வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளில் காலிறுதி ஆட்டத்தில் வங்கதேச அணியை இந்தியா 109 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையிறுதிக்குள்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_287.html
உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளில் காலிறுதி ஆட்டத்தில் வங்கதேச அணியை இந்தியா 109 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்திருக்கிறது.
இன்று ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடந்த இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் முடிவில் 50 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்த இந்திய அணி 302 ரன்களைப் பெற்றது.
வங்கதேச அணிக்கு வெற்றி இலக்காக 303 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் சுறுசுறுப்பாகக் களம் இறங்கிய வங்கதேச அணி, இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங்கை எதிர்கொள்ள முடியாமல், 45 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டுள்ளது.
வங்கதேச அணி, ஆட்டம் தொடங்கிய ஏழாவது ஓவரில் இரண்டு விக்கட்டுக்களை இழந்தது.
முதலில் இந்திய அணி சார்பாக ஆட்டத்தை துவக்கிய ரோஹித் சர்மா- சிகார் திவான் ஆகியோர் கூட்டாக மிக நிதானமாக ஆடினர். 16.3 ஓவர்களில் இந்திய அணி 75 ரன்களைப் பெற்ற போது சிகார் திவான் ஆட்டமிழந்தார். அப்போது அவர் 30 ரன்களைப் பெற்றிருந்தார்.
பின்னர் மூன்று ரன்களை மாத்திரமே பெற்ற நிலையில் விராட் கோலியும் அதனை அடுத்து ரஹானேவும் ஆட்டமிழந்தனர். ரஹானே ஆட்டமிழக்கும் போது இந்திய அணி 115 ரன்களை பெற்றிருந்தது.
போட்டியின் ஆரம்பம் முதல் களத்தில் நிதானமாக ஆடிவந்த ரோஹித் சர்மா 126 பந்துகளுக்கு 137 ரன்களைக் குவித்தார். இந்திய அணி 273 ரன்களை எடுத்த போது ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.
சுரேஸ் ரைனா 65 ரண்களும் தோனி ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இந்தப் போட்டியில் ஆட்ட நாயகனாக இந்திய அணியின் ரோஹித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாளை வெள்ளிக்கிழமை அடிலெட்டில் நடைபெறவுள்ள மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
இதில் வெல்லும் அணியுடன் இந்தியா மார்ச் 26ம் தேதி நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் மோதும்.
இந்தப் போட்டியில் இந்தியா வென்றது இந்திய அணித்தலைவர் தோணியின் தலைமையில் இந்தியா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் வெல்லும் 100வது வெற்றியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.