நல்ல மனிதர்கள் மௌனமாக இருக்கத்தேவையில்லை. – மாதுலுவாவே சோபித்த தேரர்
(குறிப்பு: 18.1.2015 ராவய பத்திரிகையில் வெளியான மாதுலுவே சோபித்த தேரருடனான நேர்காணலின் தழிலாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. நேர்கண்டவர் : தரிது ...
http://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_129.html
(குறிப்பு: 18.1.2015 ராவய பத்திரிகையில் வெளியான மாதுலுவே சோபித்த தேரருடனான நேர்காணலின் தழிலாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.நேர்கண்டவர் : தரிது உடுவர கெதர
தமிழ் மொழி மூலம் : அபாஸ் மொஹமட் (செய்தி ஆசிரியர் வசந்தம்
எப்.எம்.)
கேள்வி : ராஜபக்ஷ ஆட்சியை தோற்கடிக்க வெற்றிகரமான வேலைத்திட்டத்தை முன்வைத்து முன்நின்று செயற்பட்டு வெற்றிபெற்றுள்ள சந்தர்ப்பத்தில் தற்போதைய நிலையை எவ்வாறு பார்க்கிறீர்கள் ?
பதில் : நாம் சாதாரண சமூகமொன்றை கட்டியெழுப்புதற்காக தேசிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்தோம், இத்திட்டமானது நபர் ஒருவரை வெற்றிபெறச்செய்யவோ தோல்வியடைய செய்யவோ அல்ல. மாறாக நாடு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. அதிலிருந்து நாட்டை மீட்கவே வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம். இவ்வசாதாரண நிலையின் முக்கிய காரணியாக நிறைவேற்று ஜனாதிபதி முறையே காணப்பட்டது. சிறந்த அரசியல் யாப்பை வழங்குமாறு நாம் கடந்த அரசாங்கத்தை வலியுறுத்தினோம். முன்னாள் ஜனாதிபதியும், முன்னைய காலத்தில் இதற்காக போரிட்டவர். இதனால் நாம் அவரது அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகித்தோம். மஹிந்த சிந்தனையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரினோம். எனினும், அவர் இறுதிவரை வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதன் காரணமாகவே நாட்கள் வரையருக்கப்பட்ட வேலைத்திட்டமொன்றிற்காக பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க தீர்மானித்தோம்.
கேள்வி : அந்த வேலைத்திட்டத்தை வெற்றிபெறச்செய்யவா மைதிரிபால சிரிசேன அவர்களை பொது வேட்பாளராக களமிறக்கினீர்கள்?
பதில் : அதை வெற்றிபெறச்செய்ய இறுதிவரை வாதப் பிரதி விவாத கலந்துரையாடல்களில் ஈடுபட்டோம். இறுதி நேரத்தில் மைதிரிபால சிரிசேன அவர்கள் போட்டியிட முன்வந்தார். எவராலும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாத, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆலோசனைகளையே நாம் முன்வைத்தோம். அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், பொது மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடினோம். பல துறைகளை சார்ந்தவர்களது ஆதரவை மைதிரிபால சிரிசேனவுக்கு பெற்றுக்கொடுத்தோம். எமது நாட்டு மக்களுக்கும் இவ்வாறான ஒரு தேவை இருந்ததை நாம் பின்னர் கண்டுகொண்டோம். மக்கள் மிக மகிழ்ச்சியுடன் தமது வாக்குகளை பயன்படுத்தினர். தமிழ், முஸ்லிம் மக்களில் அதிகளவிளானோர் அவருக்கு வாக்களித்தனர். இன ரிதியாக, மத ரீதியாக பிரிந்திருந்த நாட்டை பொது கொள்கையின் கீழ் ஒன்றுபடுத்தினோம். இது தேர்தல் வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியாகும் எனக் கருதுகின்றேன்
கேள்வி : மஹிந்த ராஜபக்ஷ இன வாதத்தை பயன்படுத்தியே ஆட்சியில் இருந்தார். மீண்டும் ஆட்சியை கைப்பற்றவும் அவர் இன வாதத்தையே பயன்படுத்தினர். நீஙகள் இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில் : நாம் ஒவ்வொரு நாளும் அச்சத்துடனும், சந்தேகத்துடனும் இருந்தோம். தாக்குவார்கள், கொலை செய்வார்களென ஒவ்வொருவரும் பீதியில் இருந்தனர். அரசாங்கம் தமிழ் மக்களை புலி என கேவலப்படுத்தியது. இன வாதத்தை தூண்டவே அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டது. எனினும் மக்கள் பொதுகொள்கைக்காக ஒன்றிணைந்தமை விசேட வெற்றியாகும். இதனை உயிரை போன்று பாதுகாக்க வேண்டும். எதிர்கால அரசாங்கத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் கத்தோலிக்கர்களும் அங்கம்வகிக்க வேண்டும். இது எமது நாடு. பொதுத்தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக சிலர் இன வாத பிரச்சாரங்களை இப்;போதே ஆரம்பித்தள்ளனர். இந்த தோல்வி சிங்கள மக்களின் தோல்வி என்கின்றனர்.
வடக்கில் பொலிஸார் மீது தாக்குதல், புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளதென பல வதந்திகளை பரப்புகின்றனர். இன வாதத்தை தூண்டி பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இது மோசமான செயற்பாடாகும். மக்கள் ஏமாறக்கூடாது. தமிழ் மக்களுக்கும் தேவைகள் காணப்படுகின்றன. அவர்களுக்கு உரிய காணிகள் வழங்கப்பட வேண்டும். 30 வருட கால யுத்தம் காரணமாக காடுகளிலும், வெளிநாடுகளிலும் தமிழர்கள் மறைந்து வாழ்ந்தனர்.
அவர்கள் சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட வேண்டும். தமிழர்களும் எமது நாட்டின் பிரஜைகளே. எமக்குள்ள அனைத்து உரிமைகளும் அவர்களுக்கும் உண்டு. எமது மக்களுக்கு இது தொடர்பில் விளக்கமளிக்கப்பட வேண்டும். ஊடகங்களுடாக முடிந்த அளவிற்கு விளக்கமளிக்கவும். இனவாதத்தை தலைதூக்க இடமளிக்கக்கூடாது. வடக்கு மக்களுக்கு மாகாண சபையூடாக சேவை செய்ய இடமளிக்க வேண்டும். நாம் கொழும்பிலிருந்து கட்டுப்படுத்த தேவையில்லை. சாதாரண நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
கேள்வி : நாட்டிற்கு புதிய அரசியல யாப்பு தேவையா?
பதில் : தற்போதைய தருணத்தில் தேவையான சீர்திருத்தங்களை செய்து நாம் முன்செல்ல வேண்டும். பின்னர் புதிய அரசியல் யாப்பை அறிமுகப்படுத்த வேண்டும். மிகவும் நிதானமாக சிந்தித்து அனைத்து இன, மத மற்றும் பொதுமக்களின் ஆலோசனைகளை பெற்று தென்னாபிரிக்க அரசியல் அமைப்பை போன்று புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை ரத்து செய்யப்பட்டு, உரிய நிறுவனங்களுக்கான சுயாதீன தன்மை உருவாக்கப்பட்டு, அரசியலமைப்பு தயாரிக்கப்பட வேண்டும். கட்சி மாற இடமளிக்கக்கூடாது. இவ்வாறான செயற்பாட்டின் மூலமே உறுப்பினர் பதவி ஏல பொருளாக மாறியுள்ளது.
உறுப்பினர்களின் சொத்துக்கள், பொறுப்புக்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும். முழுமையான அதிகாரமுள்ள இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தேவை. சட்டத்திற்கு இடமளிக்கப்பட வேண்டும். சட்டம் தண்டனை வழங்கும். குற்றவாளிகள் விரட்டி விரட்டி பிடிக்கப்பட வேண்டும். மக்கள் சட்டத்திற்கு பயப்பட வேண்டும்.
கேள்வி : ஊழல் துஷ்பிரயோகம் போன்று வீண்விரயமும் தடுப்பட வேண்டுமல்லவா?
