யேமெனில் பாரிய சிறை தகர்ப்பு!:அல்கொய்தா போராளிகள் உட்பட 1200 பேர் தப்பியோட்டம்
யேமெனில் ஷியா ஹௌத்தி முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுக்கும் அரச ஆதரவுப் படைகளுக்கும் இடையே தரை வழிப்போர் தீவிரமடைந்துள்ள நிலையில் மத்திய யேமெனின்...

யேமெனில் ஷியா ஹௌத்தி முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுக்கும் அரச ஆதரவுப் படைகளுக்கும் இடையே தரை வழிப்போர் தீவிரமடைந்துள்ள நிலையில் மத்திய யேமெனின் தாய்ஸ் நகரத்திலுள்ள பாரிய சிறை தகர்க்கப் பட்டுள்ளது.
இதில் அல்கொய்தா போராளிகள் மற்றும் பல தீவிரவாதிகள் உட்பட 1000 இற்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.
யேமெனில் இதுவரை நிகழ்ந்த சிறைத் தகர்ப்புக்களிலேயே மிக அதிகளவு கைதிகள் தப்பி ஓடியது இதுவே முதன் முறையாகும். இந்த சிறைத் தகர்ப்பை நேரில் பார்த்தவர்களின் கூற்றுப் படி நேற்றைய தினம் குறித்த பகுதியில் ஹௌத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் அரச சார்புப் படைக்கும் கடும் மோதல் நிகழ்ந்ததாகவும் இதில் ஹௌத்திக்கள் பின்வாங்க முன்னரே சிறைக் கதவுகள் கனரக ஆயுதங்களால் உடைக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப் படுகின்றது. ஹௌத்திக்களால் கட்டுப் படுத்தப் பட்டு வந்த இப்பகுதியில் இந்த சிறைத் தகர்ப்புக்கு அரச சார்புப் படைகளே காரணம் எனக் கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டுள்ள போதும் அவர்கள் இதனை மறுத்துள்ளனர். யேமெனின் 3 ஆவது மிகப் பெரிய நகரான தென் டாயிஸிலுள்ள ஹடைக் அல்சலே இனை அரச சார்புப் படைகள் கைப்பற்றி சில மணி நேரங்களுக்குள் இந்தப் பாரிய சிறைத் தகர்ப்பு நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் எகிப்தின் சினாய் தீபகற்பத்தில் உள்ள 5 இராணுவ சோதனைச் சாவடிகள் மீது இன்று புதன்கிழமை ISIS போராளிகள் தொடுத்த தாக்குதலில் 20 எகிப்து இராணுவ வீரர்கள் கொல்லப் பட்டும் 30 பேர் காயமடைந்தும் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சுமார் 70 ISIS போராளிகள் இணைந்து மேற்கொண்ட இத்தாக்குதலில் 22 ISIS தீவிரவாதிகளும் கொல்லப் பட்டதாக எகிப்து இராணுவம் தெரிவித்துள்ளது. டுவிட்டரில் குறித்த தாக்குதலுக்கு ISIS போராளி அமைப்புப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.