ஐஎஸ் அழிக்கத் துவங்கியிருக்கும் ஹத்ரா நகரம், 2,000 ஆண்டுகள் பழமையானது. பாக்தாத் நகருக்கு வடமேற்கில் 290 கி.மீ. தூரத்தில் மோசுல் நகருக்க...
 |
ஐஎஸ் அழிக்கத் துவங்கியிருக்கும் ஹத்ரா நகரம், 2,000 ஆண்டுகள் பழமையானது. |
பாக்தாத் நகருக்கு வடமேற்கில் 290 கி.மீ. தூரத்தில் மோசுல் நகருக்கு தென்மேற்கில் 110 கி.மீ. தூரத்திலும் ஹத்ரா அமைந்திருக்கிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்பாக, பார்த்திய சாம்ராஜ்யம் இருந்த காலத்தில் இந்த ஹத்ரா நகரம் உருவாக்கப்பட்டது. தற்போது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக இந்த இடம் பட்டியலிடப்பட்டிருக்கிறது.
"ஹத்ரா மிகப் பெரிய இடம். அந்த காலகட்டத்தைச் சேர்ந்த பல கலைப்பொருட்கள் அங்கே சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன." என குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சையது மமுஸினி தெரிவித்திருக்கிறார். அந்தத் தலத்தில் இருந்த வெள்ளி மற்றும் தங்கத்தை ஐஎஸ் இயக்கத்தினர் எடுத்துச் சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மோசுல் நகரும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் 2014 ஜூனிலிருந்து ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
 |
ஹத்ரா இடிபாடுகள் யுனெஸ்கோ பாரம்பரியத் தலமாக பட்டியலிடப்பட்டு பாதுகாக்கப்பட்டவை |
ஈராக்கில் உள்ள பதிவுசெய்யப்பட்ட 12,000 புராதனத் தலங்களில் 1,800 தலங்கள் இங்கே இருக்கின்றன.
பழங்கால ஈரானில் பார்த்திய சாம்ராஜ்யம் மிகப் பெரிய அரசியல், கலாச்சார மையமைக விளங்கியது. இரண்டாம் நூற்றாண்டில், பார்த்திய சாம்ராஜ்யம் உச்சத்தில் இருந்தபோது தற்போதைய பாகிஸ்தானிலிருந்து சிரியா வரை இதன் பரப்பு விரிந்திருந்தது.
ஹத்ரா எந்த அளவுக்கு அழிக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த வாரத் துவக்கத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் பழங்கால அஸிரிய நகரமான நிம்ருத்தை அழிக்கும் பணியைத் துவங்கினர்.
ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்திவரும் ஐஎஸ், கோவில்களும் சிலைகளும் போலி சின்னங்கள் என்றும் அவை அழிக்கப்பட வேண்டியவை என்றும் கூறிவருகிறது.