வடகொரிய தூதரக அதிகாரியை வெளியேற்றியது வங்கதேசம்
27 கிலோ தங்கத்தை தங்கள் நாட்டிற்குள் கொண்டுவர முயன்று பிடிபட்ட, வடகொரிய தூதரக அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேறும்படி வங்க தேசம் உத்தரவிட்டுள்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_583.html
27 கிலோ தங்கத்தை தங்கள் நாட்டிற்குள் கொண்டுவர முயன்று பிடிபட்ட, வடகொரிய தூதரக அதிகாரியை நாட்டைவிட்டு வெளியேறும்படி வங்க தேசம் உத்தரவிட்டுள்ளது.

டாக்காவிலிருக்கும் வட கொரியத் தூதரகத்தில் முதல் செயலராகப் பணியாற்றும் சோன் யங் நாம், வெள்ளிக் கிழமையன்று சிங்கப்பூர் வழியாக வங்கதேசத்திற்கு வரும்போது பிடிபட்டார்.
தூதரக அதிகாரி என்பதால், அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை. விடுதலையும் செய்யப்பட்டார். ஆனால், இது நிச்சயமாக ஒரு கடத்தல் என்பதை சுங்கத் துறை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
விமான நிலையத்தில் சோனின் பையை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட முன்றபோது, அவர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். பிறகு, அந்தப் பையில் 1 மில்லியன் பவுண்டு மதிப்புள்ள தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தையடுத்து, வங்க தேசத்திற்கான வடகொரியத் தூதர் ரி சோங்-ஹையோனை வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு அழைத்து, சோனை உடனடியாக திருப்பி அனுப்பும்படி கூறப்பட்டது.
"வட கொரியாவில் அவர் மீது வழக்குத் தொடரும்படியும், அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்கும்படியும் வடகொரியத் தூதரிடம் கூறியிருக்கிறோம்" என வெளியுறவுத் துறைச் செயலர் முஹமது சஹிதுல் ஹாக் தெரிவித்துள்ளார்.
"எதிர்காலத்தில் தூதரக அதிகாரிகள் வேறு யாராவது குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவரிடம் தெரிவித்திருக்கிறோம்" என்றும் அவர் கூறினார்.
திங்கட்கிழமையன்று இரவு சோன் வங்கதேசத்தைவிட்டு புறப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்க தேசத்திலிருக்கும் இரண்டு சர்வதேச விமான நிலையத்திலிருந்தும் கடந்த 22 மாதங்களில் 1000 கிலோ தங்கத்தை கைப்பற்றியிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


Sri Lanka Rupee Exchange Rate