தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்பு நி...
தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்பு நிரந்தர தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கை மன்றக் கல்லூரியில் புத்திஜீவிகளையும் கலைஞர்களையும் சந்தித்து சிநேகபூர்வமாக கலந்துரையாடிய போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் தம்புள்ளை பள்ளிவாசலுக்கும் கூரகல ஜெய்லானி பள்ளிவாசல்களுக்கும் சவால்கள் ஏற்பட்டன. அந்தச் சவால்கள் இன்னும் தொடர்கின்றன. முன்னாள் ஜனாதிபதி முஸ்லிம்களின் பிரச்சினைகளை அலட்சியம் செய்ததால் முஸ்லிம்கள் தேர்தலில் உங்களுக்கு வாக்களித்தார்கள்.
உங்கள் வெற்றியின் பங்காளர்களான முஸ்லிம்களின் தம்புள்ளை மற்றும் ஜெய்லானி பள்ளிவாசல்களின் பிரச்சினைகள் எப்போது தீர்த்துவைக்கப் போகிறீர்கள் என்று விடிவெள்ளி வினவிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு பதிலளித்தார். ஜனாதிபதி நிகழ்வில் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதித் தேர்தலில் தோற்றவர்கள் விட்டுப்போக விரும்பவில்லை. 10 வருடகாலம் அதீத அதிகாரங்களைப் பாவித்து மோசமான ஆட்சியை முன்னெடுத்தார்கள். முன்னைய ஆட்சியாளர்கள் பொன்சேக்காவுக்கும் பிரதம நீதியரசர் ஷிராணிக்கும் செய்த அநீதிகளைப் போல் எதனையும் நாம் செய்யப் போவதில்லை.
தேசிய அரசாங்கம் அமைப்பதில் எதிர்க்கட்சிக்கும் அரசாங்கத்துக்கும் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அரசியல் யாப்பு திருத்தம்பற்றி ஆலோசிக்கப்படுகிறது.
இதனை அவசரமாக செய்துவிட முடியாது அனுபவசாலிகள் புத்திஜீவிகளின் ஆலோசனைகள் பெறப்பட்டுவருகின்றன. இது பொது மக்கள் மத்தியில் கலந்தரையாடலுக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது.
ஊழல் மோசடிகளில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என சிலர் எதிர்பார்க்கின்றனர். எந்த விமர்சனங்கள் எழுந்தாலும் தீர்வுகளும் தண்டனைகளும் நாட்டின் சட்டம் மற்றும் அரசியல் குணாதிசயங்களுக்கும் அமைவாகவே வழங்கப்பட வேண்டும்.
எனவே எமக்கு பொறுமை அவசியமாகும். நாட்டில் அமுலிலுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும். விருப்பு வாக்குமுறைமையை இல்லாமற் செய்து புதிய தேர்தல் முறைமையை அமுலுக்கு கொண்டுவர வேண்டும்.
நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் என்னைச் சந்திக்க முயற்சிக்கின்றனர். அனைவரையும் சந்திக்க எனக்கு வாய்ப்புக் கிடைப்பதில்லை உங்கள் தேவைகளை எழுதி எனது வீட்டுக்குக் கொண்டு வந்து கேட்டில் கையளியுங்கள் உங்கள் ஆலோசனைகளை எழுத்து மூலம் அனுப்புங்கள் என்றார்.