பம் குறித்த சமீபத்திய விவரங்களின்படியும் 80 லட்சம் பேரும் 39 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதில் மிகவும் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களில் 20 லட்சம் பேர் வசிக்கிறார்கள்" என ஐக்கிய நாடுகள் சபையின் உறைவிட ஒருங்கிணைப்பாளரின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த 81 ஆண்டுகளில் நேபாளத்தில் ஏற்பட்டதிலேயே மிக மோசமான பூகம்பம் இதுதான். இதனால், எவரஸட் சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏவரஸ்ட்டில் ஏற்பட்ட விபத்துகளில் மிக மோசமான விபத்து இது.
200க்கும் மேற்பட்டவர்கள் மலைப்பகுதியில் சிக்கியிருக்கின்றனர். இருந்தபோதும், ஹெலிகாப்டர்களின் மூலம் அவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டுவருகின்றனர். திங்கட்கிழமையன்று 60 பேர் மீட்கப்பட்டனர் என சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட நேபாளத்தின் முழு ராணுவமும் காவல்துறையும் தேடுதல் பணியிலும் மீட்புப் பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கம் நடந்து 50 மணி நேரத்திற்குப் பிறகும், இடிபாடுகளிலிருந்து மக்கள் மீட்கப்பட்டுவருகின்றனர்.
நிறைய பேர் காயங்களுடன் மருத்துவமனைகளை அணுகிவருவதால், மருத்துவர்கள் திணறிவருகின்றனர்.
போர்வைகள், ஹெலிகாப்டர்கள், மருத்துவர்கள், ஓட்டுனர்கள் போன்றவற்றுக்குப் பெரும் தேவை இருப்பதாக நேபாள அரசு கூறியுள்ளது.
"எங்களுக்கு மருத்துவ அணிகளையும் சிறப்பு நிவாரணப் பொருட்களையும் அளித்து உதவ வேண்டுமென வெளிநாடுகளைக் கேட்டுக்கொள்கிறோம். இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட, வெளிநாட்டினரின் நிபுணத்துவம் எங்களுக்குத் தேவைப்படுகிறது" என அந்நாட்டின் முதன்மைச் செயலர் லீலா மணி படேல் தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் உதவிகளை அனுப்பிவைத்துள்ளன.