கருமலையூற்று முஸ்லிம்கள் அடையாள உண்ணாவிரதம்
கருமலையூற்று பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை திருகோணமலை மாவட்டம் சீனன்குடா பிரதேசத்திலுள்ள கருமலையூற்று மு...

http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_134.html

கருமலையூற்று பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகை
திருகோணமலை மாவட்டம் சீனன்குடா பிரதேசத்திலுள்ள கருமலையூற்று முஸ்லிம்கள் தமது காணிகளைக் கோரி இன்று ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் கருமலையூற்று பள்ளிவாசல் காணி முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தங்களால் முன்வைக்கப்பட்டதாக கருமலையூற்று பள்ளிவாசல் நிர்வாகத்தின் செயலாளரான மொஹமட் இஸ்மாயில் ஜவாஹிர் கூறுகின்றார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பள்ளிவாசலுக்குரிய 140 பேர்ச் பரப்புக் காணியில் 20 பேர்ச் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து கருமலையூற்று பள்ளிவாசலுக்குரிய மிகுதிக் காணியும் விடுவிக்கப்பட்டு நிர்வாகத்திடம் கையளிக்கப்பட வேண்டும் என்றும் கருமலையூற்றுப் பகுதியில் மக்கள் செறிந்து வாழும் பகுதியிலுள்ள விமானப்படை நிலைகள் அகற்றப்பட வேண்டும் என்றும் மக்கள் கோரியுள்ளனர்.
மார்பிள் பீச்- கடலோர சுற்றுலா மையம் விமானப்படையிடமிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளுராட்சி சபை அல்லது மாகாண சபையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் கோரினர்.
மார்பிள் பீச் பகுதியை அண்மித்த 603 ஏக்கர் நிலத்தை சீனன்குடா விமானப் படையின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சினால் 2012-இல் எடுக்கப்ட்ட தீர்மானத்தை ரத்துசெய்ய வேண்டும் என்றும் கருமலையுற்று பகுதி மீனவர்கள் சுதந்திரமாக கடற்தொழிலில் ஈடுபடுவதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
தங்களின் கோரிக்கைகள் தொடர்பில், திருகோணமலை மாவட்ட மக்கள் பிரதிநிதியான உள்ளக போக்குவரத்து துணையமைச்சர் எம். எஸ். தௌபீக் சில உறுதிமொழிகளை அளித்துள்ளதாக கருமலையூற்று பள்ளிவாசல் நிர்வாகத்தின் செயலாளர் மொஹமட் இஸ்மாயில் ஜவாஹிர் கூறினார்.