போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த உள்ளக விசாரணையின் செயற்பாடுகள் எப்போது?
இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகளுக்குரிய விரிவான பதிலை அரசாங்கம் மிக விரைவில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவுக்கு வழங்கும். பிரச்சினைகளுக்...


மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் ஐ.நா.வின் போர்க்குற்றச்சாட்டுக்கள் உரிய முறையில் அணுகப்படாமையின் காரணமாக பெரும் நெருக்கடிகளை நாடு சந்திக்க வேண்டியநிலை ஏற்பட்டது. சர்வதேசம் எம்மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் நிலை ஏற்பட்டது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமரின் இந்தக் கருத்தானது ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 29வது கூட்டத்தொடர் இடம்பெற்று வரும் நிலையில் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பலியிடப்பட்டிருந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனர்களாக்கப்பட்டனர். பெருமளவானோர் காணாமல்போயினர்.
யுத்தம் இடம்பெற்றபோது பெரும் அழிவுகள் இடம்பெறுவதாக தெரிவித்து யுத்தத்தை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன. பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அன்றைய வெளி விவகார அமைச்சர்கள் இலங்கைக்கு விஜயம் செய்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து யுத்தத்தை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால், இந்த கோரிக்கைகள் எதனையும் கருத்திலெடுக்காத அன்றைய அரசாங்கம் தமிழ் மக்களை பேரழிவுக்குள்ளாக்கி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்திருந்தது. அந்த யுத்தத்தின் போது சரணடைந்த போராளிகளில் பெருமளவானோர் காணாமல் போயுள்ளதாகவும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுகின்றன.
யுத்தத்தின் போது பொதுமக்கள் தங்கியிருந்த இலக்குகள் மீதும் வைத்தியசாலைகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன.
இவ்வாறு இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அரசாங்கம் பொறுப்புக் கூறும் செயற்பாட்டினை மேற்கொள்ள வேண்டுமெனவும் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து சர்வதேச நாடுகள் வலியுறுத்தின.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனும் அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்தியிருந்தார்.
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் முன்னைய அரசாங்கம் உரிய விசாரணைகளை நடத்தாததையடுத்தே சர்வதேச சமூகம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானங்களை கொண்டுவரும் நிலை ஏற்பட்டிருந்தது.
சர்வதேச அழுத்தத்தின் காரணமாக மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றினை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
இந்த ஆணைக்குழு முன் சாட்சியமளித்த மக்கள் தமது உறவுகளுக்கு நேர்ந்த அவலங்களை எடுத்துக் கூறினர். இராணுவத்தினரிடம் சரணடைந்த தமது உறவுகள் மீளத் திரும்பாமை குறித்தும் காணாமல் போனமை தொடர்பாகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தமை குறித்தும் தமது சாட்சியங்கள் மூலமாக மக்கள் தெரியப்படுத்தியிருந்தனர்.
இந்த ஆணைக்குழு முன் சாட்சியமளித்த மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இறுதி யுத்தத்தின் போது ஒரு லட்சம் மக்கள் அளவில் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவலையும் வெளியிட்டிருந்தார். இந்த ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி அறிக்கையொன்றையும் சமர்ப்பித்திருந்தது.
இதில் யுத்தத்தில் உயிரிழந்த மக்கள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படவேண்டுமென்றும் காணாமல் போனோர் தொடர்பில் விசேட ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் உள்ளக விசாரணை இடம்பெற வேண்டும் என்பது உட்பட பல பரிந்துரைகளை ஆணைக்குழு செய்திருந்தது.
ஆணைக்குழு பரிந்துரைகள் செய்த போதிலும் அதனைக்கூட நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்வரவில்லை. இந்த விடயத்தில்கூட இழுத்தடிப்பு போக்குகளே கையாளப்பட்டு வந்தன.
