வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் 2 ஆண்டு சிறை ; புதிய சட்டம்
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு லஞ்சப் பணம் கொடுப்பவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டுவர...


தேர்தல் சமயங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, தங்க நகை, ஆடைகள், பரிசுபொருட்கள் அளித்து வாக்கு கேட்கும் கலாசாரம் இந்தியாவில் வேகமாக பரவி நீக்கமற நிறைந்துவிட்டது.
2012ம் ஆண்டிலேயே இதற்கான சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்று மத்திய உள்துறைக்கு, தலைமை தேர்தல் கமிஷன் பரிந்துரைத்தது.
வேறு யாரும் புகார் தராமலேயே, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதை நேரில் காணும் தேர்தல் அதிகாரி, தாமே முன்வந்து வழக்கு பதிவு செய்யும் அதிகாரம் வழங்கவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிக பட்சமாக 2 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வழங்க வகை செய்யும்படி சட்டத்தை திருத்த வேண்டும் என்பதும் தேர்தல் கமிஷனின் கோரிக்கை ஆகும்.
இந்த தேர்தல் சட்டத்தை திருத்தும் நடவடிக்கையில் தற்போது மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பியுள்ள தகவலில், குற்றவியல் நடைமுறை சட்டத்திருத்தப் பணியை தொடங்கி உள்ளதாகவும், இது தொடர்பான வரைவு மசோதாவை தயாரிக்கும்படி சட்டத்துறைக்கு தகவல் அனுப்பி உள்ளதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.
புதிய சட்ட திருத்த மசோதா வருகிற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.