கிறிஸ்தவ பள்ளியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள்; பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு
டெல்லியில் கிறிஸ்தவ பள்ளியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். கண்காணிப்பு கேமராக...


கண்காணிப்பு கேமராக்கள் சேதம்
டெல்லியில் கடந்த சில நாட்களாக கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இது தொடர்பாக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், நேற்றும் கிறிஸ்தவ பள்ளிக்கூடம் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானது.
டெல்லி வசந்த் விகார் பகுதியில் கிறிஸ்தவ பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று காலையில் புகுந்த மர்ம நபர்கள் சிலர், முதலில் அங்கிருந்த 6 கண்காணிப்பு கேமராக்களை உடைத்ததுடன், அதன் மின் இணைப்புகளையும் சேதப்படுத்தினர்.
முதல்வர் அறை சூறை
பின்னர் பள்ளி முதல்வரின் அலுவலகத்தை சூறையாடிய அவர்கள், அங்கிருந்த அலமாரிகளில் இருந்த அனைத்து ஆவணங்களையும் எடுத்து வீசினர். அத்துடன் அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.12 ஆயிரம் பணத்தையும், நன்கொடை பெட்டியையும் திருடிச்சென்றனர்.
காலையில் பள்ளிக்கு வந்த வேலைக்கார பெண், பள்ளி முதல்வரின் அலுவலகம் மற்றும் நிர்வாக அலுவலகங்கள் திறந்து கிடப்பதை கண்டு, பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த அவர்கள், பள்ளி தாக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
விரைவில் பிடிபடுவர்
இதைத்தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. பின்னர் இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் வசந்த் விகார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டதால், பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் பதிவான தகவல்கள் மூலம் போலீசார் விசாரணையை தொடங்கினர். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர் என அவர்கள் தெரிவித்தனர்.
திருட்டு சம்பவம்தான்
இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரியும், பள்ளியின் முன்னாள் மாணவியுமான ஸ்மிரிதி இரானி, உடனே பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் அவர் பள்ளி முதல்வர் அருட்சகோதரி லூசியை சந்தித்து சம்பவத்தை கேட்டறிந்தார்.
டெல்லியில் கிறிஸ்தவ நிறுவனங்களில் கடந்த சில நாட்களில் நடந்துள்ள 6-வது தாக்குதல் சம்பவம் இதுவாகும். எனினும் இது ஒரு திருட்டு சம்பவம்தான் என போலீசாரும், பள்ளி நிர்வாகமும் தெரிவித்து உள்ளன.
கைது செய்ய மோடி உத்தரவு
இந்த நிலையில் பள்ளிக்கூட தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும், டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்சியை பிரதமர் மோடி உடனே அழைத்து பேசினார். அப்போது டெல்லியில் குற்றங்கள் அதிகரித்து வருவது குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த பிரதமர், கிறிஸ்தவ பள்ளியில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும் அங்கு சமீபத்தில் நடந்த தாக்குதல்களில் தொடர்புடையவர்களையும் விரைவாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
கெஜ்ரிவால் கண்டனம்
மேலும் உள்துறை செயலாளர் எல்.சி.கோயலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர், டெல்லியில் அதிகரித்து வரும் குற்றங்கள் மற்றும் தாக்குதல்களில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும் தலைநகரில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர் கூறியதாகவும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே கிறிஸ்தவ பள்ளி மீதான தாக்குதலுக்கு, டெல்லியில் புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது போன்ற தாக்குதல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என அவர் கூறியுள்ளார்.