இத்தகைய இழுபறிநிலையையடுத்து 2012ம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டுவந்தது. இந்தப் பிரேரணையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தி பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கம் அக்கறை செலுத்தவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2013ம், 2014ம் ஆண்டுகளிலும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பிரேரணைகள் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டன. 2014ம் ஆண்டு சர்வதேச விசாரணைக்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து இலங்கைக்கு எதிரான விசாரணையினை ஐ.நா. மனித உரிமை ஆ.ைணக்குழு மேற்கொண்டது.
இந்த சர்வதேச விசாரணையின் அறிக்கை கடந்த மார்ச் மாதம் அமர்வில் வெளியிடப்படுவதற்கு இருந்த போதிலும் இலங்கையில் புதிய ஆட்சி மலர்ந்ததையடுத்து அந்த விசாரணை அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கமானது ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைனுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. இலங்கையில் நடைபெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து உள்ளகப் பொறிமுறை ஒன்றை ஸ்தாபித்து விசாரணைகளை நடத்துவதாக அரசாங்கம் ஐ.நா.வுக்கு உறுதி வழங்கியது.
புதிய அரசாங்கத்துக்கு சந்தர்ப்பமொன்றினை வழங்கும் வகையில் விசாரணை அறிக்கையினை செப்டெம்பர் மாதம் வரையில் பிற்போடுவதற்கு ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு இணங்கியிருந்தது. இந்த நிலையிலேயே கடந்த 15ம் திகதி ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 29வது அமர்வு ஆரம்பமானது.
இந்த ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறை எதிர்வரும் செப்டெம்பர் கூட்டத்தொடருக்கு முன்னர் உருவாக்கப்பட வேண்டும். பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான நம்பகமான பொறிமுறைகளை உருவாக்கும் போது வெளிப்படைத் தன்மை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கியதாக அது இருக்க வேண்டும். அரசியல் கட்சிகள், சிவில் சமூகத்துடன் பரவலான ஆலோசனைகளை நடத்தவும் பாதிக்கப்பட்ட அனைவரதும் அவர்களினது குடும்பங்களினதும் முழுமையான ஆதரவை உறுதிப்படுத்தவும் இந்த செயல்முறையின் உரிமையை உறுதி செய்வதற்கும் இலங்கை அரசாங்கத்தை நாம் ஊக்குவிக்கின்றோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே பிரதமர் இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகளுக்குரிய விரிவான பதிலை அரசு மிக விரைவில் ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவுக்கு வழங்கும் என்று தெரிவித்திருக்கின்றார்.
உண்மையிலேயே புதிய அரசாங்கத்துக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கும் வகையிலேயே ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு தனது விசாரணை அறிக்கையினை பிற்போட்டிருக்கின்றது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வுக்கு முன்னர் புதிய அரசாங்கமானது தனது பொறுப்புக்கூறும் செயன்முறையை வெளிக்காட்டவுள்ளது.
ஆனால் இதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளனவா என்பது தொடர்பில் சந்தேகமான நிலையே காணப்படுகின்றது.
யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அதற்கான நடவடிக்கைகள் இன்னமும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
அண்மையில் கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர யுத்தக்குற்றம் தொடர்பாக நிறுவப்பட்டுள்ள உள்ளகப் பொறிமுறையின் கீழான அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
தற்போது பிரதமரும் அதே கருத்தினை தெரிவித்திருக்கின்றார்.
ஆனாலும் உள்ளகப் பொறிமுறை ஆரம்பிக்கப்பட்டு விசாரணைகள் இன்னமும் நடத்தப்பட்டதாக தெரியவில்லை.
இவ்வாறான நிலையில் எப்படி அறிக்கையினை அரசாங்கம் வழங்கப் போகின்றது என்ற கேள்வி தற்போது எழுகின்றது.
இன்னமும் 3 மாதங்களே ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் கூட்டத்துக்கு இருக்கின்றது. அதற்குள் உள்ளகப் பொறிமுறை ஊடாக நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய முடியுமா என்பது கேள்விக்குரியதொன்றாகவே இருக்கின்றது.