நகர அபிவிருத்தி, நீர் விநியோக திட்டங்களுக்கு உதவ சவுதி வாக்குறுதி: அமைச்சர் ஹகீம்
நகர அபிவிருத்தி, நீர் விநியோகம் போன்றவற்றிற்கு சவூதி அபிவிருத்தி நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ...


மறைந்த சவூதி மன்னன் அப்பதுல்லாஹ்பின் அப்துல் அஸீஸின் ஜனாஸா நல்லடக்கத்தை அடுத்து ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் விஷேட பிரதிநிதியாக அங்கு சென்ற தூதுக் குழுவிற்கு தலைமை தாங்கிய நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் புதிய மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் அரச குடும்பத்தினரை சந்தித்து ஜனாதிபதியினதும், நாட்டு மக்களினதும் அனுதாபத்தை தெரிவித்த பின்னர், சவூதி அபிவிருத்தி நிதியம், இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகளையும் சந்திக்கும் வாய்ப்பு அமைச்சர் ஹக்கீமுக்கு கிடைத்தது.
சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உயர் அதிகாரி பொறியியலாளர் சதூகி, அமைச்சர் ஹக்கீம் தங்கியிருந்த ரியாத் நகரிலுள்ள அரச விருந்தினர் மாளிகைக்குச் சென்று அவரைச் சந்தித்துள்ளார். அப்பொழுது இடம்பெற்ற உரையாடலில் சவூதிக்கான இலங்கை தூதுவர் ஹுசைன் முஹம்மதும் பங்குபற்றியுள்ளார். அப்பொழுது இலங்கையில் நகர அபிவிருத்தி, நீர் விநியோகம் போன்றவற்றிற்கு உதவி வழங்குவது தொடர்பில் அமைச்சர் விடுத்த வேண்டுகோளையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. பிரஸ்தாப சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதித் தலைவர் முஹம்மத் பஸ்ஸான் உடனும் அமைச்சர் ஹக்கீம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.