உ லகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 9வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இன்று ஹாமில்டன் நகரில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்...
உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 9வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இன்று ஹாமில்டன் நகரில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை போட்டியில் ஹாமில்டன் நகரில் இந்திய அணி அயர்லாந்து அணியை எதிர்கொண்டது . இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பேட் செய்தது. அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் போர்ட்ஃபீல்ட் 67 ரன்களும் ஸடிர்லிங் 47 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர்.
அடுத்து வந்த எட்ஜாய்ஸ் 2 ரன்களிலும் வெளியேறினாலும், ஓ பிரையன் அபாரமாக விளையாடி 75 ரன்களை எடுத்தார். மறுமுனையில் பல்பிரின் 24 ரன்கள் எடுத்தார். கடைசிக்கட்ட வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில் 49 ஓவர்களில் அயர்லாந்து அணி 259 ரன்களை எடுத்து ஆல்அவுட் ஆனது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தொடர்ந்து ஐந்தாவது முறையாக எதிர் அணியை ஆல்அவுட் ஆக்கி புதிய சாதனையை படைத்தது- இதற்கு முன் நியூசிலாந்து அணியும் இந்த உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் தொடர்ச்சியாக எதிராணிகளை ஆல்அவுட் செய்துள்ளது.
முதலில் பாகிஸ்தான் அணியை 224 ரன்களில் இந்திய அணி முடித்தது.அடுத்த ஆட்டததில் தென்ஆப்ரிக்க அணி 177 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பின்னர் யு.ஏ.இ அணி 102 ரன்களில் வீழ்ந்தது. அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி 182 ரன்களில் ஆல்அவுட் ஆனது. அந்த வகையில் இந்தியாவை எதிர்த்து 250 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தியுள்ளது அயர்லாந்து அணி. உண்மையை சொல்லப்போனால் பந்துவீச்சுதான் இந்திய அணிக்கு பலவீனம் என்றார்கள். இப்போது பந்துவீச்சுதான் இந்திய அணிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய வீரர்கள் ஷிகன் தவான், ரோகித் சர்மா ஜோடி அயர்லாந்து பந்துவீச்சை பின்னி எடுத்தது. 3 பவுண்டரி 3 சிக்சர்களுடன் ரோகித் சர்மா 64 ரன்கள் எடுத்து வீழ்ந்தார். தொடர்ந்து விராட் கோலி களமிறங்கினார். ஷிகர் தவான் 84 பந்துகளில் சதமடித்தார். இதில் 11 பவுண்டரிகளும் 5 சிக்சர்களும் அடங்கும்.ஆனால் அடுத்த பந்தை சந்தித்த ஷிகர் தவான் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் விராட் கோலியுடன் ரஹானே இணைந்தார். இந்த ஜோடி எளிதாக இந்திய அணிக்கு வெற்றி தேடி கொடுத்தனர். இந்திய அணி 36.5 ஓவரில் 260 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோலி 44 ரன்களும், ரஹானே 33 ரன்களும் எடுத்தனர்.
இத்துடன் இந்திய அணி உலகக் கோப்பை போட்டியில் தொடர்ச்சியாக 9வது வெற்றியை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதில் கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 4 ஆட்டங்களும் இந்த உலகக் கோப்பையில் 5 ஆட்டங்களும் அடங்கும். இதற்கு முன் கடந்த 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் கங்குலி தலைமையில் 8 வெற்றிகள் பெற்றதே சாதனையாக இருந்தது. இந்திய தனது கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது. அயர்லாந்து கடைசி ஆட்டத்தில் பாகிஸ்
தானை சந்திக்கிறது.