ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைத் தாக்கியது பெரும்புயல்
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கடற்கரையை பேரழிவை ஏற்படுத்தக்கூடிய புயல் தாக்கியுள்ளது. இதன் காரணமாக கடற்கரையை ஒட்டியுள்ளவர்கள் வெளியேறிவருக...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_285.html
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கடற்கரையை பேரழிவை ஏற்படுத்தக்கூடிய புயல் தாக்கியுள்ளது. இதன் காரணமாக கடற்கரையை ஒட்டியுள்ளவர்கள் வெளியேறிவருகின்றனர்.
மார்சியா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலின் காரணமாக, கடுமையான காற்று வீசுவதோடு பெரும் மழையும் பெய்து வருகிறது. கடலில் உயரமான அலைகளும் ஏற்பட்டுள்ளன.
செயிண்ட் லாரன்ஸ் மற்றும் யெப்போன் பகுதிக்கு இடையில் கரையைக் கடந்த இந்தப் புயல், ஐந்தாம் வகைப் புயலாக வகைப்படுத்தப்பட்டிருந்தது. பிறகு, நான்காம் வகைப் புயலாக மாற்றப்பட்டுள்ளது.
இது தவிர, லாம் என்றொரு புயலும் வட மாகாணத்தைத் தாக்கியுள்ளது. இதன் காரணமாக ஆயிரக் கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் புயலானது எல்சோ தீவைத் தாக்கிவிட்டு, தென் மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. பல இடங்களில் கூரைகள் பிய்த்து எறியப்பட்டிருப்பதாகவும் மரங்கள் பிடுங்கி எறியப்பட்டிருப்பதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் புயல் தற்போது உள்நோக்கி நகர்ந்துவிட்ட நிலையில், யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
குயின்ஸ்லாந்தில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் சில வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் மரங்கள் சாய்ந்திருப்பதாகவும் அம்மாநில முதல்வர் அனஸ்டேசியா பாலசுக் தெரிவித்திருக்கிறார்.
லிவிங்ஸ்டோன், யெப்போன் பகுதியில் 33 ஆயிரம் பேரும் ராகாம்ப்டனில் 20,000 பேரும் மின்சாரமின்றி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
170க்கும் மேற்பட்ட பள்ளிகள், குழந்தைகள் காப்பகங்கள் மூடப்பட்டுள்ளன. லேடி எலியட் தீவு, ஹெரோன் தீவு ஆகியவற்றில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டிருக்கின்றனர்.
பெரும் மழையின் காரணமாக வெள்ளம் ஏற்படலாம் என்ற அச்சத்தால் குயின்ஸ்லாந்தின் பெரிய நகரமான பிரிஸ்பேனில் 90 ஆயிரம் மணல் மூட்டைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மிகத் தீவிரமான புயல் என்று இதனைக் குறிப்பிட்டிருக்கும் ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அப்பாட், “உயிரிழப்பின்றி இதைக் கடந்துவிட முடியும் என நம்புவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
புயல் தாக்குவதற்கு முன்பாகவே, கடற்கரைப் பகுதிகளில் வசித்த பலர் வெளியேற்றப்பட்டுவிட்டனர்.
பிரிஸ்பேனுக்கு வடக்கில் சுமார் 670 கி.மீ. தூரத்தில் இருக்கும் மாக்கே, ப்ரொசெர்பைன், யெப்போன் போன்ற நகரங்களில் அவசரகால மையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.
2013ஆம் ஆண்டில் குயின்ஸ்லாந்தைத் தாக்கிய ஆஸ்வால்ட் புயலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். பல இடங்கள் வெள்ள நீரில் மூழ்கின.


Sri Lanka Rupee Exchange Rate