பதில் : ஆம், கடந்த தேர்தலுக்கு எத்தனை கோடிகள் விரயமாக்கப்பட்டன? குறித்த பணத்தை பயன்படுத்தி இன்னுமொரு பராக்கிரம சமுத்திரத்தை கட்டியிருக்கலாம். தேர்தல் சட்டம் மீறப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. வேறு நாடுகளில் தேர்தலுக்காக செலவிடக்கூடிய நிதி வரம்பு காணப்படுகிறது. அமைச்சரவை மட்டுப்படுத்த வேண்டும். அனைத்து இடங்களுக்கும் தகுதியானவர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஐ.தே.கட்சி, சுதந்திர கட்சி என்ற வேறுபாடு எம்மிடம் இல்லை. நூம் அனைவரும் இலங்கையர். இலங்கை இயற்கை வளம் மிக்க, பொருளாதாரத்தில் தன்னிறைவுடைய நாடு. கோடிக்கணக்கில் செலவிட்டு கடலை நிரப்ப முயற்சிக்கின்றனர். அதற்கு எவ்வளவு கற்கள் தேவை? சூழல் எவ்வளவு பாதிக்கப்படும்? கல் உடைப்பதால் நிலம் பாதிக்கப்படுகிறது. இதனால் மண்சரிவுகள் போன்ற அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான பாதிப்புகளை சந்தித்து,
கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிட்டு, சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கு பதிலாக நாட்டிலுள்ள குளங்களை மறுசீரமைக்க முடியும். இலங்கையில் 35 ஆயிரம் குளங்கள் காணப்படுகின்றன.
விவசாயம், சுகாதாரம், கல்வி, உணவு போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும். துறைமுகம், விமான நிலையம், விளையாட்டு மைதானங்கள் தேவை. ஆனால் அத்தியாவசியமல்ல. வீதிகளை மூடி கோடிக்கணக்கான ரூபாய்களை செலவிட்டு கார் பந்தயம் தேவையில்லை. தாமரை கோபுரம் எமக்கு தேவையா? நாடு முழுக்க கடல். ஆனால் எவ்வளவு மீன்கள் பிடிக்கப்படுகின்றன? கடந்த காலங்களில் தேவையற்றவைக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளன. இதை புதிய அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும்.
கேள்வி : மஹிந்த ராஜபக்ஷ ஜோதிடம் மீது அதிக நம்பிககை வைத்திருந்தார். கையில் வசிய நூல்களும், பொருளும் வைத்திருப்பார். மத தலைவர் என்ற அடிப்படையில் இதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில் : மஹிந்த இப்போதும் ஜோதிடம், மந்திரம் என்பவற்று பின்னாலேயே செல்கிறார். மந்திரம் மூலம் தேர்தலில் வெற்றிபெற முடியுமென்றார். மஹிந்த ராஜபக்ஷவை ஒருநாளும் தோற்கடிக்க முடியாது. ஜோதிடம், மந்திரம் என்பவற்றை விட மக்கள் சக்தியே பலமானது. அதை தற்போதாவது உணர வேண்டும். தேர்தல் தினத்தை ஜோதிடர்களே தீர்மானித்தனர். இவ்வாறான மிலேச்ச யுகத்தை நோக்கியே நாம் சென்றோம். ஊடகங்களும் இதை ஏற்றுக்கொண்டு செயற்பட்டன. இவ்வாறான மூட நம்பிக்கைகளை போக்க ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும். மனித சிந்தனை மேம்படுத்தப்பட வேண்டும்.
.
கேள்வி : மக்கள் புதிய அரசாங்கத்தின் மீதா? அல்லது அவர்களால் உருவாக்கப்பட்ட மாற்றத்தின் மீதா? நம்பிக்கை வைக்க வேண்டும்?
பதில் : மஹிந்தவுக்கு பதிலாக மைதிரி என்பது அல்ல எமது செயற்பாடு. புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது என்பதற்காக பழையவர்களை வெளியேற்றிவிட்டு, தாம் சார்ந்தவர்களை நியமிக்க முடியாது. பழைய திருடர்களுக்கு பதிலாக புதிய திருடர்களை நியமிக்க முடியாது. இதை விசேடமாக ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன புரிந்துகொள்ள வேண்டும். கட்சிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டும். மக்கள் பழைய பொறுத்தமற்ற முறைக்கே பழகியுள்ளனர். தேர்தல் முடிவடைந்ததும். வேலைவாய்ப்பு கேட்டு எம்மிடம் வருகின்றனர். நீண்ட காலம் தாமதிக்காது புதிய நாடு உருவாக்கப்பட வேண்டும். இந்த மாற்றத்தை நம்பியே மக்கள் வாக்களித்தனர். அரசியல் கட்சிகளை விட பாரிய சக்திகள் கொள்கைக்காக ஒன்றிணைந்தன. எமது கொள்கை வெற்றிபெறும வரை நாம் அவதானத்துடன் இருப்போம். இவ்வாறான நேரத்தில் மௌனமாக இருக்கக்கூடாது. நல்ல மனிதர்களும் மௌனமாக இருக்க தேவையில்லை.


Sri Lanka Rupee Exchange Rate