சிரிய சமாதானத் திட்டத்தை விரைவில் ஐ.நா இடம் அளிக்கத் தயார் நிலையில் ஈரான்!
கடந்த சில வருடங்களாக ISIS இயக்கத்தின் ஆதிக்கம் பரவக் காரணமாகியும், பாரியளவில் மனித அவலங்கள் அரங்கேற வழி சமைத்தவாறும் சிரியாவில் நடந்...
http://kandyskynews.blogspot.com/2015/08/blog-post_92.html
கடந்த சில வருடங்களாக ISIS இயக்கத்தின் ஆதிக்கம் பரவக் காரணமாகியும், பாரியளவில் மனித அவலங்கள் அரங்கேற வழி சமைத்தவாறும் சிரியாவில் நடந்து கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரினை முடிவுக்குக் கொண்டு வரக் கூடிய சமாதானத் திட்டத்தை விரைவில் ஐ.நா இடம் ஈரான் சமர்ப்பிக்கவுள்ளது.
இத்தகவலை ஈரானின் பிரதி வெளியுறவு அமைச்சரான ஹொஸ்ஸெயின் அமீர் அப்டொல்லாஹியான் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் ஈரான் அரசு தனது ஆதரவை அந்நாட்டு அதிபர் பஷார் அல் அசாத்தின் அரசுக்கே இதுவரை அளித்து வந்துள்ளது. இந்நிலையில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான உயிர்களைக் குடித்து சிரியாவில் தொடர்ந்து வரும் இந்த உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் இவ்வாரம் சிரிய மற்றும் ரஷ்ய அதிகாரிகளுடன் ஈரான் கலந்து ஆலோசிக்கவும் உள்ளது. ஈரானிய சிரிய அரச நிர்வாகங்களுக்கு இடையே மேற்கொள்ளப் படவுள்ள இந்தப் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் உடனே சிரிய சமாதானத் திட்டம் ஐ.நா பாதுகாப்புச் செயலாளர் பான் கீ மூனிடம் கையளிக்கப் படும் எனவும் அப்டொல்லாஹியான் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் எட்டப் பட்ட அணு ஒப்பந்தம் காரணமாக ஈரான் மீதான சர்வதேசத்தின் பொருளாதாரத் தடைகள் விரைவில் நீக்கப் பட்டு இராஜதந்திர ரீதியாக அதன் செல்வாக்கு அதிகமாகவுள்ள சூழ்நிலையில் சிரிய விவகாரத்தில் ஈரானின் தலையீடு அதிகரிப்பதை அதன் நட்பு வளைகுடா அரபு நாடுகளும் பல மேற்குலக சக்திகளும் எச்சரிக்கையாகவே பார்க்கின்றன. இந்நிலையில் கடந்த வருடம் ஐ.நா இடம் ஈரான் கையளித்த சமாதானத் திட்டம் போன்றே இம்முறை கையளிக்கப் படவுள்ள திட்டத்திலும் 4 அம்சங்கள் அடங்கியுள்ளன. அவை உடனடி யுத்த நிறுத்தம், தேசிய ஒருங்கிணைந்த அரசின் தாபனம், சிறுபான்மையினருக்கான சட்ட ரீதியான பாதுகாப்பு மற்றும் சுதந்திரக் கண்காணிப்பின் கீழான தேர்தல் என்பவையே ஆகும். ஏற்கனவே துருக்கி மற்றும் சவுதி அரேபியா அடங்கலாக மேற்குலக சக்திகள் சிரியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற் கொண்டிருந்தன. சிரிய விவகாரத்தில் அனைத்துத் தரப்புக்களுமே ISIS இனை அச்சுறுத்தலாகப் பார்க்கின்ற போதும் அமெரிக்க மேற்குலக நாடுகள் சிரிய சிவில் யுத்தத்தை நிறுத்துவதில் அதிபர் அசாத் பதவி நீக்கம் செய்யப் படுவதும் அவசியம் என எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது |